

கணினித் தந்தை என்று சார்லஸ் பாபேஜைக் கொண்டாடும் உலகம், அதே கணினிக்கு அடிப்படையான முதல் நிரலை (புரோகிராம்) வடிவமைத்தவரை மிகத் தாமதமாகவே அடையாளம் கண்டது. உலகின் முதல் கணினி புரோகிராமரான அந்த யுவதி, அடா லவ்லேஸ்.
கணினியைத் தவிர்த்துவிட்டு இன்றைய உலகைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. கணினிக்கு வன்பொருள் (hardware) கட்டமைப்பு எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மென்பொருள் தரவுகளும் அவசியம். மென்பொருளை மையமாகக் கொண்டே உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தகவல் தொடர்பு, வர்த்தகம் என உலக வரலாற்றில் இதுவரை இல்லாத பாய்ச்சல் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் அடா லவ்லேஸ்.
கவிஞர் பைரனின் மகள்
புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன், அடா லவ்லேஸின் தந்தை. அடா ஒரு மாதக் குழந்தையாக இருக்கும்போதே மனைவி இஸபெல்லாவைப் பச்சிளம் குழந்தையோடு பரிதவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டார் பைரன். இதனால் இஸபெல்லாவின் மேற்பார்வையில் பாட்டி ஜூடித்திடம் அடா வளர்ந்தார்.
கவிதை, இலக்கியத் தொடர்பு ஏற்பட்டால் கணவரைப் போலவே தன் மகளும் தடம்புரண்டு போவார் எனப் பயந்தார் இஸபெல்லா. அதனால் கவிதை, இலக்கியப் பரிச்சயம் அறவே இல்லாமல் அடாவை வளர்த்தார். அதே நேரத்தில் தனக்கு விருப்பமான கணிதம், அறிவியலை மகளுக்குப் புகட்ட ஏற்பாடு செய்தார்.
முடக்கிய நோயிலும் பறந்தவர்
இளம் பிராயத்தில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார் அடா. தனிமையும் நோயும் உண்டாக்கிய அழுத்தத்திலிருந்து மீள உள்ளுக்குள் இருந்த கற்பனைத் திறன் அடாவுக்கு விழித்துக்கொண்டது. அவருக்கு உண்டான கற்பனைகள் கணிதத்தையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. படுக்கையிலிருந்து விடுபடும் உத்வேகம் அவரைப் பறக்கும் எந்திரம் ஒன்றுக்கான குறிப்புகளை உருவாக்கச் செய்தது. இறக்கைகள் அமைப்பு, நீராவியால் எந்திரம் இயங்குவது எனப் படிப்படியாகப் பறக்கும் எந்திரத்துக்கு உயிர் கொடுத்தார். அடுத்து, நவீனப் படகுகள் வடிவமைக்கக் குறிப்புகள் உருவாக்கினார்.
பல அறிவியல் கட்டுரைகளை வாசித்துத் தனது பாணியில் எளிய குறிப்புகளாக வரிசைப்படுத்தினார். பின்னாளில் கணிப்பொறிக்கான அல்காரிதம் எழுத அவை அடித்தளம் இட்டன. ஒரு வருடத்திற்குப் பின்னர் உடல்நிலை தேறி மீண்டும் பாடங்களைப் பயின்றபோது, அறிவியல், கணிதத்தின் மீது அதுவரை இல்லாத ஆர்வம் பிறந்தது. இப்போது கற்பனையும் அறிவியலும் கைகோத்தன.
சார்லஸ் பாபேஜுடன் சந்திப்பு
கணினியின் முன்வடிவத்தின் தொடக்கக் காலத்தில் பல எந்திரங்கள் ஒரு அறைக்குள் திணிக்கப்பட்டன. அப்போது பல்கலைக்கழகப் பேராசிரியரான சார்லஸ் பாபேஜ் டிஃபரன்ஸ் இஞ்ஜின், அனலட்டிக்கல் எஞ்சின் ஆகிய பொறிகளை வடிவமைத்துக்கொண்டிருந்தார். அவருடைய நண்பரும் அடா லவ்லேஸ் ஆசிரியருமான மேரி சமர்வில் (Mary Somerville) இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்தார்.
கணிதத்தின் மீதான அடாவின் ஆர்வம், பாபேஜை ஈர்த்தது. இருவரும் இணைந்து பணிபுரியத் தொடங்கினர். 1842-ல் பாபேஜ் வடிவமைத்த அனலடிக்கல் இஞ்ஜினுக்கான நிரலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் அடா. இதை இத்தாலியக் கணிதவியலாளரும் அரசியல்வாதியுமான ஃபெதெரிகோ லூய்ஜி மனப்ரியா (Federico Luigi Menabrea) வெளியிட்டார்.
மறைக்கடிக்கப்பட்ட அடா
அனலடிக்கல் இஞ்ஜினுக்குப் புரோகிராம் உருவாக்கியபோது அடாவுக்கு வயது 18. அறிவியல், கணிதத்துக்கு அடுத்தபடியாக அடா இசையை அதிகம் நேசித்தார். கணிணி நிரல்கள் மூலமாக முதன்முதலில் இசையைக் கோத்தவர் அவரே. ‘செயற்கை அறிவு’ குறித்த அவரது அன்றைய குறிப்புகளும் கண்டுகொள்ளப்படவில்லை.
சார்லஸ் பாபேஜூக்கு நிகரான உழைப்பை அடா மேற்கொண்டபோதும், 1940-வரை அவருக்கு ஆணாதிக்க வரலாற்று உலகம் இடம் கொடுக்கவில்லை. கணினிக்கான நிரல்களைப் பின்னாளில் உருவாக்கிய பெண்களான ஜீன் ஜென்னிங்ஸ் பார்டிக், கிரேஸ் ஹாப்பர் ஆகியோரை உலகம் அடையாளம் கண்ட பின்புதான், அவர்களின் முன்னோடியான அடா லவ்லேஸ் வெளிச்சத்துக்கு வந்தார். அடாவின் குறிப்புகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அடாவைக் கவுரவிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் உருவாக்கிய கணினி மொழிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
அடா லவ்லேஸ் நாள்
கணவர், 3 குழந்தைகள் எனக் குடும்ப நெருக்கடிகளுக்கு இடையேயும் கடைசிவரை தனது ஆராய்ச்சிகளை அடா கைவிடவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அடா, தந்தை பைரனைப் போலவே 36-வது வயதில் இறந்தார். அடாவின் விருப்பப்படியே அவர் அப்பாவின் கல்லறை அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
தொழில்நுட்ப உலகில் பாலினப் பாகுபாட்டினால் மறக்கடிக்கப்படும் பெண் வல்லுநர்களை இப்போது மேற்குலகம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த முயற்சியில் ஒன்றாக 2009 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 2-வது செவ்வாயன்று அடா லவ்லேஸ் நாள் சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டுக் கணிதம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அத்துறையில் பணிபுரிவோர் மத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.