

இனம், நிறம், மதம், செல்வம் என இவ்வுலகில் மனிதர்களுக்குக் கிடையில் எத்தனையோ வேறு பாடுகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாருக்கும் இருப்பது 24 மணி நேரம் மட்டுமே.
அதில் கடந்து போகும் ஒரு நொடிகூடத் திரும்பக் கிடைக்காது. முக்கியமாக நேரத்தை யாராலும் சேமித்து வைக்க முடியாது. அதனால்தான் புனித விவிலியம் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தும்படி சொல்கிறது.
பிலிப்பியர் புத்தகத்தின் முதல் இயலில் உள்ள பத்தாவது வசனம் ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று சொல்கிறது.
அதாவது நாம் செய்ய வேண்டிய வேலைகளில் எது முக்கியமானது, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது.
அதேபோல், பிரசங்கி புத்தகத்தின் 10வது இயலின் 10வது வசனம்: “மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலை செய்வது மிகக் கடினமாயிருக்கும்.
ஞானமே வெற்றிக்கு வழி” என்கிறது. இந்த வசனம் சொல்ல வருவது இதைத்தான். குளிர்காலத்தைச் சமாளிக்க நீங்கள் காய்ந்த மரங்களை வெட்டி விறகு சேர்க்க விரும்புவீர்கள் என்றால், கோடரியை முன்னதாகக் கூர் தீட்டி வைப்பதன் மூலம் காய்ந்த மரத்தை வெட்டி விறகாக்கும் வேலையை எளிதாக்கிவிடும் அல்லவா? அப்படிச் செய்வதன் மூலம் நேரம் மட்டுமல்ல; சக்தி வீணாவதையும் தடுத்துவிடலாம்.
“ஈரப்பதமுள்ள காற்று வீசும்வரை காத்துக்கொண்டே இருப்போர், விதை விதைப்பதில்லை; வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அறுவடை செய்வதில்லை” என்கிற பிரசங்கி புத்தகத்தின் மற்றொரு முக்கியமான வசனத்தை (11:4) கவனியுங்கள்.
கிணறு நிறைய நீர் இருக்கும்போது, அதைப் பொருட்படுத்தாமல் பருவநிலை வரும்வரை காத்திருப்போம் என்று விவசாயி, விதைக்கத் தயங்கினால், உரிய பருவம் வரும்போது நாற்று தயாராக இருக்காது. அப்படித் தயங்கும் விவசாயிக்கு அறுவடை என்பது வெறும் கனவு என்று சொல்கிறது.
ஆக, தயங்குவதும் தள்ளிப்போடுவதும் நேரத்தின் மதிப்பை அறியாதவர்களின் குணம். அவர்கள் வறுமையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது.
“காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட, மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்” என்று பிரசங்கிப் புத்தகத்தின் 4வது இயலில் உள்ள 6வது வசனம் சொல்கிறது. அதாவது, வேலையே கதியென்று இருப்பவர்கள், அவர்களுடைய கடின உழைப்பின் பலன்களை அனுபவிப்பதே இல்லை.
காரணம், வேறு எதையும் செய்வதற்கு அவர்களிடம் நேரமும் இருப்பதில்லை, சக்தியும் இருப்பதில்லை. அதனால், உழைப்புக்காக ஒதுக்கும் நேரம், குடும்பத்துக்காக ஒதுக்கும் நேரம் இரண்டிலும் சமநிலை தேவை என்பதைத்தான் இந்த வசனம் எடுத்துக்காட்டுகிறது. நேரம் என்பது வாழ்க்கையின் ஆதாரம். அதன் மதிப்பை உணர்ந்த மனிதர்கள் அதனை ஒருபோதும் வீணாகக் கடக்க விடுவதில்லை.
தொகுப்பு: ஜெயந்தன்