Published : 12 Oct 2016 10:51 AM
Last Updated : 12 Oct 2016 10:51 AM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை 25: புவியியல்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-IV தேர்வில் புவியியல் பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 15 வினாக்கள் உலக, இந்திய மற்றும் தமிழக புவியியல் சார்ந்த பகுதிகளில் இருந்து கேட்கப்படுகின்றன.

டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத்திட்டத் தின்படி புவியியல் பகுதியில் பேரண்டம், சூரியக் குடும்பம் & பூமி பற்றிய பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று வினாக்கள் கேட்கப்படுகின்றன. இந்த தலைப்பு இயற்பியல் பகுதியிலும் இருப்பதனால் இப்பகுதியை தெளிவாகப் புரிந்து கொண்டால், இயற்பியல் பாடத்தின் பேரண்ட அமைப்புப் பற்றிய வினாக்களுக்கும் நம்மால் நிச்சயம் விடையளிக்க முடியும்.

உலகில் இந்தியாவின் அமைவிடம், காலநிலை மற்றும் தட்ப வெப்பநிலை, பருவம், மழைப்பொழிவு போன்ற பகுதிகளை மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு தேர்வில் கேட்கும் வினாக்களுக்குச் சரியான விடையை அளிக்க முடியும். இப்பகுதிகளை ஆழமாகப் புரிந்து கொண்டு ஒருமுறைப் படித்தாலே அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கேள்விகளுக்கு விடையளிக்க நம்மால் முடியும்.

இந்தியா, வெப்ப மண்டலத்தில் அதுவும் பருவ மழைப்பொழிவு பெறும் பகுதியில் அமைந்துள்ள நாடு. (ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் தென்மேற்கு பருவக்காற்று, அக்டோபர், நவம்பர் வடகிழக்குப் பருவக்காற்று, புயல் மழை). விவசாயத்தையே சார்ந்துள்ள நம்நாட்டின் பருவ மழையை இந்திய வேளாண்மையின் சூதாட்டம் என்று சொல்லும் அளவுக்கு பருவமழை பொய்த்தால் இந்தியாவின் உற்பத்தித் திறன் குறையும், பொருளாதாரம் சரியும் எனும் நிகழ்வினை மனதில் நிறுத்தி மழைப்பொழிவு, நீர்வளங்கள், இந்திய ஆறுகள், மண் வகைகள், வேளாண்மை, இயற்கை வளங்கள், காடுகள் மற்றும் வன விலங்குகள் எனும் தலைப்புகளைப் புரிந்து படிக்கும்போது மிக ஆழமான பார்வை இந்தியப் புவியியல் பகுதியில் தோன்றும்.

புவியியலில் மேற்கூறிய தலைப்புகளி லிருந்து அனைத்துப் போட்டித் தேர்வு களிலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்தியா மற்றும் தமிழகத்தின் தொழில் கள், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து தொடர்பான பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

சமூகப் புவியியல் பகுதியில் மக்கள்தொகை, மக்கள் தொகைப் பரவல், இயற்கைப் பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பகுதிகளில் மூன்றிலிருந்து நான்கு வினாக்கள் வரை கேட்கப்படும். அதிலும் நடப்பு நிகழ்வினைத் தழுவிய கேள்விகள் இப்பகுதியில் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புவியியல் தலைப்பில் பேரண்டம் பகுதியில் நம் அண்டம், நமக்கு மிக அருகில் உள்ள அண்டம், நட்சத்திரம், பிராக்சிமா சென்டரி, ஆல்ஃபா சென்டரி மற்றும் நட்சத்திரங்களின் (சூரியன்) வாழ்நாள், ஒளிக்கான மூலம், சூரியன் பற்றிய குறிப்புகள் கேட்கப்படுகின்றன.

சூரியக்குடும்பம் பகுதியில் கோள்கள், துணைக்கோள்கள், குள்ளக்கோள்கள், குறுங்கோள்கள், வீழ்கற்கள், விண்கற்கள், வால் நட்சத்திரம், குறுங்கோள் பட்டை, கியூபர் பட்டை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளும், குறிப்பாக கோள்களின் சுற்றுப்பாதை, சுற்றுக்காலம், சுழற்சிக் காலம் மற்றும் கோள்களின் சிறப்புப் பண்புகளைப் பற்றியும், சமீப காலமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பூமியைப் பற்றிய குறிப்புகள் (அமைப்பு) அதில் தீர்க்க ரேகை, அட்சரேகை, சர்வதேச நாள்கோடு, இந்திய திட்டநேரம், கிரீன்வீச் கோடு, வெப்ப மண்டலம், அழுத்த மண்டலம் & வளி மண்டலம் தொடர்பான கேள்விகள் குரூப்-IV தேர்வுக்கு மட்டுமே கேட்கப்படுகிறது. ஆனால் குரூப்-II A, II, I-க்கு வளிக்கோளம் (Atmosphere), நீர்க்கோளம் (Hydrosphere), பாறைக்கோளம் (Lithosphere) முதலான பகுதிகளில் இருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்தியப் புவியியல் பகுதியில், இந்தி யாவின் காலநிலை & தட்ப வெப்பநிலை மற்றும் உலகளாவிய பருவநிலை மாற்றம் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படு கின்றன. ஆனால் குறிப்பாக இந்தியாவின் காலநிலை சார்ந்து கேட்கப்படும் கேள்விகளே அதிகம்.

பருவக்காற்று மழைப்பொழிவில் இரு பருவக்காற்று காலம், மழைப்பொழிவின் தன்மை, அளவு, அதன் விளைவு மற்றும் பருவக்காலத்தில் ஏற்படும் புயல் சின்னங்கள் அதில் பயன்பெறும் மாநிலங்கள் & தமிழக மாவட்டங்கள் பற்றியும், மழைப் பொழிவின் சராசரி, மழைப்பொழிவு மற்றும் பருவக்காற்றைப் பாதிக்கும் எல் நினோ, லா நினோ, காற்றோடை (ஜெட் காற்றோடை) போன்றவையுடன், தலக்காற்றான மேற்கத்திய இடையுறு, லூ, நார்வெஸ்டர், மாங்காய் மழை, கல்பாசாகி தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன.

மேற்கூறியபடி, இந்தியா வேளாண்மை நாடு. இது முற்றிலும் பருவமழையை நம்பியும், நீர் ஆதாரங்கள் மற்றும் மழைப்பொழிவையும் நம்பியுள்ளதனால் மழைப்பொழிவு, நீர் ஆதாரங்கள் போன்றவற்றில் ஆண்டு சராசரி மழைப் பொழிவு பெறும் இந்தியப் பகுதிகள் பற்றியும், ஆறுகள், துணை ஆறுகள், கிளை ஆறுகள், நீர் வீழ்ச்சி, நீர்மின் நிலையங்கள், பல்நோக்கு அணைக்கட்டுத் திட்டங்கள், நதிநீர் பங்கீடு, நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள், நதிநீர் ஒப்பந்தம் போன்றவை பற்றிய கேள்விகள் இப்பகுதியில் கேட்கப்படுகின்றன.

மழைப் பொழிவினைப் பொறுத்தே காடுகளும், இயற்கை தாவரங்களும் அமைந்துள்ளதால் இப்பகுதியில் காடுகளின் பரப்பளவு, காடுகளின் வகைகள், தாவரங்கள், வனவிலங்கு சரணாலயம், தேசியப்பூங்கா, பாதுகாக்கப்பட்ட உயிரினப் பாதுகாப்பகம், உயிர்க்கோளம், யுனெஸ்கோ (UNESCO) பட்டியல் தளங்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்கள் சார்ந்த கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்திய & தமிழக நீர்ப்பாசன முறைகளும், பாசனம் பெறும் பகுதிகள் பற்றிய வினாக்கள் கேட்கப்படுகின்றன.

மண் வகைகள் பற்றிய கேள்விகளில் மண் பரவல், மண்ணின் தன்மை, மண்ணின் பண்பு, வளரும் பயிர்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கனிமங்கள், தொழில், போக்குவரத்து போன்ற தலைப்பும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொள்ளல் முக்கியம். கனிமங்கள் உலோக, அலோக கனிமங்கள், அது கிடைக்கும் இடங்கள், முக்கிய கனிமச் சுரங்கங்கள், கனிமங்கள் கிடைக்கும் பீடபூமிகள், கனிமங்கள் கிடைக்கும் மாநிலம், தொழிற்சாலைக்கான கச்சாப் பொருள்கள் போன்றவைப் பற்றிய கேள்விகள், தொழிற்சாலை உற்பத்திகளைச் சந்தைப்படுத்தத் தேவையான போக்குவரத்து வசதி - வான்வழி, கப்பல் துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை எண், ரயில்வே மண்டலங்கள் & தலைமையிடம், ரயில் தடம், புதிய ரயில் தடம், நீண்ட ரயில் பாதை போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

சமூகப் புவியியல் பகுதியில், இந்தியா & தமிழகத்தின் மக்கள் தொகை பெருக்கம், பரவல், அடர்த்தி மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் ஆக்கிரமிப்பு, இயற்கைச் சுரண்டலினால் ஏற்படும் இயற்கைப் பேரிடரான நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு தொடர்பான வினாக்கள் கேட்கப்படுகின்றன.



எஸ்.சிவகுமார்

நிர்வாக இயக்குநர், ஜி.கே.லீடர்ஸ் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x