Last Updated : 07 Oct, 2016 08:24 AM

 

Published : 07 Oct 2016 08:24 AM
Last Updated : 07 Oct 2016 08:24 AM

யூடியூப் கிட்டார் ஸ்டார்!

கிட்டார் காதலர்களும், காதலுக்காக கிட்டார் வசிக்கக் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய இளைஞர் ஐசாக் தையில். யூடியூபில் இவர் எடுக்கும் ‘தமிழ் கிட்டார் லெசன்ஸ்’–ஐ ஏற்கெனவே 6500-க்கும் மேற்பட்டவர்கள் ‘சப்ஸ்கிரைப்’ செய்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படப் பாடல்களை யூடியூப்பிலேயே கிட்டாரில் வாசிக்கச் சொல்லித்தந்திருக்கிறார் ஐசாக். ‘மாய நதி’, ‘தள்ளிப்போகாதே’, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’, ‘ஹோசானா’ இப்படி நம் மனதைக் கவர்ந்த பல புதிய பாடல்கள் ஐசாக்கின் விரல்கள் மீட்டுவதைப் பார்த்தே கற்றுக்கொள்ளலாம்.

புதிய பாடல்கள் மட்டும்தானா எனக் கேட்பவர்களுக்கு ‘என் இனிய பொன் நிலாவே’, ‘நினைவோ ஒரு பறவை’, ‘ஓ பட்டர்ஃபிளை’ உள்ளிட்ட நெஞ்சில் நிலைத்த கானங்கள் பல இருக்கின்றன. “புதுப் பாடல்களைவிடவும் பழைய பாடல்களை வாசிக்கறதுதான் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. ஏனா இப்ப வரும் பாடல்களில் 4 அல்லது 5 கார்ட்ஸ்தான் இருக்கு. ஆனால் பழைய பாடல்களில் நுணுக்கங்கள் எக்கச்சக்கம். கிட்டத்தட்ட 16 கார்ட்ஸ் இருக்கும். அந்த வகை பாடல்களை வாசிக்கறதும் வாசிக்கச் சொல்லித் தரறதும்தான் சவால். அந்தச் சவாலை ஏத்துக்க எனக்குப் பிடிச்சிருக்கு” என்கிறார் ஐசாக்.

இரவு முழுக்க…

சென்னைப் பையனான ஐசாக் தற்போது வசிப்பது ஓசூரில். பகலில் அஷோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலை. இரவில் கிட்டாரும் கையுமாக இருப்பதுதான் இவருடைய லைஃப் ஸ்டைல். ஆனால் இவர் யாரிடமும் கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொள்ளவே இல்லை. “சின்ன வயசுல இருந்தே கிட்டார் வாசிக்கிற ஆசை இருந்தும் ஏனோ கத்துக்கலை. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில பி.பி.ஏ., படிக்கும்போது கல்லூரிக்குள் ஒரு இசைப் போட்டி அறிவிச்சாங்க.

என்னுடைய ஆர்வத்தைப் பார்த்துக் கல்லூரியின் ‘கிட்டார் கிங்’கும் என்னுடைய நெருங்கிய நண்பனுமான மெல்வின் ஒரே ஒரு நாள் இரவு கிட்டார் வாசிக்கச் சொல்லிக்கொடுத்தான். ‘காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்’ ங்குற அந்தப் பாடலை அன்னைக்கு இரவு முழுக்க வெறித்தனமா வாசிச்சுப் பழகி அடுத்த நாள் மேடை ஏறி எப்படியோ வாசிச்சுட்டேன்” எனச் சிரிக்கிறார் ஐசாக்.

அதற்காக ஒரே இரவில் கிட்டார் கற்றுக்கொண்டுவிடலாம் என நினைத்துவிட வேண்டாம். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தினந்தோறும் கிட்டார் வாசித்துப் பழக ஆரம்பித்தார் ஐசாக். சில நாட்கள் நடு ராத்திரியில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக்கொண்டு கிட்டார் வாசித்து அப்பாவிடம் திட்டு வாங்கிய நாட்களும் உண்டு எனச் சிரிக்கிறார்.

யூடியூப்தான் ஆசான்

யூடியூப் வழியாகத்தான் இவரும் கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். “பத்து வருஷத்துக்கு முன்னால இங்கிலிஷ் பாடல்களுக்கு மட்டும்தான் நல்ல ஆன்லைன் டுடோரியல் இருந்தது. அதைப் பார்த்துப் பார்த்து வாசிக்கப் பழகினேன். ஆனால் தமிழ்ப் பாடல்களை வாசிக்கச் சொல்லித்தர அவ்வளவா ஆன்லைன்ல ஆளில்லை. இதனாலேயே நான் கத்துக்கிட்டதை ஆன்லைன் சொல்லித்தரலாம்னு முடிவு பண்ணினேன். அது மட்டுமில்லாம வெறுமனே வேலைக்குப் போய் சம்பாதிக்கறது வாழ்க்கை இல்லை. ஏதாவது செய்யணும்னு தோணுனப்ப யூடியூப்பில கிட்டார் கிளாசஸ் எடுக்க ஆரம்பிச்சேன்” என்கிறார் ஐசாக்.

ஸ்கைப் மூலமாகவும் கிட்டார் வாசிக்கச் சொல்லித் தரும் இவரிடம் “என்னுடைய கேர்ள் ஃபிரெண்டுக்கு அடுத்த வாரம் பிரத்டே பாஸ். அப்ப அவங்களை இம்பிரஸ் பண்ணுறதுக்கு ஒரு பாட்டு வாசிக்க டக்குனு சொல்லித் தாங்க” என ஐசாக்கிடம் கேட்கும் பல இளைஞர்கள் இருக்கிறார்களாம்.

இவருடைய கிட்டார் கிளாஸை வீடியோ எடுப்பது இவருடைய ஸ்மார்ட்ஃபோன்தான். அதைச் சரி பார்த்து, யூடியூப்பில் பதிவிட்ட பின்னர் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையெல்லாம் கணக்கிடுபவர்கள் டேவிட், பீட்டர் ஆகிய இவரின் தோழர்கள்.

ஐசாக்கின் ‘மெண்டல் மனதில்’ கவர் சாங், ‘ராஜா –ரஹ்மான் மேஷ் அப்’ வீடியோக்கள் வைரலானதை அடுத்துப் பல வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கன்னட இசையமைப்பாளர் நோபின் பால் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். புதிய தலைமுறை இசைக் கலைஞர்களில் தன்னை மிக்கவும் ஈர்ப்பவர்கள் கிட்டார் இசை கலைஞர் கேபா, பாடகரும் கிட்டார் கலைஞருமான பிரதீப் குமார், இசையமைப்பாளர் ஷான் ரால்டன் என்கிறார் ஐசாக். கூடிய விரைவில் இவர்கள் அனைவரோடும் திரையுலகில் இணைந்து பணியாற்ற கிட்டாரோடு காத்திருக்கிறார் இந்த யூடியூப் கிட்டார் ஸ்டார்!

ஐசக்கின் ‘தமிழ் கிட்டார் லெசன்ஸ்’ - சுட்டி: http://bit.ly/2dMZYa7

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x