

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்த பல்கலை. மானியக்குழு எனப்படும் யூ.ஜி.சி. சார்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், எம்.பில்., பிஎச்.டி. படிக்கும் மாற்றுத் திறனாளிகள் 200 பேருக்கு ஃபெல்லோஷிப் வழங்குகிறார்கள். முதல் 2 ஆண்டுகள் ஜெ.ஆர்.எப். ஃபெல்லோஷிப்பாக மாதம் ரூ.16 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எஸ்.ஆர்.எப். ஃபெல்லோஷிப்பாக மாதம் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும்.
இதுதவிர, படிப்பு வகையில் எதிர்பாராமல் ஏற்படும் செலவினங்களுக்காகக் கலைப் படிப்புகளுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரமும் (வருடத்துக்கு) அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.20,500-மும் இதேபோல், அறிவியல், பொறியியல்,தொழில்நுட்பப் படிப்புகளுக்கு முறையே ரூ.12 ஆயிரமும், ரூ.25 ஆயிரமும் பெறலாம். மேலும், உதவியாளருக்கான உதவித்தொகையாக மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் தனியாகக் கிடைக்கும்.
2014-15 ஆம் கல்வி ஆண்டில் இந்த உதவித்தொகை பெறுவதற்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று யூஜிசி அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளியாகப் பிறந்துவிட்டோமே எனக் கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு இத்தகைய கல்வி உதவித் தொகைகளைப் பெற்றுப் படித்து முன்னேற வேண்டிய காலம் இது.