Published : 19 Oct 2016 11:03 AM
Last Updated : 19 Oct 2016 11:03 AM

சினிமா எடுத்துப் பார் 80: ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்க்கை!

‘மனிதன்’ படத்துக்காக கார்கள் மோதும் சண்டைக் காட்சியை எடுத்தபோது, அதில் சிக்கி விபத்துக்குள்ளான ஃபைட்டரின் மூன்று விரல்கள் எங்கே என்று தேடினோம். அதில் இரண்டு விரல்களைத்தான் கண்டு பிடிக்க முடிந்தது. சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் இதுமாதிரி துண் டான விரல்களை ஒட்ட வைக்கும் சிகிச்சை அளிப்பதாக சொன்னார்கள். உடனே அவரை அங்கே அழைத்துச் சென்றோம். துண்டான இரண்டு விரல் களையும் மருத்துவர்கள் கையோடு இணைத்தனர். அந்த மூன்றாவது விரலை கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற கவலை எங்கள் படக்குழுவினருக்கு இருக்கவே செய்தது.

அந்த ஃபைட்டர் என்னை எங்கே பார்த்தாலும், ‘குட் மார்னிங் சார்’ என்று சல்யூட் அடிப்பார். கையில் அந்த ஒரு விரல் இருக்காது. ‘மனி தன்’ படத்துக்காக ஒரு விரலை இழந்துவிட்டாயே!’ என்று கவலையோடு விசாரிப்பேன். ‘அதெல்லாம் பரவா யில்லை.. விடுங்க சார்’ என்பார். அதில் அவரது வீரம் தெரியும்.

சினிமாவில் உள்ள ஸ்டண்ட் கலைஞ ர்களின் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது. அவர்களது உழைப்பு பெரும்பாலும் ரிஸ்க் நிறைந்ததாகவே இருக்கும். எங் களுடைய அதிக படங்களுக்கு ஸ்டண்ட் அமைக்கும் ஜூடோ ரத்னம் மாஸ்டர் குழுவில் ரவி என்று ஒரு ஃபைட்டர் இருந் தார். அப்படி ஒரு சுறுசுறுப்பு. எப்படிப் பட்ட காட்சியாக இருந்தாலும், எவ்வளவு ரிஸ்க் என்றாலும் கொஞ்சமும் யோசிக் காமல் களத்தில் இறங்கிவிடுவார்.

படங்களில் ஆபத்து நிறைந்த சண் டைக் காட்சிகளை ஷூட் செய்யும் போதெல்லாம், ரிஸ்க் அதிகம் இருந்தால் நானே அந்தக் காட்சியை எடுக்க மாட் டேன். சில மாதங்களுக்கு பிறகு வேறு ஒரு படத்தில் ஆபத்தான காட்சியில் நடிக்கும்போது ரவி விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். ஸ்டண்ட் கலைஞர்கள் உயிரை விடும் அளவுக்கு ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களது வீரத் தையும், உழைப்பையும் மனமார பாராட்ட வேண்டும். ஐஸ்வர்யா தனுஷ் அவர்கள் ‘சண்டைக் காட்சி நடிகர்களுக்கும் விருது கொடுக்க வேண்டும்’ என்று அரசுக்கு வேண்டுகோள் வைத் திருக்கிறார். அதை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

‘மனிதன்’

படத்தில் வில்லன் ரகுவரன் மாதுரியிடம் தவறாக நடந்துவிடுவார். ரஜினி கடுமையான கோபத்தோடு வந்து ரகுவரனிடம், ‘ஏழைகள்னா உனக்கு கிள்ளுக்கீரையா போச்சா!?’ என்று பயங் கரமாக வாதிடுவார். அதை துளியும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாத ரகு வரன் பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டே ரஜினியை கிண்டலடிப்பார். ரஜினிக்கு கோபம் கொப்பளிக்கும் அந்த எமோஷனல் காட்சியோடு இடைவேளை வைப்பதாக திட்டமிட்டிருந்தோம்.

அந்தக் காட்சியை ஷூட் பண்ணிக் கொண்டிருக்கும்போது இடைவேளைக் காட்சியை இன்னும் எமோஷனலாக வைக்கலாமே என்று எனக்குத் தோன்றி யது. அப்போது ரஜினியை அழைத்து, ‘இந்த இடத்தில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனோட பாட்டை சேர்த்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று பாட லைக் கூறினேன். ‘‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!’’ இந்தப் பாடலை ரஜினி யிடம் சொன்னேன். நான் சொன்னதை ரகுவரனைப் பார்த்து அவருடைய ஸ்டைலில் உணர்ச்சியோடு கூறினார். அந்த இடத்தில் இடைவேளை. தியேட்டரில் அப்படி ஒரு கைதட்டல், ஆரவாரம். ரசிகர்களின் அந்த உணர்ச்சி வசப்பட்ட ஆரவாரம் இப்போதும் என் கண் முன் நிற்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை குகை மாதிரி ஒரு பின்னணி உள்ள இடத்தில் படமாக்கலாம் என்று தேடினோம். அந்த நேரத்தில் சென்னை, பூந்தமல்லியை அடுத்து உள்ள இடங்களில் நவீனமயமான செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்ப் பதற்கு செங்கல் வீடு மாதிரியும், குகை மாதிரியும் வித்தியாசமாக இருந்தன. செட்டே போட்டாலும் இந்த மாதிரி தத்ரூப மாக வராது என்று அந்த இடங்களில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கும் வேலையில் இறங்கினோம்.

ரஜினி இந்த கிளைமாக்ஸ் சண்டைக்கு புறப்படும்போது ராணுவ வீரர்கள் அணியும் உடையைப் போல் அணிந்திருப்பார். அந்த சட்டையைப் போட்டு ஜிப் மாட்டுவது, பேண்ட்டில் ஜிப் மாட்டுவது, பூட்ஸில் ஜிப் மாட்டு வது போன்ற ஷாட்டுகளை குளோஸ் அப்களில் எடுத்தோம். அதற்கே கைதட் டல். அந்த உடையில் ரஜினி நடந்த வீர நடைக்கு கைதட்டலோ கைதட்டல்!

சண்டைக் காட்சியில் ரஜினி, தன் னோடு மோதும் வில்லன்கள்.. தன் மீது வீசும் வெடி குண்டுகளை ஜம்ப் செய்து பிடித்து ஸ்டைலாக வில்லன்கள் மீதே வீசுவார். வில்லன்கள் அடிப்பட்டு விழுவார்கள். இதுபோல ரசிகர்களின் கைதட்டல்களை பெறக்கூடிய ஸ்டைல் ஷாட்டுகளை இணைத்தோம். படம் முழுவதும் தயாரானதும் சரவணன் சாரிடம் போட்டுக் காட்டினோம். பார்த்து விட்டு, ‘படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கிளைமாக்ஸ் சண்டையில ரஜினி தனி ஸ்டைலோட வில்லன்கள் மேல குண்டு வீசுறாரே அது இன்னும் அஞ்சு, ஆறு இடத்துல இருந்தா அவரோட ரசிகர்கள் கைதட்டி ரசிப்பாங்க. பரவாயில்லை. படத்தைத்தான் முடிச்சிட்டீங்களே! என்று சொன்னார்.

அந்த நேரத்தில் ரஜினி பெங்களூ ரில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். ‘உங்களோட கிளைமாக்ஸ் சண்டை ஸ்டைல் எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு. படத்தை பார்த்துட்டு சரவணன் சார், ‘கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில நீங்க வில்லன்கள் மேல வெடிகுண்டை ஸ்டைலா தூக்கிப்போடுற ஷாட்டுகள் இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்கும்!’’னு நினைக்கிறார் என்று சொன்னேன். அதுக்கு ரஜினி, ‘ஒண் ணும் பிரச்சினை இல்லை. வர்ற ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஷூட்டிங் இல்லை. வேண்டிய ஏற்பாடுகளை நீங்க பண்ணிடுங்க. நான் காலையில வந்துட்டு ஈவ்னிங் பெங்களூர் திரும்பிடு றேன்!’ன்னு சொன்னார். திரும்பவும் அந்த செங்கல் சூளைக்கு போய் சரவணன் சார் சொன்னமாதிரி ரஜினியின் பல ஸ்டைலான ஷாட்டுகளை எடுத்து படத்தில் சேர்த்தோம்.

அதை சரவணன் சாரிடம் போட்டுக் காட்டினோம். பார்த்து மகிழ்ந்தார். ‘என்ன முத்துராமன். நான் சும்மா ஒரு யோசனையாத்தான் சொன்னேன்! ஆனால், நீங்க ரஜினியை வர வழைச்சு ஷூட் பண்ணி சேர்த்துட்டீங்க. ரஜினிக்கு தேங்ஸ் சொல்லிடுங்க. உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்!’ என்றும் சொன்னார். அந்த கிளைமாக்ஸ் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

பொதுவாக நூறு நாட்கள், வெள்ளி விழா ஓடும் படங்களுக்கு பிரம்மாண்ட மாக விழா எடுப்போம். அந்த மாதிரி ‘மனிதன்’ படத்துக்கும் விழா எடுத்தோம். அந்த விழா ஒரு வித்தியாசமான விழா! என்ன வித்தியாசம்?

- இன்னும் படம் பார்ப்போம். | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x