

1. அப்துல் கலாம்: எளிய குடும்பத்தில் பிறந்து, விண்வெளிப் பொறியியல் படித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) திட்ட இயக்குநராகச் செயல்பட்டார். ரோகிணி 1, அக்னி, பிரித்வி ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியதால், ‘ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார்.
2002ஆம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். மாணவர்களைச் சந்திப்பதையும் உரையாடுவதையும் முக்கியமாகக் கருதினார். ‘கனவு காணுங்கள்’ என்று இவர் சொன்னது, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. இளம் மனங்களின் விருப்பத்துக்குரிய தலைவராக இருக்கிறார்.
2. கைலாஷ் சத்யார்த்தி: சிறு வயதில் தன்னைப் போன்ற குழந்தைகள் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுவே பின்னர் குழந்தைகள் நலனுக்காக உழைக்க வேண்டும் என்கிற லட்சியத்தை இவருக்கு உருவாக்கியது. குழந்தைத் தொழி லாளர்முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறார்.
இவருடைய ‘பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ இயக்கம் மூலம், சுமார் 80 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்குக் கல்வியும் மறுவாழ்வும் அளித்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு மலாலாவுடன் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டார்.
3. அழ. வள்ளியப்பா: இன்றும் பிரபலமாக இருக்கும் ‘மாம்பழமாம் மாம்பழம்’, ‘மியாவ் மியாவ் பூனையார்’ பாடல்களைப் போல இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறார் பாடல்களை எழுதியிருக்கிறார். கதை, கட்டுரை, அறிவியல் என்று ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
பாலர் மலர், டமாரம், சங்கு, பூஞ்சோலை, கோகுலம் ஆகிய சிறார் இதழ்களின் ஆசிரியராக இருந்திருக்கிறார். கோகுலத்தில் இவர் ஆரம்பித்த சிறுவர் சங்கத்தில் உறுப்பினராவதற்கு அந்தக் காலத்தில் சிறார்களிடம் போட்டியிருந்தது. குழந்தை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தியவர்.
4. வாண்டுமாமா: புகழ்பெற்ற சிறார் எழுத்தாளர். கதை, நாவல், படக்கதைகள், அறிவியல் கட்டுரைகள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். ‘பலே பாலு’, ‘வீர விஜயன்’. ‘அரசகுமாரி ஆயிஷா’ போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்களைப் படைத்து, சிறார்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராகத் திகழ்ந்தார்.
ஓவியரும்கூட. ஓவியர் மாலி, இவருக்கு ‘வாண்டுமாமா’ என்கிற பெயரைச் சூட்டி, சிறார்களுக்காக எழுதச் சொன்னார். கல்கி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, இவருக்காகவே ‘கோகுலம்’ என்கிற சிறார் இதழ் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ‘பூந்தளிர்’ இதழின் ஆசிரியரானார்.
5. ரஸ்கின் பாண்ட்: பிரிட்டன் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய ஆங்கில எழுத்தாளர். 17 வயதிலிருந்து எழுதி வருகிறார். இமயமலையில் இளமைப் பருவத்தைக் கழித்தபோது நிகழ்ந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று ஏராளமாக எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 30 சிறார் புத்தகங்கள் மிகவும் பிரலமானவை. The Blue Umbrella நாவல் இந்தித் திரைப்படமாகவும் வெளி வந்திருக்கிறது.
6. ருட்யார்டு கிப்ளிங்: ‘தி ஜங்கிள் புக்’ தெரியாதவர்கள் இருக்க முடியுமா? ‘ஜஸ்ட் சோ ஸ்டோரீஸி’ல் வெளிவந்த ‘யானைக்கு மூக்கு நீளமானது ஏன்?’ என்கிற கதை இன்றுவரை குழந்தைகளின் விருப்பத்துக்குரியதாக இருக்கிறது. இவை போன்ற புகழ்பெற்ற சிறார் இலக்கியங்களைப் படைத்தவர்.
இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயர். குறிப்பிட்ட காலம்வரை இந்தியாவில் வாழ்ந்தவர். அதனால்தான் தன்னுடைய கதைகளில் இந்தியச் சூழலையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருக்கிறார். மிக இளம் வயதில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர் என்கிற சிறப்பும் கிப்ளிங்குக்கு இருக்கிறது.
7. காமராஜர்: குழந்தைகள் கல்வி கற்பதற்காக, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே ஏராளமான பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தார். இலவச சீருடைகள், புத்தகங்களை வழங்கினார்.
பள்ளியில் உணவுத் திட்டத்தை ஆரம்பித்து, அதைப் பெரிய அளவில் மதிய உணவுத் திட்டமாக நடைமுறைப்படுத்தினார். இவ்வாறு செய்ததன் மூலம் ஏராளமான கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி கற்க முடிந்தது. பல்வேறு அணைகளைக் கட்டினார். தொழிற்சாலைகளையும் உருவாக்கினார்.
8. ஆனந்த் பை: சிறார்களின் விருப்பத்துக்குரிய ‘டிங்கிள்’ பத்திரிகையை ஆரம்பித்தவர். சிறார்களுக்குக் கதை எழுதுவதில் வல்லவர். 1967ஆம் ஆண்டு ‘அமர் சித்ர கதா’ என்கிற பெயரில் சித்திரக் கதைகளை வெளியிட்டார். இதில் இந்தியப் புராணம், வரலாறு, வாழ்க்கை வரலாறு போன்றவற்றைக் கொண்டுவந்தார்.
இந்தப் புத்தகங்கள் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன. இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ராமுவும் சாமுவும், கபீஷ், லிட்டில் ராஜி, ஃபன் லேண்ட் போன்ற சித்திரத் தொடர்கள் ஆனந்த் பையால் உருவாக்கப்பட்டவை. இவரை ‘அங்கிள் பை’ என்று குழந்தைகள் அழைத்தனர்.
9. ஷக்திமான்: குழந்தைகளின் மனங்களைக் கொள்ளைகொண்ட இந்திய சூப்பர் ஹீரோ. 1997-2005 வரை எட்டு ஆண்டுகள் இந்தியக் குழந்தைகள் ஷக்திமானின் சாகசங்களுக்குக் காத்திருந்தனர்.
ஷக்திமான் உடைகளை வாங்கி அணிந்தனர். ஷக்திமான் படக்கதைகளாகவும் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. முகேஷ் கண்ணா ஷக்திமான் கதாபாத்திரத்தில் நடித்தார்.
10. கபீஷ்: புத்திசாலித்தனமும் உதவும் குணமும் கொண்ட கபீஷை விரும்பாதவர்களே கிடையாது. சூப்பர் சக்தி மூலம் கபீஷ் தன்னுடைய வாலை நீண்ட தொலைவுக்கு நீட்டவும் சுருக்கவும் முடியும்.
ஆபத்தில் சிக்கிக்கொள்பவர்களுக்கு இந்த வால் மூலம் கபீஷ் உதவி செய்யும்.
11. ஃபெலுடா: சத்யஜித் ராய் சிறுவனாக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதன் தாக்கத்தால் பிற்காலத்தில் எழுத்தாளரானபோது, ஃபெலுடா கதாபாத்திரத்தை உருவாக்கினார். 1965ஆம் ஆண்டு ‘சந்தேஷ்’ என்கிற வங்கமொழி சிறார் பத்திரிகையில் ஃபெலுடா தோன்றும் துப்பறியும் கதை தொடராக வெளிவந்தது.
சிறார்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஃபெலுடாவைக் கொண்டாட ஆரம்பித்தனர். சித்திரக்கதைகளாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் ஃபெலுடா வெளிவந்து, ஏராளமானவர்களைத் தன்வசமாக்கிக்கொண்டது. இன்று தமிழ் உள்படப் பல மொழிகளில் ஃபெலுடாவின் சாகசங்களை ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
12. அம்புலிமாமா: ஒரு காலத்தில் சிறார்களின் விருப்பத்துக்குரிய பத்திரிகை. 1947ஆம் ஆண்டு பி. நாகி ரெட்டி, சக்கரபாணி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் உள்பட 14 மொழிகளில் வெளிவந்தது. நன்னெறிகளைப் போதிப்பதே இந்தப் பத்திரிகையின் நோக்கமாக இருந்தது.
13. மை டியர் குட்டிச் சாத்தான்: இந்தியாவின் முதல் முப்பரிமாணத் (3டி) திரைப்படம். 1984ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்தது. கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கும்போது, காட்சிகள் திரையிலிருந்து அருகில் வந்த அனுபவம் இந்தியர்களுக்குப் புதிதாக இருந்தது.
சிறார்களையும் பெரியவர்களையும் ரசிக்க வைத்ததால், மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஜிஜோ புன்னூஸ் இயக்கி, நவோதயா அப்பச்சன் தயாரித்த திரைப்படம் இது.
14. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு: 1986ஆம் ஆண்டு முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வேலை செய்வது தண்டனைக்குரிய சட்டமாக இருக்கிறது. அப்படியும் 2011ஆம் ஆண்டு ஓர் அறிக்கையில் இந்தியாவில் சுமார் 25 கோடிக் குழந்தைகளில் ஒரு கோடிக் குழந்தைகள், தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தில் குழந்தைகள் தங்கள் பாரம்பரிய வேலைகளில் ஈடுபடாலாம் என்று இருப்பதால், குழந்தைத் தொழிலாளர்முறையை முற்றிலுமாக ஒழிக்க இயலவில்லை. அரசும் தொண்டு நிறுவனங்களும் குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றன.
15. குற்றாலீஸ்வரன்: 1994ஆம் ஆண்டு, 13 வயதில் நீச்சல் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்தார். அதே ஆண்டு ஆறு கால்வாய்களைக் கடந்து, மிஹிர் சென் என்பவரின் 30 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்தார் இந்தத் தமிழ்நாட்டு வீரர்.
16. கோனேரு ஹம்பி: ஆந்திரத்தைச் சேர்ந்தவர். 2002ஆம் ஆண்டு 15 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பெண் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு.
17. லிடியன் நாதஸ்வரம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், இரண்டு வயதிலேயே இசைக் கருவிகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டார். பியானோ இசை மேதையாக அறியப்படுகிறார். 13 வயதில் அமெரிக்காவில் நடைபெற்ற இசைப் போட்டியில் ஏழு கோடி ரூபாய் பரிசை வென்றார்.
18. ரிதிமா பாண்டே: இந்தியாவின் இளம் சூழலியல் போராளி. ஒன்பது வயதில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சரியானவிதத்தில் கையாள வில்லை என்று மத்திய அரசின் மீது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் கொடுத்தார். காலநிலை மாற்றத்தைக் கண்டுகொள்ளாத நாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் புகார் கொடுத்தார்.
19. மாலவத் பூர்ணா: 2014ஆம் ஆண்டு 14 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்த இளம் இந்தியர், உலக அளவில் இளம் பெண் என்கிற சிறப்புகளையும் பெற்றார். தெலங்கானாவைச் சேர்ந்த இவருடைய கதை, ‘பூர்ணா’ என்கிற பெயரில் இந்தியில் திரைப்படமாக வந்துள்ளது.
20. எட்மண்ட் தாமஸ் க்ளின்ட்: 7 வயது வரையே வாழ்ந்த குழந்தை ஓவியர். சுமார் 25 ஆயிரம் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த இவர் 5 வயதிலேயே 18 வயதுக்குட்பட்டோருக்கான ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார்!