

மேற்கு பசிபிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, கடலின் ஆழத்துக்குள் சென்று கும்மிருட்டான கடல் தரையில் நின்றது. ஆராய்ச்சியாளர் அருணா விளக்குகளை இயக்கி, “கடல்களிலேயே மிக ஆழமான பகுதிக்கு வந்திருக்கோம்” என்று அறிவித்தார்.
“எவ்வளவு ஆழம்?” என்றான் செந்தில்.
“இந்தக் குறிப்பிட்ட பகுதியின் ஆழம் 10,935 மீட்டர். அதாவது கடல்மட்டத்திலிருந்து 11 கிலோமீட்டர் ஆழம்” என்றார் அருணா. மூவரும் திகைத்துவிட்டனர்.
“இது Challenger Deep. கடலின் மிக ஆழமான பகுதி. மரியானா ட்ரெஞ்ச் (Mariana Trench) என்கிற குழிவான பகுதியின் அங்கம்தான் இந்த இடம். இது எவ்வளவு ஆழமா இருக்கும்னா, நிலத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்டை இதற்குள் போட்டால்கூட, கடல் மட்டத்துக்கு வர 2 கிலோமீட்டர் இடைவெளி இருக்கும்” என்றார்.
“அட, கற்பனைகூட செஞ்சு பார்க்க முடியல. ஆழம் அதிகமா இருப்பதால் இங்க சூழலும் மாறுபட்டதா இருக்குமா?” என்றாள் ரக் ஷா.
“ஆமாம். இங்க அழுத்தம் மிக அதிகம். இங்குள்ள அழுத்தம் கடல்மட்டத்தைப் போல 1,071 மடங்கு அதிகம். அதாவது, ஒருவர் தலையில் 50 ஜம்போ ஜெட் விமானங்களை வைத்தால் எவ்வளவு அழுத்தம் இருக்குமோ அவ்வளவு அழுத்தம் இருக்கும்! இங்கே சூரிய ஒளியே கிடையாது. எப்போதும் கும்மிருட்டுதான். நீரின் வெப்பநிலையும் ரொம்ப குறைவு. நான்கு டிகிரி செல்சியஸ் வரைதான் இருக்கும்” என்று அந்தச் சூழலின் பண்புகளை அடுக்கினார் அருணா.
“சரிதான். எதுவுமே வாழ முடியாத பாலைவனம் போலத்தான் இதுவும்” என்றான் செந்தில்.
சிரித்துக்கொண்டே கைகாட்டினார் அருணா. அங்கே பவள உயிரியைப் போன்ற ஓர் உயிரினம் சிறிய கால்பந்து அளவில் தெரிந்தது!
“இங்கேயும் உயிரிகள் இருக்கா?” என்று ஆச்சரியப்பட்டாள் ரோசி.
“ஆமாம். இது ஸெனோபியோபோர் (Xenophyophore). ஓடுள்ள உயிரி. இது 10 செ.மீ. முதல் 20 செ.மீ. விட்டம் வரை வளரும்” என்றபடி இன்னோர் இடத்தைக் காட்டினார் அருணா. அங்கே பெரிய இறால் போன்ற உயிரி ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது.
“இது ஆம்பிபாட் (Amphipod). இவை நண்டு, இறால் குடும்பத்தைச் சேர்ந்த கடல் உயிரிகள். இவை கடல்நீரில் உள்ள கால்சியம் கார்பனேட்டைப் பிரிச்சு தங்களுடைய ஓட்டை உருவாக்கும். ஆனா, இந்த அழுத்தமான சூழலில் அது சாத்தியமில்லை, உருவாகும் ஓடு நிலையா இருக்காது. அப்படின்னா இந்த விலங்குகள் எப்படிச் சமாளிக்குதுன்னு விஞ்ஞானிகளுக்கு குழப்பம். 2019ஆம் ஆண்டில்தான் அதற்கான விடையைக் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்தத் தரைப்பகுதியில் இருக்கும் மண்ணில் அலுமினியம் அதிகம். அந்த அலுமினியத்தை உறிஞ்சும் ஆம்பிபாடுகள், தங்களுடைய ஓடுக்கு வெளியில் அதை ஒரு படலம் மாதிரி உருவாக்குது. இதன்மூலம் ஓடு கரையாமல் பாதுகாக்கப்படுது. கிட்டத்தட்ட ஒரு போர்க்கவசம் மாதிரி இந்த அலுமினியம் செயல்படுது!” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.
“அட்டகாசம்” என்றாள் ரக் ஷா.
“அது கடல் அட்டை மாதிரி இருக்கே” என்று கேட்டாள் ரோசி.
“ஆமா, இங்கே கடல் அட்டைகளும் உண்டு. நத்தைமீன் என்ற ஒரு மீன், எட்டு கி.மீ. ஆழம் உள்ள கடற்பகுதியிலிருந்து இங்கே அப்பப்போ வந்து வேட்டையாடும்” என்றார் அருணா.
“ஆமா, இங்க இருக்கும் விலங்குகள் என்ன சாப்பிடும்?” என்று கேட்டான் செந்தில்.
“சுற்றியுள்ள கடல்நீர், கடல் தரையிலிருந்து கிடைக்கும் உணவுத் துணுக்குகள்தாம் இவற்றுக்கு உணவு. மற்றபடி இந்த விலங்குகளைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் இன்னும் சரியா தெரியல. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்காங்க” என்று முடித்தார் அருணா.
“இந்தச் சூழலில்கூட விலங்குகள் வாழுதுனா அதிசயம்தான்” என்று செந்தில் ஆச்சரியப்பட, ஆழ்கடலில் இருந்து மெதுவாகப் புறப்பட்டது நாட்டிலஸ் நீர்மூழ்கி.
(அதிசயங்களைக் காண்போம்!)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு: nans.mythila@gmail.com