Published : 03 Jun 2014 12:00 AM
Last Updated : 03 Jun 2014 12:00 AM

கடல் மட்டம் உயர்ந்தால் தமிழகம் என்ன ஆகும்?

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருட உலகச் சுற்றுச்சூழல் நாள் கருப்பொருள், ‘கடல் மட்டத்தை உயர்த்தாதீர்கள், குரலை உயர்த்துங்கள்' என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அறிவித்துள்ளது. அதாவது, உலக வெப்பநிலை அதிகரிப்புக்கு நாம் காரணமாக இருப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு நம் குரலை உயர்த்துவோம் என்பதுதான், இதில் அடங்கியுள்ள செய்தி.

அது சரி, கடல் மட்டம் உயர்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

காரணம் இருக்கிறது. எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வு சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகக் கடற்கரைப் பகுதியைப் பாதிக்கக்கூடும். மேற்கு வங்கத்தில் கடலை ஒட்டி அமைந்துள்ள சுந்தர வனக் காட்டுப் பகுதியில் சில தீவுகள் மூழ்கியேவிட்டன.

உயர்வு ஏன்?

உலகில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரியை அளவுக்கு மீறி எரிப்பதால் வெப்பநிலை மிகுந்து வருகிறது. தொழிற்சாலைகள் மட்டுமில்லாமல், வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, குளிர்பதனப் பெட்டிகள் போன்றவை கிரகிக்கும் கூடுதல் மின்சாரத்தாலும் இது நடக்கிறது. மின்சாரம் தயாரிக்கப்படும் முறை காரணமாகக் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியேறுகின்றன.

மனிதச் செயல்பாடுகளால் வெளியா கும் இத்தகைய வாயுக்களில் 50 சத வீதம் கடலில் சேமிக்கப்படுகிறது. ஆனால், கடல் கிரகிக்கும் அளவைவிட பல மடங்கு கார்பன் டை ஆக்சைடு தற்போது உற்பத்தியாகிறது. அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் தண்ணீர் வெப்பமடைந்து விரிவடைகிறது. மேலும், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனே பூமி அளவு கடந்து வெப்பமடையவும் காரணமாக இருக்கின்றன.

கடுமையான வெப்ப அதிகரிப்பால் கடல் மட்டம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், மனித வரலாற்றில் முதன்முறையாக அண்டார்ட்டிகா, ஆர்டிக் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளும் உருகிவருகின்றன. அவை உருகிக் கடலில் சேர்வதாலும் கடல் மட்டம் கூடுதலாக உயர்கிறது. ஆண்டுக்கு 0.13 அங்குலம் அளவில் கடல் மட்டம் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது கடந்த நூற்றாண்டைவிட 2 மடங்கு அதிகம்.

மிரட்டும் பாதிப்புகள்

இவ்வாறு கடல் மட்டம் உயரும்போது, கடற்கரையைச் சார்ந்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து நேரிடும். மாறி வரும் பருவநிலையால் வெள்ளம், புயல் ஏற்படும்போது கடல் அருகில் உள்ள பகுதிகள் கூடுதலாக அழியும். கடல் மட்டம் உயர்ந்து அருகேயுள்ள நிலப் பகுதிகளிலும் கடல்நீர் நுழையும். அப்போது, விளைநிலங்கள் அழியும். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படலாம். இறுதியில் மனித இனமேகூட இல்லாமல் போகலாம்.

சங்கிலித் தொடர் போன்ற இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் இருக்க, தற்போது நாம் செய்ய வேண்டிய ஒரே வேலை, உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதுதான். அதற்காக வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற வேற்றுமை இல்லாமல் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் ஒவ்வொருவரும் இதில் பங்காற்ற வேண்டியது அவசியம். இதுவே இத்தருணத்தில் நாம் உணர வேண்டிய செய்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x