பெண்கள் 360 | பிரதமர் என்றால் நடனமாடக் கூடாதா?

பெண்கள் 360 | பிரதமர் என்றால் நடனமாடக் கூடாதா?
Updated on
2 min read

பின்லாந்து பிரதமராக 34 வயது சன்னா மரின் 2019இல் பொறுப்பேற்றபோது உலகின் மிக இள வயது பிரதமர் என்று கொண்டாடப்பட்டார். கோவிட் பெருந்தொற்றை அவர் கையாண்டவிதம் குறித்து ஊடகங்கள் சிலாகித்தன. கடந்த மாதம் அவர் தன் நண்பர்களோடு நடனடமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவ, ‘பிரதமருக்கு இது அழகா?’ என்கிற ரீதியில் விமர்சனங்கள் குவிந்தன. சிலர் ஒரு படி மேலே போய் அவர் பதவி விலக வேண்டும் என்று சமூக ஊடகங்களில் எழுதினர். இதைத் தொடர்ந்து தன் அலுவலகத்துடன் தொடர்புடைய இடத்தில் சர்ச்சைக்குரிய அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் அதற்குத் தான் வருந்துவதாகவும் சன்னா மரின் தெரிவித்தார். போதை மருந்து பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவைப் பொதுவெளியில் வெளியிட்டார்.

இதற்கிடையே சன்னா மரினுக்கு ஆதரவாகவும் குரல்கள் வலுத்தன. ‘ஆண் அதிபர்களும் பிரதமர்களும் தங்கள் குடும்பத்துடனோ நண்பர்களுடனோ நேரத்தைச் செலவிடுவதை மெச்சுகிறவர்கள், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் நடனமாடியதை ஏன் சர்ச்சையாக்க வேண்டும்? அவர் பெண் என்பதாலா?’ என்றும் சிலர் சன்னா மரினுக்குத் துணை நின்றனர். ஹிலாரி கிளின்டன் நிகழ்ச்சியொன்றில் தான் நடனமாடும் படத்தைப் பகிர்ந்து, ‘தொடர்ந்து ஆடுங்கள்’ என்று சன்னா மரினுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். சன்னா மரின் தன் தனிப்பட்ட நேரத்தை நண்பர்களுடன் செலவிடுவதில் தவறில்லை என்றும் பலர் கருத்துத் தெரிவித்தனர்.

“இளம் தலைமுறையின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். நான் பிரதமராக இருந்தாலும் சமூக ஊடகங்களில் வெளியாவதைப் பொறுத்தவரை நான் ஒரு தனிநபர். அதனால் என் நிலைப்பாட்டை நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை. ஆனால், நான் என்ன பேசுகிறேன் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். காரணம், நான் சொல்லும் கருத்து அரசாங்கத்தின் கருத்தாகப் புரிந்துகொள்ளப்படக்கூடும்” என்று சன்னா மரின் தெரிவித்திருக்கும் வீடியோ பரவலாகப் பகிரப்பட்டது.

முன்னேறும் சென்னை; பின்தங்கும் டெல்லி

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி 2021இல் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் 15 சதவீதம் அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு குறித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பது குறித்தும் தொடர்ந்து பேசிவரும் நிலையில் வெளியாகியிருக்கும் இந்த அறிக்கை நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

அரசு, சட்டம் - ஒழுங்கு செயல்படுத்தப்படும் விதம், சமூகக் கட்டமைப்பு, கல்வியறிவு போன்றவற்றுக்கும் பெண்கள் மீதான வன்முறைச் செயல்களுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இந்த அறிக்கை உணர்த்துகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பகிர்ந்துகொள்கின்றன. பெருநகரங்களைப் பொறுத்தவரை பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் நகரம் என்று எதுவும் இல்லை. ஆனால், நடைபெறும் குற்றச்செயல்களின் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முந்துகிறது. கொல்கத்தா அதைப் பின்தொடர்கிறது. இந்த விஷயத்தில் தலைநகர் டெல்லிக்குச் சறுக்கல்தான்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் மீதான வன்முறை (போக்ஸோ வழக்கு), பெண்கள் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றில் டெல்லியே முதலிடம் வகிக்கிறது.
கணவர் அல்லது உறவினர்களால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளிலும் டெல்லிக்குதான் (4674) முதலிடம். சென்னையில் மிகக் குறைவான வழக்குகளே (95) பதிவாகியுள்ளன. அதேபோல் வரதட்சிணை மரணங்களிலும் டெல்லி (139), பெங்களூரு (26), மும்பை (12) ஆகியவற்றுடன் ஒப்பிட சென்னையில் ஒரேயொரு வரதட்சிணை மரணம் மட்டுமே பதிவாகியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in