Last Updated : 19 Nov, 2016 12:27 PM

 

Published : 19 Nov 2016 12:27 PM
Last Updated : 19 Nov 2016 12:27 PM

ஆயுர்வேதத்தால் விரட்டலாம் முதுகுவலியை!

கணினி முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இன்று அதிகம். அதேபோல இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர் களும் அதிகம். இந்த இரண்டையும் அதிகமாகப் பயன்படுத்துவோர் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி. இவை தவிர, இடுப்பு எலும்பு தேய்மானத்தால் வரும் இடுப்பு வலி, ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டுவலிப் பிரச்சினைகளை முதியவர்கள் அதிகம் எதிர்கொள்கிறார்கள்.

மேற்கண்ட வலிகளால் அவதிப்படுபவர்கள் படும் சிரமம் சொல்லி மாளாது. இந்த வலிகளுக்கு முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளாவிட்டால், இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போடும் அளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். இந்தப் பாதிப்பு உள்ள பலரும் மரபு மருத்துவமான ஆயுர்வேதச் சிகிச்சையை நாடிவருகிறார்கள்.

இந்த வலிகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்திலும் தரமான சிகிச்சைகள் இருப்பதாகச் சொல்கிறார் சென்னையில் உள்ள சதாயுஷ் ஆயுர்வேதச் சிகிச்சை மைய மருத்துவரும், மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஓய்வுபெற்ற துணை இயக்குநருமான கே.கே.சண்முகதாசன்.

7 முதல் 14 நாட்கள்

“மூட்டு வலி, கழுத்து வலி, முதுகு வலியால் இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம். வாகனத்தை மேடு, பள்ளத்தில் ஓட்டி செல்லும்போது முதுகுத் தண்டுவடத்தில் உள்ள தசைகள் எலும்புடன் உரசி இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதேபோலப் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு பக்கமாகக் கை, கால், முகம் செயலிழந்து சிரமப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளுக்கு ‘பஞ்சகர்மா’ சிகிச்சைகள் உண்டு. இதில் நஸ்யம், வஸ்தி, அப்யங்கம், இலை கிழி, நவரக் கிழி, பொடிக் கிழி போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன” என்கிறார் சண்முகதாசன்.

நஸ்யம் என்பது மூக்கு வழியாக மருந்தைச் செலுத்தும் சிகிச்சை முறை. முகம், இதயப் பகுதிகளில் எண்ணெயைத் தேய்த்து, மூக்கு வழியாக இரண்டு சொட்டு மருந்து இடப்படும். இந்த மருந்தை உறிஞ்சும்போது நல்ல தீர்வு கிடைக்கும். இதை 7 நாட்கள் முதல் 14 நாட்கள்வரை சிகிச்சையாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக மைக்ரேன், தலைவலி, கழுத்து வலி, முகவாதம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் சிகிச்சை முறை இது என்கிறார் மருத்துவர்.

ரத்தவோட்டம் சீரடையும்

“நஸ்யம் நல்லதொரு சிகிச்சை முறை. இது சைனஸ் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும். இதேபோல வஸ்தி எனப்படும் சிகிச்சையும் உள்ளது. உடல் முழுவதும் தைலம் (அப்யங்கம்) தேய்த்து, ஒன்பது வகையான இலைகளில் (இலைக்கிழி) பூண்டு, சதகுப்பை, எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக்கி உடலில் ஒத்தி எடுக்கும் சிகிச்சை உண்டு. இது சயாடிக்கா, கழுத்து வலி, பக்கவாதம், முதுகு வலிக்கு ஏற்ற சிகிச்சை முறை.

ஒரு இடத்தில் ரத்தம் சரிவரப் பாயவில்லை என்றால்தான் வலி ஏற்படுகிறது. இந்தச் சிகிச்சை முறைகள் எல்லாமே ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்திச் செம்மையாக்கும் பணியைச் செய்யும்” என்கிறார் சண்முகதாசன்.

வயிற்றுச் சுத்தம்

பொதுவாக இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி, பக்கவாதம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் பெரும் சிக்கலாக இருப்பதுண்டு. அவர்களுக்கு எனிமா அளிக்கப்பட்ட பிறகே சிகிச்சை தொடங்கப்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சினை வலிகளுக்குக் காரணமாக இருப்பதால், இந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர நிருஹா வஸ்தி (கஷாயம், தைலம், தேன், சதகுப்பை, இந்துப்பு கலந்த சிகிச்சை) அனுவாசனா வஸ்தி, உத்ர வஸ்தி, பிழிச்சல் எனப் பல சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறை என்றாலே, மெதுவாகக் குணமாகும் என்று சொல்லப்படுவதுண்டு. மேலும் பத்திய முறைகளையும் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்வார்கள். ஆனால், இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி ஆகிய பாதிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) சிகிச்சை போதுமானது.

விரைந்து வந்தால் குணம்

“முதுகு வலி, இடுப்பு வலி பிரச்சினைகளைக் குணப்படுத்துவது என்பது வயது, நோயின் தீவிரத்தைப் பொறுத்தே உள்ளது. 7, 14, 21, 28 நாட்கள் என்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படும். சிலருக்கு ஒரு மண்டலம் ஆகும். சிலர் நடந்து வரும்போது கழுகைப் போலக் கைகளை விரித்துக்கொண்டு தாங்கி நடந்துவருவார்கள். இவர்கள் ‘சயாடிக்கா’என்ற பாதிப்பு உள்ளவர்கள். பொதுவாக இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் அறுவை சிகிச்சைவரை சென்றுவிட்டு, ஆயுர்வேத சிகிச்சைகளுக்குத் தாமதமாகத்தான் வருவார்கள். அப்படித் தாமதமாக வரும்போதுதான் நலமடையவும் தாமதமாகிறது.

கை, கால் செயலிழந்து ஒரு வருடத்துக்குள் ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்தால் சரி செய்துவிடலாம். அதைத் தாண்டிச் செல்லும்போது சிகிச்சை அளிப்பதும் கஷ்டமாகிறது. ஆயுர்வேதத்தில் பத்திய முறை கடைபிடிப்பது மருந்துக்காக அல்ல; நோய்க்காகத்தான்” என்கிறார் சண்முகதாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x