Last Updated : 23 Oct, 2016 01:43 PM

 

Published : 23 Oct 2016 01:43 PM
Last Updated : 23 Oct 2016 01:43 PM

அலசல்: பெண்களுக்கு எதிரான கருத்துகள் தோல்வியைத் தருமா?

டொனால்ட் ஜெ. ட்ரம்ப். நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர். தேர்தல் களத்தில் குதித்ததிலிருந்தே இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை மட்டுமே பேசிவருகிறார். அதிலும் குறிப்பாக, பெண்களைப் பற்றித் தொடர்ந்து தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்திவருகிறார். பெண்களுக்கு எதிரான அவருடைய இந்தக் கருத்துப் போக்கு உலக அரசியல் அரங்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஒரு பெண் என்பதை முன்னிறுத்தியே அவர் விமர்சித்துவருகிறார். பெண்களுக்கு எதிரான கருத்துப் போக்கை உடையவர் என்ற காரணத்தாலேயே அவருக்குத் தோல்வியைப் பரிசாகத் தர வாக்காளர்கள் காத்திருப்பதாகக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

அமெரிக்க ஆண்களின் மனநிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பின் பெண் எதிர்ப்புக் கருத்துகளை அவருடைய தனிப்பட்ட கருத்துகளாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. அது அமெரிக்கா என்ற ஒரு வலதுசாரி மதவாதச் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாகவும் வெளிப்படுகிறது. “முறைகேடான கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்ற ட்ரம்பின் கருத்தை ஆதரிக்கும் ஒரு கூட்டம் அங்கேயும் இருக்கவே செய்கிறது.

பெண்களுக்கு எதிரான அமெரிக்கப் பொதுச் சமூகத்தின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதற்குக் காரணம் என்று சொல்கிறார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்துவந்த மணி மணிவண்ணன். இவர் தற்போது சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிவருகிறார். “முப்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்குப் பணிபுரியவந்தபோது, என்னிடம் தர்க்க அறிவுத் திறனுக்கான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘ஒரு மருத்துவரும் அவருடைய மகனும் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் மகனுக்கு நல்ல அடி. அவர் மகனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார். அறுவை சிசிச்சைக்காக அழைத்துவரப்படும் அந்தச் சிறுவன் தன்னுடைய மகன் என்று மருத்துவமனையின் மருத்துவரும் உரிமைகோருகிறார்.

அப்படியென்றால் அந்தச் சிறுவனுக்கும் அந்த மருத்துவருக்கும் என்ன உறவு இருக்க முடியும்?’ என்று கேட்டனர். அதற்கு நான் சற்றும் யோசிக்காமல், இருவரில் யாரோ ஒருவர் அந்தச் சிறுவனின் தாயாக இருக்கலாம் என்று சொன்னேன். என்னிடம் கேள்வி கேட்ட குழுவினரால் இந்தப் பதிலை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எப்படி ஒரு பெண்ணை உங்களால் அறுவை சிகிச்சை நிபுணராகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது என்று கேட்டனர். இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு தலைமுறை கடந்துவிட்டது.

ட்ரம்ப்க்கு இப்போது எழுபது வயது. அப்படியென்றால், அவருடைய சிந்தனை அதைவிட இன்னுமொரு தலைமுறை பழமையானது. அவர் பெண்களுக்கு எதிராகப் பேசுவது என்பது அமெரிக்கச் சமூகத்தில் அடியோட்டமாக உறைந்திருக்கும் எண்ணத்தின் பிரதிபலிப்புதான். அதனால்தான் அவருக்குத் தான் பேசுவது எதுவும் தப்பாகவே தோன்றவில்லை. ஒரு பெண் கணித ஆசிரியராகவோ, அறிவியல் ஆசிரியராகவோ இருப்பதை இன்றளவும் அமெரிக்கர்களால் யோசித்துப்பார்க்கமுடியாது. இதை ஒப்பிடும்போது, இந்தியாவில் நடந்துவரும் மாற்றங்கள் எனக்கு நம்பிக்கையளிப்பதாகவே தோன்றுகின்றன” என்கிறார் அவர்.

உலகமயமாக்கல் எதிர்ப்பு, மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதிகள், இனப்பற்று போன்ற கருத்துகளால் ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்புக்குக் கணிசமான ஆதரவு திரண்டது. ஹிலாரி கிளிண்டனின் வலிமையான முதலாளித்துவக் கருத்துகளால் அவருக்கு எதிர்ப்பும் இருந்தது. ஆனால், 2005-ல் ட்ரம்ப் பெண்களுக்கு எதிராகப் பேசிய காணொளி அண்மையில் வெளியான பிறகு, அவர் பெண் வாக்காளர்களிடம் முற்றிலும் அந்நியமாகிவிட்டார்.

“ட்ரம்பை அதிபர் வேட்பாளராக நிறுத்தியிருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பெண் எதிர்ப்புக் கொள்கையுடைவர்கள்தான். அமெரிக்காவில் செயல்படும் பெண்கள் உரிமைக் கழகத்தைச் (National Organisation for Women) சேர்ந்தவர்களை ‘ஃபெமிநாஜிகள்’ (FemiNazis) என்றுதான் அழைப்பாளர்கள். பெண்களை நுகர்பொருளாகப் பார்க்கும் மனோபாவம் அமெரிக்காவின் பொது மனோபாவம்” என்று விளக்குகிறார் மணி மணிவண்ணன்.

அமெரிக்கப் பெண்கள் அன்றாட வாழ்வில் இந்தியப் பெண்களைவிட அதிகமான சுதந்திரத்தை அனுபவித்தாலும் பொது அரங்கில் அவர்களால் சமத்துவத்தை அனுபவிக்க முடியாத சூழலே இன்றும் நிலவுகிறது. அமெரிக்காவை மதத்தை ஏற்றுக்கொண்ட வளர்ந்த நாடாகவே நம்மால் கருத முடியும் என்று சொல்லும் சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா, “எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானதுதான். அதனால், பெண்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துகளை ஒரு மதவாதியின் கருத்துகளாக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

அங்கே, ஸ்காண்டிநேவிய நாடுகளில் இருப்பதைப்போன்ற ஒரு வளமான கலாசார சூழல் கிடையாது. அமெரிக்காவின் அதிபர் பதவி என்பதைக் கிட்டத்தட்ட உலகத்தின் அதிபர் பதவியாகத்தான் அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஓர் அதிகாரம் நிறைந்த இடத்துக்கு ஒரு பெண் வருவதை ட்ரம்ப் போன்ற மதவாதியால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுதான் அவரை ‘ராணுவத் தளபதிகள் எப்படி ஒரு பெண்ணுக்கு சல்யூட் அடிப்பார்கள்?’ என்று கேட்வைத்திருக்கிறது” என்கிறார்.

இந்தியாவின் அரசியல் சூழலுடன் இதை ஒப்பிடும்போது இருக்கும் வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுகிறார் ஓவியா. “இந்தியா சிந்தனையில் சூழ்ச்சியும் தந்திரங்களும் நிறைந்த ஒரு நாடு. இந்திரா காந்தி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கணவனை இழந்த பெண் எப்படி பிரதமராகலாம் என்ற ஒரு விவாதம் எழுந்தது. ஆனால், அவர் பிரதமரானதற்குப் பின், பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரே ஆண் இந்திரா காந்திதான் என்று சொல்லி ஆணாதிக்கச் சமூகம் தன் மனதை ஆறுதல்படுத்திக்கொண்டது” என்கிறார் அவர்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் பி. பத்மாவதி, “ட்ரம்ப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், இந்தியச் சூழலுடன் இதை முழுமையாகப் பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால், இந்தியாவில் பன்முகத் தன்மை அதிகம். இங்கு தேர்தலில் நிற்கும் தலைவர்கள் இந்தளவுக்கு வெளிப்படையாகப் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசியதில்லை. அப்படிப் பேசிய தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது” என்கிறார்.

நவம்பர் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 73 சதவீதம் அமெரிக்கப் பெண்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்போம் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கின்றனர். ட்ரம்ப் தோற்றால் பெண்களுக்கு எதிராகப் பேசியதற்காகத் தோல்வி அடைந்தார் என்று வரலாற்றில் நிச்சயம் இடம்பிடிப்பார். இனி வரும் காலத்தில் பெண்களுக்கு எதிரான ட்ரம்ப் மாதிரியான அரசியல் தலைவர்கள் உருவாகாமல் இருப்பதற்கான சாத்தியங்களை விதைக்க வேண்டும் என்பதுதான் ட்ரம்பின் தோல்வியைவிட முக்கியமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x