

இதுவரைக்கும் உலகம் கண்டிராத வகையில் 500 மீட்டர் குறுக்களவில், கிட்டத்தட்ட 30 கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிலான ஒரு ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியிருக்கிறது. இது சீனாவின் நீண்ட காலக் கனவு. இதற்கு ஏற்ற இடத்தைத் தேடி விஞ்ஞானிகள் 10 வருடக் காலத்தைச் செலவு செய்து 400 இடங்களைப் பட்டியலிட்டனர். அவற்றிலிருந்து சிறந்த இடமாக குய்சோ மாகாணம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கு ‘சொர்க்கத்தின் கண்’ என்று புனைபெயரிடப்பட்ட பிரம்மாண்டமான ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்காக அந்தப் பகுதியில் வசித்துவந்த 8,000 பேர் இடம்பெயரச் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த நிவாரணத் தொகையும் வீடுகளும் அளிப்பதாக சீன அரசு ஒப்புகொண்டிருக்கிறது. இதனுடைய முக்கிய நோக்கம் வேற்றுக் கிரகவாசிகளின் இருப்பைப் பற்றி அறிவது.
சீனாவின் 17 ஆண்டுகள் கடின உழைப்பின் பலன் இந்த ரேடியோ தொலைநோக்கி. அடுத்த 20 - 30 ஆண்டுகளுக்கு இந்தத் தொலைநோக்கித்தான் உலகத்தின் மிகவும் சிறந்ததாக இருக்கப்போகிறது.
# இந்தத் தொலைநோக்கியை உருவாக்க சீனா 1.2 டிரில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ. ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்திருக்கிறது.
# இந்தத் திட்டம் 2011-ல் தொடங்கி 2016-ல் ஐந்து வருடக் காலத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது.
# அரைக் கோள வடிவமாகக் காட்சியளிக்கும் இந்தத் தொலைநோக்கி 500 மீட்டர் விட்டம் கொண்டது.
# இந்தப் பிரம்மாண்ட வட்டு (டிஷ்) 4,450 முக்கோண வடிவத் தகடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
# இந்த வட்டு அலைவாங்கியின் டிஷ் ஆண்டெனாவின் கொள்ளளவை விவரிக்க விஞ்ஞானிகள் சுவராசியமான கணக்கைச் சொல்கின்றனர். இதைத் திராட்சை ரசத்தால் நிரப்பினால் உலகத்திலுள்ள 700 கோடி மக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து பாட்டில்கள் திராட்சை ரசம் கிடைக்குமாம்.
# பூமியிலிருந்து 1,351 ஒளியாண்டுத் தொலைவிலிருந்து அதிக நிறையுடைய நியூட்ரான், பல்சார் விண்மீன்களிலிருந்து சமிக்ஞைகள் வருவதாகச் சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது.
# சீனாவில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் ‘ஆகாயக் கண் 1’ இந்த சமிக்ஞைகளைத் தன்னகத்தே வாங்கி ஆராயும்.
# விண்மீன்கள், விண்மீன் மண்டலங்கள் போன்றவற்றிலிருந்தும் வேற்றுகிரகவாசிகளிடமிருந்தும் வரக்கூடிய சன்னமான சமிக்ஞையைக்கூட உள்வாங்கும் ஆற்றல் பெற்றது.
# ‘FAST’ (Five hundred-metre Aperture Spherical Telescope ) என அறிவியல்ரீதியாக இதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
# நமது பால்வீதி மண்டலத்திலுள்ள, அதிக நிறையுடைய சுமார் 4,000 பல்சார் விண்மீன்களைக் கண்டறியும்.
# இந்தத் தொலைநோக்கி 600 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆயிரக்கணக்கான புதுப் புது விண்மீன் மண்டலங்களைக் கண்டறியும்.
# மற்ற விண்மீன்களைச் சுற்றும் கோள்களையும் கண்டறியும். சீனாவின் 17 ஆண்டுகள் கடின உழைப்பின் பலன் இந்த ரேடியோ தொலைநோக்கி.