Published : 03 Oct 2016 12:26 PM
Last Updated : 03 Oct 2016 12:26 PM

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ்

மெர்சிடஸ் பென்ஸ் கார் பயணத்துக்கு மட்டுமல்ல, அது பணக்காரர்களுக்கான அடையாளமாகவும் இருந்து வருகிறது. ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் இந்தியாவில் 1994-ம் ஆண்டிலிருந்து கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சொகுசு கார் சந்தையில் பென்ஸூக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. முழுவதுமாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பென்ஸ் காருக்கு இறக்குமதி வரி அதிகம் என்பதால் இந்தியாவிலேயே தயாரிக்க நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் தயாரிப்பு யூனிட்டை 2009-ம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் புணே அருகில் சக்கனில் 100 ஏக்கரில் அமைத்தது. ஆரம்பத்தில் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்து வந்தது பென்ஸ் இந்தியா நிறுவனம். பின்னர் படிப்படியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களைக் கொண்டும் உற்பத்தியைத் தொடங்கியது.

இந்த நிலையில் சொகுசு கார் சந்தையில், மத்திய அரசு முன்வைத்த `மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிக கார்களை தயாரிக்கும் நிறுவனமாக பென்ஸ் நிறுவனம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான உதிரிபாகங்களைக் கொண்டு தனது ஜிஎல்சி எஸ்யுவி ரக வரிசையில் புதிய கார்களை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 29-ம் தேதி புணேயில் உள்ள ஆலையில் நடைபெற்ற இந்த கார்களின் அறிமுக நிகழ்ச்சிக்காக அங்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. மத்திய அரசு கொண்டு வந்த `மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு, இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஜிஎல்சி எஸ்யுவி வரிசையில் ஜிஎல்சி 220 டி 4 மேட்டிக் ஸ்டைல், ஜிஎல்சி 220 டி 4 மேட்டிக் ஸ்போர்ட், ஜிஎல்சி 300 4 மேட்டிக் ஸ்போர்ட் வேரியன்ட் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது.

பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரோலண்ட் ஃபோல்கர் இந்த மாடல் களை அறிமுகம் செய்தார்.

``இந்திய சொகுசு கார் சந்தையில் தேவை அதிகரித்துள்ளதை முன்னிட்டு இந்தியாவிலேயே தயாரிக்க முடிவெடுத் தோம். இதனால் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலத்தை குறைக்க முடியும் என்று குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தில் உள்நாட்டின் தேவைகளையும் கவனத்தில் கொள்ள முடியும். பென்ஸ் கார்களில் ஜிஎல்சி எஸ்யுவி மாடல் அதிக விற்பனையாகும் மாடல் என்றும், ஆண்டுக்கு 15 புதிய மாடல்கள் என்கிற இலக்கில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ஒன்பதாவது மாடல் என்றும் குறிப்பிட்டார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று இந்திய தயாரிப்புகளின் முக்கிய அம்சங்ளைப் பார்க்கலாம்;

மாடல்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்டைல், மெர்சிடிஸ் ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்போர்ட் மற்றும் மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 4மேட்டிக் ஸ்போர்ட் என மூன்று மாடல்கள் இந்த வரிசையில் தற்போது வந்துள்ளது.

பெட்ரோல் மாடல்

ஜிஎல்சியின் பெட்ரோல் வேரியன்ட் டான ஜிஎல்சி 300 மாடலில் 4-சிலிண்டர் கள் உடைய 2.0 லிட்டர் பெட்ரோல் என் ஜின் உள்ளது. இது 245 ஹெச்பி சக்தியை யும் 370 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

டீசல் மாடல்

ஜிஎல்சியின் டீசல் வேரியன்ட்டான ஜிஎல்சி 220 டி 4 மேட்டிக் ஸ்டைல் மற்றும் ஸ்போர்ட் மாடல்கள் 170 ஹெச்பி சக்தியையும், 400 என் எம் பீக் டார்க்கை யும் கொண்டுள்ளது. இந்த மாடல்களின் டீசல் இன்ஜின் 4-சிலிண்டர்களுடன் 2,143 சிசி திறன் கொண்டது.

கியர்பாக்ஸ்

இந்த ஜிஎல்சி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டுமே 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

4 மேட்டிக்

ஜிஎல்சியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் இரண்டுமே 4மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வசதியை கொண்டுள்ளது. குறிப்பாக 5 விதமான டிரைவிங் வசதியை கொண்டுள்ளது. கம்போர்ட், எக்கோ, ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ், இண்டிவிஜீவல் என ஐந்து வசதிகளில் ஓட்டலாம்.

வெளிப்புற மற்றும் உள்புற அம்சங்கள்

சர்வதேச அளவிலான ஜிஎல்சி மாடலை விடவும் 80 கிலோ வரை எடை குறைவானது. 18 அங்குல சக்கரங்கள், 5 ஸ்போக் அலாய் வீல், சிறப்பாக வடிவமைக்கபட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், ஆம்பியன்ட் லைட்டிங், பானரமிக் சன்ரூஃப், நேவிகேஷன் வசதி கொண்ட 7-அங்குல இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது.

ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட்டென்ஸ் வசதி கொண்ட ரிவர்ஸ் கேமரா, கிளைமேட் கண்ட்ரோல், கீ லெஸ் ஸ்டார்ட் வசதி (சாவி இல்லாமல் திறக்கும் வசதி) ரியர் விண்டோக்களுக்கு சன் பிளைன்ட்கள், 5 பேர் அமரக்கூடிய வசதி உள்ளிட்டவை இந்த ஜிஎல்சி வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பயணிகளின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு (child protection) மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு சிஸ்டம் (pedestrian safety) ஆகியவற்றிற்காக ஐரோப்பிய அளவில் அதிக புள்ளிகளை ஜிஎல்சி பெற்றுள்ளது.

இஎஸ்பி கர்வ் டைனமிக் அசிஸ்ட், கிராஸ்வின்ட் அசிஸ்ட், அட்டென்ஷன் அசிஸ்ட், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், அடாப்டிவ் பிரேக் லைட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மற்றும் ஒட்டுமொத்தமாக 7 ஏர்பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

விலை

ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்டைல் ரூ. 47.90 லட்சம்

ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் ஸ்போர்ட் ரூ. 51.50 லட்சம்

ஜிஎல்சி 300 4மேட்டிக் ஸ்போர்ட் ரூ. 51.90 லட்சம் (இவை அனைத்தும் டெல்லி விற்பனையக விலையாகும்)

பெட்ரோல் வேரியண்ட்

ஏற்கெனவே டெல்லி என்சிஆர் பிராந்தியத்தில் 2,000 சிசிக்கும் அதிகமான டீசல் என்ஜின் கார்களுக்கு ஏற்பட்ட தடையிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், பெட்ரோல் வேரியண்டில் தனது கவனத்தை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை டீசல் கார்களுக்கான தடை மீண்டும் எழும்பட்சத்தில் தனது முழு கவனத்தையும் பெட்ரோல் மாடலுக்கு மாற்றிக் கொள்ளும் சாத்தியமும் இதன் மூலம் பென்ஸுக்கு உருவாகியுள்ளது.

தவிர இந்த பண்டிகை நாட்களில் அனைத்து கார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய மாடல்களை இறக்குகின்றன. இந்திய சொகுசு கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள இந்திய தயாரிப்புகளோடு இறங்கியுள்ளது. இந்திய தொழில்நுட்பமாக இருந்தாலும் சர்வதேச தரத்தில் எந்த சமரசமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

- maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x