Last Updated : 28 Oct, 2016 10:21 AM

 

Published : 28 Oct 2016 10:21 AM
Last Updated : 28 Oct 2016 10:21 AM

சினிமா ஸ்கோப் 20: மதயானைக் கூட்டம்

சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி அன்று வெளியானது கமல் ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’ (1992). அதே நாளில்தான் ரஜினி காந்த் நடித்த ‘பாண்டியன்’படமும் வெளியானது. ரஜினி, கமல் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரஜினி காந்த் நடித்த படமே வெற்றி வரிசையில் முந்திச் செல்வது வழக்கம். ‘நாயகன்’படத்துடன் வெளியான ‘மனிதன்’தான் பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் நின்றது என்பது ஓர் உதாரணம். ஆனால், ‘பாண்டியன்’ தோல்வி அடைந்தது, ‘தேவர் மகன்’ வசூலை வாரிக் குவித்தது. அது மட்டுமல்ல; அந்த ஆண்டில் 5 தேசிய விருதுகளையும் அப்படம் பெற்றது.

சாதியத்தின் ‘சக்தி’

அந்தப் படத்தில் இடம்பெற்ற, சாதிப் பெருமையை உரக்கச் சொல்லும் ‘போற்றிப் பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே’ என்ற பாடல் அதன் பின்னர் தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்மத்தை ஒருங்கிணைக்கப் பிரதானக் களம் அமைத்துக் கொடுத்ததாக ஒரு விமர்சனம் உண்டு. அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்ற உண்மை சிலருக்குக் கசக்கும். அந்தப் படத்தின் செய்தியோ அகிம்சை என்பதுதான் ஆச்சரியம்.

படத்தின் இறுதிக் காட்சியில் கையில் கொலையாயுதத்தை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வசனங்களைப் பேசிச் செல்வார் கதையின் பிரதான கதாபாத்திரமான சக்தி. ஆனால், அதன் திரைக்கதைப் பயணத்தில் சாதிப் பெருமிதம் மிதமிஞ்சி வழிந்த காரணத்தால், படம் உணர்த்த விரும்பிய அகிம்சை, ஆழியில் கரைத்த உப்பானது. சக்தியாக நடித்திருக்கும் கமல் ஒரு காட்சியில், ‘நான் சக்திவேல் தேவன்’ என்ற வசனத்தை மொழிவார்.

பிராப்பர்ட்டி ஆன பெரியார்

பெரிய தேவர் வேடமேற்ற சிவாஜி பஞ்சாயத்தில் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றவுடன் ஒட்டுமொத்த ஊரும் எழுந்து நிற்கும். அவர் அமரச் சொன்ன பின்னர்தான் அனைவரும் அமர்வார்கள். இது வெறும் மரியாதையல்ல; ஒரு வகையான ஆதிக்கம். படத்தின் ஒரு காட்சியில் சிவாஜியும் பெரியாரும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று காட்டப்படும். தன்னைப் பெரியார் வழியில் நடப்பவராகக் காட்டிக்கொள்வதில் விருப்புடன் செயல்படும் கமல் ஹாசனே இதன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியிருந்தார்.

கமல்ஹாசன் சக்தியாக அறிமுகமாகும் காட்சியிலேயே கறுப்பு நிற உடைதான் அணிந்திருப்பார். ஆனால், திருமணம் முடிந்த அன்று சக்தியின் கால்களில் விழுந்து வணங்குவார் பஞ்சவர்ணம். சக்தியும் அந்த மரியாதையை அப்படியே ஏற்றுக்கொள்வார். அத்தனை வகையான ஆதிக்கத்தையும் எதிர்த்த பெரியாரின் புகைப்படம் வெறும் செட் ப்ராப்பர்ட்டிதானா? அல்ல அல்ல, நல்ல சினிமாவுக்காகத் தன் கொள்கைகளைக் கூடத் தளர்த்தி கமல் தன்னை வருத்திக்கொள்கிறார்!

குரோதமும் குருதியும்

இதற்கு அடுத்த தீபாவளி அன்று வெளியானது பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ (1993). இதன் கதை வசனம் எம்.ரத்னகுமார். இது அண்ணன் தங்கைப் பாசப் படம் எனப்பட்டபோதும், இதிலும் அதே சமூகத்துப் பண்பாட்டு வழக்கங்களும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதங்களால் ஏற்படும் இன்னல்களுமே திரைக்கதையாகியிருந்தன. ‘பொசுக்கப்பட்ட பூமியில் நசுக்கப்பட்ட மனிதர்களை இன்னும் ஈரத்துடன் வைத்திருப்பது பாசம் என்ற உணர்ச்சியே. இது ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் கலந்த கலாச்சாரத்தின் கதை’ என்று பாரதிராஜாவின் கணீர்க் குரலில் தொடங்கும் படத்தின் முடிவில் விருமாயி அந்த மனிதர்களின் குரோதத்தால், நிலத்தில் குருதி சிந்திக் கிடப்பாள்.

பாரதிராஜாவின் கதை மாந்தர்கள் அனைவரும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும், வக்கிரங்களை அழிக்க வேண்டும் என்று வேதாந்தம் பேசுவார்கள். பாக்யராஜ், மணிவண்ணன், இளையராஜா போன்றோர் இல்லாத வறுமை இந்தப் படத்தில் தென்படும். விருமாயி வேடமேற்றிருந்த ராதிகாவின் சிவாஜியாகும் முனைப்புக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்திருப்பார் பாரதிராஜா. ‘பசும்பொன்’னில் ராதிகா ரசிகர்களைப் பதம் பார்த்ததற்கு இந்தப் படத்தின் வெற்றியே அச்சாரமிட்டது. இந்தப் படத்தின் பல காட்சிகள் வெறும் செண்டிமெண்ட் பூச்சுக்கள். உதாரணம், அண்ணனுக்காக விருமாயி கையை வெட்டிக்கொள்ளும் காட்சி.

சாட்சியமாக ஒரு படம்

இந்த இரண்டு படங்களிலுமே ஒரு சமூகத்தின் மூர்க்க குணத்தால் அதன் மானிடர்கள் படும் இன்னல்கள்தான் படத்தின் திரைக்கதை. ஆனால், அதே சமூகத்தின் பெருமையை வெளிப்படுத்திய படங்களாகவே இவை ரசிகர்களால் பார்க்கப்பட்டன; அதன் சான்று இவற்றின் வணிக வெற்றி. மரணத்தைக் கொண்டாடும் ஒரு நாளில் வெளியான இந்த இரண்டு படங்களும் தவறவிட்ட அம்சங்களைக் கச்சிதமாகக் கைப்பற்றி இதே சமூகத்தின் மற்றொரு பக்கத்தைக் காட்சிப்படுத்தியது, அன்பைப் போதித்த கிறிஸ்து பிறந்த தினத்தில் வெளியான (25.12.2013) விக்ரம் சுகுமாரன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’.

‘கிழக்குச் சீமையிலே’ மாயாண்டி-விருமாயி போல் இதில் செவனம்மாள்-வீரத் தேவர் என்னும் பாசமிக்க அண்ணன் தங்கை உண்டு. விருமாயி போல் செவனம்மாள் செண்டிமெண்ட் குளத்தில் முழுகாதவள். இவர்கள் இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். வெறும் பார்வையிலும் ஓரிரண்டு வாக்கியங்களிலும் முழுமையான அன்பை வெளிப்படுத்தி நிற்பார்கள். தன் அண்ணனுக்காகச் செவனம்மாள் ஒரு கொலையைக்கூட மிக நிதானமாக, நைச்சியமாகத் செய்து முடித்திருப்பவள்.

வேரையே சிதைக்கும் வன்மம்

சடங்குகளுக்குள் புகாமல் அந்தச் சமூகத்தைத் தெருவில் நின்று வேடிக்கை பார்த்ததுபோல் திரைக்கதை அமைத் திருப்பார் கமல் ஹாசன். திருமணம் போன்ற மங்களகரமான சடங்குகளைத் தனது படத்தில் காட்சிகளாக்கியிருப்பார் பாரதிராஜா. ஆனால் ‘மதயானைக் கூட்ட’த்திலோ விக்ரம் சுகுமாரன் மரண வீட்டின் சடங்குகளைக் காட்சிகளாக்கியிருப்பார். முதலிரண்டு படங்களும் நேர்கோட்டில் செல்லும். ஆனால், இந்தப் படமோ முன்பின்னாகச் செல்லும் திரைக்கதையமைப்பைக் கொண்டிருக்கும். இதன் தலைப்பே அந்தச் சமூகத்தை விமர்சிக்கும்.

‘கிழக்குச் சீமையிலே’ படத்திலாவது சிவனாண்டியின் தாய் விஷமேற்றிய சொற்களையே விதைத்துக்கொண்டிருப்பார். ஆனால், ‘தேவர் மக’னில் பெரிய தேவர் வீட்டு அண்ணி சாந்த சொரூபியாகவே வலம் வருவார். பெண்களிடம் வெளிப்படும் ஆக்ரோஷத்தையும் குரோதத்தையும் துல்லியமாகக் காட்சிப்படுத்தியிருந்தது இப்படம். பெண்களிடம் வெளிப்படும் வன்மம் ஒரு சமூகத்தின் வேரையே சிதைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டிய படம் ‘மதயானைக்கூட்டம்’.

சக்தியும் விருமாயியும் வசனங்களாகப் பேசிய அதே விஷயத்தை ஒற்றை சைகையில் வெளிப்படுத்தியிருக்கும் பார்த்திபன் கதாபாத்திரம். மூர்க்கத்தனத்துக்கு எதிராக அந்தப் படம் பார்வையாளரின் மனத்தில் எழுப்பிய கேள்வி உக்கிரமமானது. இப்படியான கேள்வியை எழுப்புவதுதான் ஒரு நல்ல படத்தின் தன்மை. ‘மதயானைக் கூட்டம்’வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை எனினும் இந்தத் தன்மை இந்தப் படத்தை நினைவுகூரச் செய்யும்.

ஒரு திரைப்படத்தின் வணிக வெற்றியைப் படைப்பாளி தீர்மானிக்க இயலாது; அதைப் பார்வையாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். ஆனால், அதன் கலைரீதியான அம்சத்தில் வெற்றியைப் பெறுவது படைப்பாளியின் கையில்தான் உள்ளது. அந்த வகையில் கமல் ஹாசனும் பாரதிராஜாவும் தர இயலாத கலை அம்சத்தை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் புத்துணர்வான ‘மதயானைக் கூட்ட’த்தின் மூலம் தந்திருக்கிறார்.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x