Last Updated : 14 Oct, 2016 10:29 AM

 

Published : 14 Oct 2016 10:29 AM
Last Updated : 14 Oct 2016 10:29 AM

மொழி கடந்த ரசனை 5: எப்படி நான் வீட்டை விட்டுக் கிளம்புவேன்?

திரைப்படப் பாடல்களை இயற்றும் கவிஞர்கள், திரைக் காட்சிக்கு ஏற்ற விதத்தில் தங்கள் கவித் திறனைத் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் அவசியம். திரைப்படத்தில் நாயகன், நாயகி, வழிப்போக்கன், துறவி, நகைச்சுவை கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்களைக் காண்கிறோம். காதல், சோகம், மகிழ்ச்சி, விரக்தி, எள்ளல், வியப்பு, வெறுப்பு பச்சாதாபம் என காட்சிக்குப் பொருத்தமான விதத்தில் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உரிய மொழியில், மெட்டுக்கு ஏற்ற வரிகளில் கருத்தோவியமாக்கும் ரச வித்தை அறிந்த கவிஞர்கள் காலம் கடந்து நிற்பவர்கள்.

தமிழ் மொழியில் இத்துறையில் கண்ணதாசனுக்கு இணையாக எவரையும் கூறுவது கடினம். ஆனால், எண்ணிக்கையிலும் ‘genre’ என்று கூறப்படும் வகைமை என்ற அம்சத்திலும் இந்தித் திரை இசைக் கவிஞர்களில் பலர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்தத் தகுதிக்கும் பெருமைக்கும் உரியவர்கள்.

தாய்மொழி இந்தி அல்ல

நாம் தற்சமயம் ரசித்துக்கொண்டிருக்கும் ராஜேந்திர கிஷன் அப்படிப்பட்ட ஒருவர். ‘பஹலி ஜலக்’ (முதல் பார்வை) என்ற இந்திப் படத்துக்கு அவர் எழுதிய பாடல்கள் இத்தகு பன்முகச் சுவையுடையவை. திரைக்கதை ஆர். வெங்கட்டாசலம், இயக்கம் எம்.வி. ராமன், கதாநாயகி வைஜெந்திமாலா (தமிழ்), கதாநாயகன் கிஷோர் குமார், பாடகர் ஹேமந்த்குமார் (வங்காளி), பிரான் (அறிமுகம்), தாராசிங், ஓம்பிரகாஷ் (பஞ்சாபி), இசை சி. ராமச்சந்திரா, லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே (மராட்டி) என முழுக்க முழுக்க இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராத கலைஞர்கள் பங்குபெற்ற படம் இது. தாய்மொழி பஞ்சாபியாக இருந்தாலும், இந்தி, உருது, மராட்டி, தமிழ் ஆகிய மொழிகளை அறிந்த ராஜேந்திர கிஷன் இப்படத்துக்காக இயற்றிய பாடல்கள் அகில இந்திய ரசிகர்களும் போற்றும்படி அமைந்தன.

ஜமீன் சல் ரஹீ ஹை, ஆஸ்மான் சல் ரஹா ஹை, யே கிஸ்கீ இஷாரே ஜஹான் சல் ரஹா ஹை யே ஹஸ்னா, யே ரோனா, யே ஆஷா, யே நிராஷா, சமஜ் ந ஆயே, யே கியா ஹை தமாஷா, என்று போகும் தத்துவப் பாடலின் பொருள் இப்படி அமைகிறது:

பூமி சுழன்று கொண்டிருக்கிறது

ஆகாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது

எவருடைய சமிக்ஞையின் பேரில்

இவை இப்படி நடந்துகொண்டிருக்கின்றன?

இந்தச் சிரிப்பு, இந்த அழுகை

இந்த ஆசை, இந்த நிராசை

ஒன்றும் புரியவில்லை

இது என்ன வேடிக்கை?

புதிரான சூழல், புரியாத கதை

பொருத்தமற்ற குறிக்கோள்

போய்ச் சேராத இலக்கு

பிறகு எதற்காக இந்த யாத்திரை?

எவர் சமிக்ஞையில் இப்படி?

இதுபோன்ற ஆழமான கருத்துக்களை, எளிய இந்தி வரிகளில் எழுதினார் ராஜேந்திர கிஷன். இசை அமைப்பில் தலைசிறந்தவரா அல்லது பின்னணிப் பாடல் பாடுவதிலா என அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு இசை அறிவும் நகல் செய்ய முடியாத தாபக் குரல் வளமும் கொண்ட ஹேமந்த் குமார் இந்தப் பாடலைப் பாடினார்.

என் அழகை எப்படி மறைப்பது...

இதற்கு முற்றிலும் மாறாக, மராட்டிய லாவணி நாட்டியப் பாடலையும் ராஜேந்திர கிஷன் இப்படத்துக்காக எழுதினார். வசீகரமான வைஜெயந்திமாலாவின் நாட்டிய முத்திரைகளுடனும் லதாவின் இனிமையான குரலுடனும் கூடிய பாடல் இது.

தேக்(கு) கே மேரா ஃகோரா முக்டா,

லோக் கஹே ஹாய் சாந்த் கா துக்கடா,

கர் ஸே நிக்லூம் கைஸே

என்று தொடங்கும் அப்பாடலின் பொருள்:

என் சிவந்த, அழகான முகத்தைப் பார்த்துவிட்டு,

மக்கள் கூறினார்கள், ‘அதோ சந்திரனின் துக்கடா’

நான் எப்படி வீட்டைவிட்டுக் கிளம்புவேன்?

ஐயோ, என் கருங்கூந்தலைப் பார்த்துவிட்டு

தாசி என்றார்கள்,

என் எழில் கண்களைப் பார்த்துவிட்டு

கூரிய முட்கள் என்றார்கள்,

கன்னத்தில் வைத்த திருஷ்டிப் பொட்டைப்

பார்த்துவிட்டு உள்ளம் கொள்ளை போனதே என்றார்கள்.

எப்படி நான் வீட்டை விட்டுக் கிளம்புவேன்?

என் அழகை எப்படி மறைப்பது,

எப்படி இவர்களைச் சமாளிப்பது

என்ற ரீதியில் போகிறது இந்தப் பாட்டு. கோரா என்ற இந்திச் சொல்லுக்கு ‘சிவந்த’ என்று பொருள். அது ‘லால்’ என்று சொல்லப்படும் ரத்தச் சிவப்பு இல்லை. அழகிய சிவந்த பெண் கோரி. பையன் கோரா.

ராஜேந்திர கிஷன் இப்படத்திற் காக எழுதிய இன்னொரு பாடல், பிரச்சாரப் பாடல் வகையைச் சேர்ந்தது.

சரன்தாஸ் கீ பீனேக்கி ஜோ ஆதத் நஹீன் ஹோத்தி

ஆஜ் மியா பாஹர், பீவீ அந்தர் ந சோத்தி

சரன் தாஸுக்கு மது அருந்தும் குடிக்கும் பழக்கம் இல்லாதிருந்தால், இன்று கணவன் வெளியில், மனைவி உள்ளே எனத் தூங்கும் நிலமை வந்திருக்காது

என்று படத்தின் கதாநாயகன், கிஷோர்குமார் எள்ளல் உணர்வு கொப்பளிக்க, கோமாளித்தனமாக ஆடிப்பாடி நடிக்கும் மதுவிலக்குப் பிரச்சாரப் பாடல் இது. ஒரே படத்தில் மூன்று விதமான தளங்களில் பாடல் எழுதும் ராஜேந்திர கிஷனின் ஆற்றலுக்குச் சான்றாக விளங்குகின்றன இந்தப் பாடல்கள்.

இப்படிச் சூழலுக்கு ஏற்ற வடிவிலும் அதற்கு உரிய கவிதை வரிகளிலும் திரைப் பாடல்கள் தமிழிலும் இந்தியிலும் மட்டுமே அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்தது.

ரசிப்போம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x