Last Updated : 08 Oct, 2016 01:05 PM

 

Published : 08 Oct 2016 01:05 PM
Last Updated : 08 Oct 2016 01:05 PM

மின் இணைப்பு பெறுவது எப்படி?

மின்சாரம் இல்லையேல் இந்த உலகம் இல்லை என்ற அளவுக்கு நம் அன்றாடத்தின் சிறு சிறு பணிகளுக்கும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறோம். பொழுதுபோக்கு சாதனங்கள் மட்டுமல்லாது தொலைத்தொடர்பு சாதனங்கள், பயன்படு பொருள்கள் எல்லாமும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. இத்தனை பயன் தரும் மின் இணைப்பு வாங்குவது எப்படி என வாசகர்கள் பலரும் கடிதங்கள் வாயிலாகக் கேட்டுள்ளனர். அவர்களுக்காக இந்தக் கட்டுரை.

மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப் படிவம் மின்சார வாரிய அலுவலகங்களில் கிடைக்கும். வீட்டுக்கு மின் இணைப்பு வாங்க விண்ணப்பம் படிவம்-1-ல் வாங்கிப் பூர்த்திசெய்து தர வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்துக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

> விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சில அடிப்படைத் தகவல்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான உரிமையாளர் என்பதற்கான உரிய சான்றைக் கொடுக்க வேண்டும். அதாவது பத்திரப் பதிவுச் சான்றிதழ் போன்ற தேவையான, சட்டரீதியில் செல்லத்தக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

> வீட்டுக்குச் சொந்தக்காரராக இல்லாமல் இருந்தாலும் மின் வழங்கல் கேட்க முடியும். அதற்கு விண்ணப் படிவம் ஐந்து சில விதிகளை வகுத்துள்ளது. வீட்டின் உரிமையாளர் இல்லாமல் மின் இணைப்பு கேட்கும்போது சம்பந்தப்பட்ட நபர், அதற்கான படிவமான 5-ஐ வாங்கி அதில் வீட்டின் சட்டரீதியிலான உரிமையாளரிடம் சம்மதக் கடிதம் பெற வேண்டும். சட்டரீதியிலான உரிமையாளர் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால், சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கான சான்றை மின் இணைப்பு கேட்கும் நபர் தர வேண்டும்.

> மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டுப் புதிய கட்டுமானம் அல்லது சரி செய்யும் பணிகளை மேற்கொள்ளும்போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெற வேண்டும். மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையைக் கடைப்பிடிக்க வேண்டும்,

> பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ தபால் மூலமோ கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக்கொள்ள வேண்டும்.

> விண்ணப்பத்தைப் பதிவுக்கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

> மின் இணைப்புக்கான விண்ணப்பத்தை அளித்தவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வுசெய்ய ஏதுவாக உள்ள தரைத்தளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தை/மீட்டர் பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்துகொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.

> எல்லா அடுக்கு மாடிக் கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைத்தளத்தில்தான் மீட்டர் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.

> மின் இணைப்பு கோருவோர் அதற்குண்டான கட்டணங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டிக் கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்.



> மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்துக் கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

> மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்துக்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்தச் செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழித் தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

> தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கீகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்க வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், மின் இணைப்பு கோரும் நபர், வீட்டுக்குள் மின் இணைப்புக்கான வேலை முடிந்துவிட்டதை அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மின்சார வாரியப் பொறியாளர் ஆய்வு மற்றும் சோதனை செய்வதற்கு ஏதுவாக உள்ளதைத் தெரிவிக்க வேண்டும்.

> மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வுசெய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x