Last Updated : 04 Nov, 2016 10:20 AM

 

Published : 04 Nov 2016 10:20 AM
Last Updated : 04 Nov 2016 10:20 AM

மாயப்பெட்டி: பயமுறுத்தும் சோபா

தீபாவளியில் சோபா விற்பனை அதிகரித்திருக்கிறது என்று யாராவது சொன்னால் நம்பலாம். லட்சுமி ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து (ஜீ), விஜி (புதுயுகம்), குஷ்பு (சன்) ஆகியோரும் சோபாக்களைக் கொண்ட செட்களில் பிற குடும்பத்தின் பிரச்சினைகளை துவைத்துக் காயப்போடுகிறார்கள். போதாக்குறைக்கு எல்லாச் சானல்களிலுமே புதிதாக வெளியாகும் படக்குழுவினர் முறை வைத்துக் கொண்டு சோபாக்களில் உட்கார்ந்து தங்கள் படங்களின் தனித்துவத்தை சிலாகித்துக் கொள்கிறார்கள். மறக்காமல் “இருந்தாலும் இது கமர்ஷியல் படம்தான். குடும்பத்தோடு பார்க்கலாம்” என்கிறார்கள். வரவர வீட்டில்கூட சோபாவில் உட்கார பயமாக இருக்கிறது.

இங்கும் தேவைதான்!

பொதிகையில் ஓவியர் ஆ.பாலா என்பவரின் நேர்முகம். ஓவியத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை அந்தத் துறையில் ஊக்குவிக்க ஓர் ஆலோசனையையும் பகிர்ந்து கொண்டார். “ நியூயார்க்கில் டிஸ்கவரி என்ற ஓவியக்கூடம் இருக்கிறது. தினமும் ஒரு பிரபல ஓவியர் அங்கு வந்து ஓவியம் வரைவதில் இருக்கும் பல்வேறு முறைகளை அங்கு வரும் சிறுவர்களுக்கு விளக்குகிறார். ஆர்வம் தூண்டப்படுகிறது. இதுபோன்ற inter-active ஓவிய அருங்காட்சியகங்கள் இங்கும் தேவை” என்றார். ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.

தெரியாத மகத்துவம்

டாக்டர் கருணாகரன் என்ற அக்குபங்சர் மருத்துவர் பொதிகை சேனலில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். “எனக்கு மூக்கெலும்பு வளைந்திருக்கிறது. வாசனையே தெரியவில்லை’’ என்றவரிடம் சில பல கேள்விகளைக் கேட்டுவிட்டு “உங்கள் வயிற்றுப் போக்குப் பிரச்சினையை சரிசெய்துவிட்டால் மூக்கடைப்பும், எலும்பு வளைவும் சரியாகி விடும்” என்று கூற, ஊசி மருத்துவத்தின் உயர்வறியாத பேதையாக இருப்பதாலோ என்னவோ, ஆட்டோவின் பின்புறம் பார்க்கும் கண்ணாடியைத் திருப்பினால் ஸ்டார்ட் ஆகாமல் தகராறு செய்யும் ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிடும் என்று அஜீத் கூறுவதை நம்பும் கருணாஸ் போலத்தான் உணர முடிந்தது.

புரியாத மொழிபெயர்ப்பு

பாலிமர் நியூஸ் சானலில் காத்ரீனா கைஃப் நடித்து வெளியாகியிருக்கும் ஒரு திரைப்படத்துக்கான விளம்பர விழா ஒளிபரப்பானது. அதில் தனது அடுத்த படத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத ஆடைகளையே அணியப் போவதாக காத்ரீனா அறிவித்ததாகக் கூறியது பின்னணிக் குரல். ஒருவேளைச் சேலையை இழுத்துப் போர்த்தியபடியே தோன்றப் போகிறாரா? கனவுக் காட்சிகளிலுமா? பிறகுதான் உணர முடிந்தது, மறுசுழற்சி (recycling) செய்த ஆடைகளை அணியப்போகிறார் என்பதை. மொழி பெயர்ப்பு புரிகிற மாதிரி இருந்தால் நல்லது இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x