Last Updated : 04 Oct, 2016 11:27 AM

 

Published : 04 Oct 2016 11:27 AM
Last Updated : 04 Oct 2016 11:27 AM

சேதி தெரியுமா? - 1,900 கோடி ஆயுதக் கொள்முதல்

மின்னணுப் போர் தளவாடக் கருவிகள் உட்பட நவீன ஆயுதங்களை ஆயிரத்து 900 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான முடிவு செப்டம்பர் 28 அன்று ராணுவக் கொள்முதல் கவுன்சிலில் எடுக்கப்பட்டது. இந்த கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமை வகித்தார். ராணுவத்தில் பயிற்சி அளிப்பதற்காக, டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை, 405 கோடி ரூபாய்க்குக் கொள்முதல் செய்வதற்கான பரிந்துரையையும் கவுன்சில் ஏற்றது. மும்பையில் உள்ள கடற்படைப் பட்டறையில், ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதிகள் 725 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ளன. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில், 450 கோடி ரூபாயில் ஆயுதங்கள் பழுதுபார்க்கும் வசதிகளை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ‘பை இந்தியா’ திட்டத்தின் அடிப்படையில் இந்திய ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்தப்படும்.



டெல்லியில் பிரிக்ஸ் நாடுகள் சந்திப்பு

பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகங்களின் கூட்டம் புதுடெல்லியில் செப்டம்பர் 27, 28 தேதிகளில் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம், முறைப்படுத்தல், சமூகப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பிரச்சினைகளைப் பேசுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் இது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற வளர்ந்துவரும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கிடையில் உருவான இருதரப்பு சமூக ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தவும் பங்கேற்ற நாடுகள் ஒப்புக்கொண்டன. தொழிலாளர் ஆய்வு மற்றும் பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.



ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செப்டம்பர் 29 அன்று தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் உரி ராணுவத் தளம் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 18 ராணுவ வீரர்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் இத்தாக்குதலை நடத்தியது. இந்தியப் பகுதிக்குள் ஊடுருவத் திட்டமிட்ட பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாதில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருந்த சார்க் மாநாட்டைப் புறக்கணிக்க இந்திய அரசு முடிவு செய்த பிறகு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்பாடுகளின் பின்னணியில் இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கன் முதலிய நாடுகளும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலகியதாக அறிவித்தன. இதைத் தொடர்ந்து சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நான்கு நாடுகள், சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலகியதும், சார்க் மாநாடு ரத்தாவதும் இதுவே முதல்முறை.



டிரம்ப் மீது ஹிலாரி குற்றச்சாட்டு

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், கியூபா மீது அமெரிக்கா விதித்த வர்த்தகத் தடையாணையைச் சட்ட விரோதமாக மீறியதாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றம்சாட்டினார். 1990-களில் டொனால்ட் டிரம்ப்பின் நிறுவனமான டிரம்ப் ஹோட்டல்ஸ் அண்ட் கேசினோ ரெசார்ட் எக்ஸிகியூடிவ்ஸ் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான வர்த்தக நலன்களை வைத்திருந்ததாக ‘நியூஸ்வீக்’ செய்தியைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, கியூபா மீது கடுமையான வர்த்தகத் தடையை விதித்திருந்த காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கே டிரம்பின் வர்த்தகச் செயல்பாடுகள் எதிரானது என்றும் கூறியுள்ளார். 1960-களின் தொடக்கத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சியில் இருந்த கியூபாவைப் பொருளாதாரரீதியாகப் பலமிழக்கச் செய்ய அமெரிக்கா அமல்படுத்திய வர்த்தகத் தடை இது. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மேம்பட்டிருந்தாலும், வர்த்தகத் தடையாணை இன்னமும் அமலிலேயே உள்ளது.



500-வது டெஸ்டில் இந்தியா வெற்றி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த 500-வது போட்டியில் நியூசிலாந்து அணியுடன் கான்பூரில் விளையாடிய இந்திய அணி, 197 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெற்றது. செப்டம்பர் 22 அன்று தொடங்கிய இந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, இந்திய டெஸ்ட் அணி இந்திய மைதானத்தில் ஆடிய 250-வது டெஸ்ட் போட்டி ஆகும். மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், இரண்டாவது போட்டி செப்டம்பர் 30 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x