Last Updated : 08 Oct, 2016 12:36 PM

 

Published : 08 Oct 2016 12:36 PM
Last Updated : 08 Oct 2016 12:36 PM

மாடு கிடை போட்டால் பத்தாண்டுக்குப் பலன்

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் வீட்டுக்கு வீடு மாடு வைத்திருந்த காலத்தில், ‘மாடுகளைக் கிடைக்கு அனுப்பி வையுங்கள், மூன்று மாதம் கழித்து மாடுகளை நல்லபடியாகத் திருப்பித் தந்துவிடுகிறோம்’ என மாடு கிடை போடுபவர்கள் மாடுகளைக் கேட்பார்கள். கோடைக் காலத்தில் மேய்ச்சலுக்கு நிலமில்லாமல், கையிருப்பில் இருந்த வைக்கோலும் தீர்ந்துபோகும் நிலையில் இருப்பவர்களின் காதில், இந்த வார்த்தைகள் தேனாகப் பாயும். அப்போதைக்குப் பால் கறக்கும் பசுவை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள காளை, கிடாரி மாடுகளை உடனடியாகக் கிடைக்கு அனுப்பி வைப்பார்கள்.

கீழச்சீமையில் மாடுகள்

ஒரு கிராமத்தில் நூறு, இருநூறு மாடுகளை ஒன்றுசேர்த்துக்கொண்டு ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மட்டும், இதே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் கீழச்சீமை பக்கம் மேய்ச்சலுக்காகச் செல்வார்கள். கீழச்சீமை என்ற பெயரில் காவிரி பாசனப் பகுதியைக் குறிப்பிடுவது உண்டு. இப்பகுதியில் குறுவை, சம்பா அறுவடை முடித்த பின் வயல்களைக் கொஞ்ச காலத்துக்கு ஆறப்போடுவார்கள். இதில் சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்த பின், ஒரு அடி நீளத்துக்கு அடித்தூர் இருக்கும், இதை மாடுகள் விரும்பி உண்ணும்.

கீழச்சீமைக்குச் செல்லும் மாடுகளைப் பகல் முழுவதும் மேய விட்டுவிட்டு, ஒரு வயலில் கிடை போடுவார்கள். மாடுகள் கிடை போட்டுள்ள இடத்தில்தான் விசேஷமே.

மாட்டுக்கும் நன்மைதான்

மாடுகள் இரவு படுத்திருக்கும்போது சிறுநீர், சாணம் ஆகியவற்றை ஒரே வயலில் இடுவதால், அந்த வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைக்கிறது. இந்த நடைமுறை காவிரிப் பாசன மாவட்டங்களில் இன்றும் நடைமுறையில் காணப்படுகிறது. தற்போது தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கிடை அமைத்துவருகின்றனர்.

“கிடைக்குத் தேவையான மாடுகள் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஓட்டி வரப்படுகின்றன. அப்பகுதியில் மேய்ச்சல் நிலம் குறைவாக இருப்பதால், தஞ்சாவூர் பகுதிக்கு வருகிறோம். நாட்டு மாடுகள்தான் எந்தச் சூழலையும் தாங்கும், கலப்பினக் கறவை மாடுகளாக இருந்தால் கிடையில் அனுமதிப்பதில்லை. ரொம்ப காலம் பசுமாடு கன்று போடாமல் இருந்தாலும் கிடைக்கு அனுப்பிவைப்பார்கள். இங்கு பல காளை மாடுகளும் இருப்பதால், பசுக்கள் விரைவில் சினை பிடித்துக் கன்றுகளை ஈனும்.

இப்போது ஓர் இரவு கிடை போடுவதற்கு ஒரு மாட்டுக்கு ரூ. 3 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஒரு கிடையில் 500 மாடுகள்வரை இருக்கும். மாடுகள் கிடை போட்ட வயலை ஒரு வாரம் கழித்து உழுது போட்டால் நல்ல உரமாக மாறும்.

ஈரம் இருக்கும்போது அந்த வயலில் பசுந்தாள், சனப்பு, கொழுஞ்சி ஆகிய செடிகளைத் தெளித்துவிட்டுப் பூக்கும் தருணத்தில் அப்படியே மடக்கி உழுதால் வயலுக்கு நல்ல உரம் கிடைக்கும்” என்கிறார் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த கிடை அமைக்கும் சுப்பையன்.

மூதாதையர் முறையை மீட்க வேண்டும்

“வயலில் ரசாயன உரங்களைத் தெளித்துத் தெளித்து மண்ணை மலடாக்கிவிட்டோம். இப்போது நிலங்கள் வளம் குறைந்து காணப்படுகின்றன. அது விளைச்சலைத் தருவதற்குத் தேவையான வளத்தை மீட்டெடுக்க வேண்டும். நம்முடைய மூதாதையர் ஏற்கெனவே கடைப்பிடித்துவந்த கிடை போடும் முறையை, மீண்டும் பரவலாகக் கையாள வேண்டிய காலம் இது.

‘ஆடு கிடை போட்டால் அந்த ஆண்டே லாபம், மாடு கிடை போட்டால் மறு ஆண்டு லாபம்’ என்பது கிராமத்துச் சொலவடை. ஆனால், ஒரு முறை மாடு கிடை போட்டால் பத்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாகப் பலன் கிடைக்கும். மாடுகளைக் கிடை போடும்போது நாட்டுமாடுகளாக இருந்தால் நல்லது. இப்போதும் வயல்களில் மாடு கிடை போடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாடுகளைக் கிடைக்கு அனுப்பும் வழக்கமும் இப்போது உள்ளது” என்கிறார் தமிழக இயற்கை விவசாய ஒருங்கிணைப்பாளர் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன்.

நெல் ஜெயராமன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x