இயக்குநரின் குரல்: புது மாதிரி போலீஸ்!

சதீஷ் ஜி குமார்
சதீஷ் ஜி குமார்
Updated on
2 min read

பத்திரிகை ஒளிப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய பலர் சினிமாவில் ஒளிப்பதிவாளர் ஆனதுண்டு. ஒளிப்பதிவுடன், கதை, திரைக்கதை, எழுதி, ‘சூரகன்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார் சதீஷ் ஜி குமார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

உங்களைப் பற்றி கொஞ்சம்..

ஸ்காட்லாந்தில் மருத்துவம் படிப்பதற்காகச் சென்றேன். அப்போது பி.பி.சி ஸ்காட்லாந்து’க்காக மருத்துவத் துறை சார்ந்த பல ‘அசைன்மென்ட்’களில் ஒளிப்படக் கலைஞராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. எனது ஒளிப்பட ஆர்வம், சினிமா மீது திரும்பியதால் மருத்துவம் முடித்ததும் அங்கேயே பிலிம் மேக்கிங் படித்தேன். படிக்கும்போதே பல திரைக்கதைகளை எழுதினேன்.

அதில் ஒன்றுதான் ‘அகம் பிரம்மாஸ்மி’. கடந்த ஆண்டு நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் 55 நாட்கள் ‘கேண்டிட்’ முறையில் படமாக்கினேன். திரைக்கதை எழுத்தாளர் பாலா தயாரித்துள்ள இந்தப் படம், விரைவில் தமிழ், இந்தியில் வெளியாக இருக்கிறது. தற்போது ‘சூரகன்’ என்கிற எனது இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்துவிட்டேன்.

படக்குழு பற்றிக் கூறுங்கள்..

இதில் கதாநாயகனாக நடித்திருப்பவர் வி.கார்த்திகேயன். இவர், திரைப்பட விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ள இளம் வழக்கறிஞர்.

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி அவரே படத்தைத் தயாரித்திருக்கிறார். ‘கோலிசோடா 2’ படத்தின் கதாநாயகி சுபிக்‌ஷா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

வில்லனாக வின்சென்ட் அசோகன் நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், மன்சூர் அலிகான் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

என்ன கதை? ‘சூரகன்’ என்கிற தலைப்பு எதற்காக?

நாயகன் ஒரு சூரமான காவல் ஆய்வாளர். கடமையை ஒழுங்காகச் செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். ஒருநாள், அடையாளத்தை மறைத்துக்கொண்ட சிலர், ஒரு படுபாதகக் குற்றச் செயலில் ஈடுபடுவதைப் பார்க்கிறார். அவர்களை நெருங்குவதற்குள் தப்பிச் சென்றுவிடுகிறார்கள். நாயகன் தனது நுண்ணறிவைப் பயன்படுத்தி, புலன் விசாரணையில் இறங்குகிறார்.

அவர் குற்றவாளிகளை நெருங்கிவிடுவார் என்பதை அறியும் காவல் துறை உயரதிகாரி, ‘நீ சஸ்பெண்ட் செய்யப்பட்டவன். விசாரணை செய்யும் அதிகாரம் இல்லாதவன். வாலைச் சுருட்டிக்கொண்டு வீட்டில் இரு, மீறினால் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவாய்’ என்று எச்சரிக்கிறார்.

அதை மீறி நாயகன் அந்தக் குற்றத்தை எப்படிக் கண்டுபிடித்தார், நடந்த சம்பவம் என்ன, அவர் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராக படத்தை உருவாக்கியிருக்கிறேன். இது புது மாதிரி போலீஸ் கதை!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in