வேலை வேண்டுமா? - மத்திய அரசுப் பணியில் ஜூனியர் இன்ஜினீயர்

வேலை வேண்டுமா? - மத்திய அரசுப் பணியில் ஜூனியர் இன்ஜினீயர்
Updated on
1 min read

மத்திய அரசின் குரூப்-ஏ அதிகாரிகள் யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே போல், மத்திய அரசின் சார்நிலைப் பணியாளர்களான குரூப்-பி அதிகாரிகளும், குரூப்-சி ஊழியர்களும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் என அழைக்கப்படும் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றில் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களும் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய பொறியியல் பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் எத்தனை என்பது அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், ஏறத்தாழ 1,000 காலிப் பணியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படைத் தகுதி

இளநிலைப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கச் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப் பிரிவில் டிப்ளமா அல்லது பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரையில், பணியின் தன்மைக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

தேர்வுக்குத் தயாராகலாமா?

தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில், பொது விழிப்புத் திறன், ரீசனிங், பொது அறிவு மற்றும் பொறியியல் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த நிலை தேர்வான விரிவாக விடையளிக்கும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் பொதுப் பொறியியல், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வான ஆன்லைன் எழுத்துத் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. உரிய கல்வித்தகுதியும், வயது தகுதியும் உடையவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ssconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம், துறைகள் வாரியான பணியிடங்கள், ஒவ்வொரு பணிக்கும் உரிய கல்வித் தகுதி முதலான விவரங்களைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.ssc.nic.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in