Published : 03 Oct 2016 12:21 PM
Last Updated : 03 Oct 2016 12:21 PM

பாரிஸ் ஆட்டோ எக்ஸ்போ 2016: முன்னுரிமை பெற்ற பேட்டரி வாகனங்கள்

சர்வதேச அளவில் மோட்டார் வாகன தயாரிப்பாளர்களுக்கு மிக முக்கியமான கண்காட்சிகளில் ஒன்றான பாரிஸ் ஆட்டோ எக்ஸ்போ இம்மாதம் 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண் காட்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை தந்து, தங்களது புதிய தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ளன.

இந்த மோட்டார் கண்காட்சியில் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்து வதில் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டியது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்களது எதிர்காலத் திட்டத்தை மிகத் தெளிவாக முதல் நாள் செய்தியாளர்கள் கூட்டத்திலேயே அறிவித்துவிட்டன. அதாவது எதிர்காலத் தயாரிப்புகள் அனைத்தும் பேட்டரி வாகனங்கள்தான் என்று.

இந்த நூற்றாண்டின் இறுதியில் பேட்டரி வாகனங்கள்தான் மிகச் சிறந்த போக்குவரத்து வாகனமாகத் திகழும் என்று ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு புகை வெளியேற்ற மோசடியில் சிக்கி சர்வதேச அளவில் மிகப் பெரிய அவப்பெயரை சம்பாதித்த இந்நிறுவனம் அதிலிருந்து மீளவும், மீண்டும் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ளவும் பேட்டரி கார்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான பேட்டரி கார்களை இந்நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த ஐடி பேட்டரி கார் இருந்தது.

அடுத்த சில மணி நேரங்களிலேயே ரெனால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) கார்லோஸ் கோஸன், பேட்டரியில் இயங்கும் ‘ஸோ’ காரை அறிமுகப்படுத்தினார்.

சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமும் தனது பங்கிற்கு பேட்டரி கார் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தது.

ஐரோப்பிய கார் உற்பத்தியாளர்கள் எண்ணத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்த்துவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கவனம் பேட்டரி கார் பக்கம் திரும்பியதைக் காட்டுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை முற்றிலுமாகத் திரும்பப் பெற்று பேட்டரி கார்களை புழக்கத்தில் விட ரெனால்ட் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பேட்டரி கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை தயாரிப்பதில் நிறுவனங்கள் தீவிரமாக இருந்தாலும், பேட்டரி சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இன்னமும் முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் சீனாவில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் முழுவீச்சில் உருவாக்கப்பட்டு பேட்டரி வாகனங்களின் உபயோகம் ஊக்குவிக்கப்படுகிறது.

டெல்லியில் 8 மாதங்களாக நீடித்த 2000சிசிக்கு மேலான டீசல் கார்கள் மீதான தடை சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் எந்த நேரத்திலும் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. இதனால் பெட்ரோல் கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் புகைக் கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் முற்றிலும் புகையை வெளியிடாத, சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பேட்டரியில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க முன்வந்துள்ளன.

இந்தியாவிலும் புகைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாகி, பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் பெருகும்போது இங்கும் பேட்டரி வாகனப் பெருக்கம் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x