Last Updated : 21 Oct, 2016 10:43 AM

 

Published : 21 Oct 2016 10:43 AM
Last Updated : 21 Oct 2016 10:43 AM

அலையோடு விளையாடு! 05 - இலங்கை விமான நிலையத்தில் ‘ஒரு விசாரணை’

பிரம்மாண்டமான, காணும் இடமெல்லாம் பனி படர்ந்த இமயமலையின் அடிவாரத்தில் கொட்டிக் கிடந்த பேரழகில் திளைத்திருந்தேன். பிரிய முடியாத மனநிலையுடன் இருந்தாலும் அடுத்த ஐந்து நாட்களில் 5000 கிலோ மீட்டர் பயணித்து சென்னை வழியே இலங்கைத் தலைநகர் கொழும்புவைச் சென்றடைந்தேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தபோது, டாக்ஸி டிரைவர் ஒருவர் அருகே வந்து ‘டாக்ஸி வேண்டுமா, எங்கே போகணும்?’ என்றெல்லாம் கேட்டார். அந்த நேரம் பார்த்துப் போதைத் தடுப்புப் பிரிவு பெண் காவலர் ஒருவரும் அருகே வந்தபோதுதான், அவர்கள் இருவருமே போதைத் தடுப்புக் காவலர்கள் என்பது புரிந்தது.

காவலர்களின் சந்தேகம்

என்னுடைய பேட்லிங் பலகை (SUP) இரண்டாக மடித்து முதுகில் தூக்கிச் செல்லும் வகையில் இருக்கும். அன்றைக்கும் முதுகில்தான் சுமந்து கொண்டிருந்தேன். அது சற்று விநோதமாக இருந்ததால், என்னை அழைத்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை அறிந்தேன். பொதுவாகத் தளவாடப் பொருட்களின் இடையே போதைப் பொருட்கள் கடத்தப்படும்.

விமான நிலையத்தில் இதெல்லாம் இயல்பான நடைமுறை. அது மட்டுமல்லாமல் அந்தப் போதைத் தடுப்புக் காவலர்கள் இதற்கு முன் பேட்லிங் பலகையைப் பார்த்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்போது நான் செய்தது ஒன்றுதான். கையோடு கொண்டு சென்றிருந்த கூகுள் ‘கை கணினியை' இயக்கி என் பேட்லிங் பலகை பற்றியும், என்னைப் பற்றியும் இணையத்தில் வெளியான ஆதாரங்களுடன் விளக்கினேன். நான் யாரென்பதும், எதற்காக வந்திருக்கிறேன் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது, வழியனுப்பிவைத்தார்கள்.

நீரில் பேட்லிங் செய்யும்போது கிடைக்கும் சாகச உணர்வைவிட, பேட்லிங் செய்வதற்காகச் செல்லும்போது கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்களுக்கு எப்போதுமே குறைவு இருக்காது.

விநோதமாகப் பார்த்த மக்கள்

கொழும்புவிலிருந்து நான் செல்ல வேண்டிய இடம் ‘மது கங்கா’. அது 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நான் பயணித்த பேருந்து சென்ற தடம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சீனக் கைதிகளைக் கொண்டு செல்வதற்காகப் போடப்பட்ட சதர்ன் டிரங்க் ரோட்டில் அது சென்றுகொண்டிருந்தது. பழைய நெடுஞ்சாலைகளுக்கு ஆங்கிலேயர்கள் இப்படிப் பெயர் வைப்பது வழக்கம்தான்.

மது கங்காவில், நான் தங்கிய விடுதி படகு துறைக்கு அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் சகல வசதிகளுடனும் அமைந்திருந்தது.

முதல் நாள் பேட்லிங் செய்தபோது அந்த மண்ணின் மைந்தர்கள், சற்றே சந்தேகத்துடன் உற்று உற்றுப் பார்த்தார்கள். அன்றைய நாளுக்கான பேட்லிங்கை வெற்றிகரமாக முடித்த பின்னர், அன்றைக்கே அந்த மக்களுடன் கலந்து உறவாட ஆரம்பித்தேன்.

இரண்டாவது பெரிய சதுப்புநிலம்

இலங்கையின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடு மது கங்கா பகுதியில் இருந்தது. பெரும் வியப்பை ஏற்படுத்தக்கூடிய அந்தக் காடு அடர்த்தியாகவும் இருந்தது சற்றே அச்சத்தைத் தரக்கூடியது. இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள இந்தச் சதுப்பு நிலம் 32 தீவுகளை உருவாக்கியிருக்கிறது. இங்கே 300-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. பழந்தின்னி வௌவால்களின் எண்ணிக்கை அதிகம்.

பாதுகாக்கப்பட்ட அந்தச் சதுப்புநிலப் பகுதியைத் தொட்டு ஓடும் மது கங்கா நதி, பாலபிஸ்டியா என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. மது கங்கா ஆழம் அதிகமற்ற ஒரு ஆறு. காலைப் பொழுதில் மேலடுக்கு நீரோட்டமாகவும் மாலை வந்தால் கீழடுக்கு நீரோட்டமாகவும் மாறிவிடும் இயல்பைக் கொண்டது.

இந்தத் தகவல்களை எல்லாம் புறப்படுவதற்கு முன்பே சேகரித்துவைத்திருந்தேன். அங்கு சென்றதும் விசாரித்து உறுதிப்படுத்திக்கொண்டேன். என்னுடைய இந்த முன் ஆராய்ச்சி, பயணத்துக்கு அத்தியாவசியமான தகவல்களைச் சேகரிக்கவும் பயணத்தைத் தெளிவாகத் திட்டமிடவும் உதவுகிறது. வருமுன் காப்பதும், அது பற்றிய விழிப்புணர்வும் எந்தச் சூழ்நிலையிலும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் தற்காப்பும் அவசியம் என்பது என்னுடைய உறுதியான எண்ணம். இப்படி முன்திட்டமிட்டதாலும், அவசரத் தேவை கருதியும் கொழும்பு செல்லும்போது 110 பொருட்களை என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன்.



கின்னஸ் சாதனையை நோக்கி

உலகிலேயே முதன்முறையாகக் கங்கை நதி தோன்றும் இமயமலையில் இருந்து வங்கக் கடலில் கலக்கும் இடம்வரை பேட்லிங் மூலம் கடக்கும் பயணத்தைச் சர்வதேசக் குழு ஒன்று அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. சுமார் 2,500 கி.மீ. இடைப்பட்ட தொலைவைக் கொண்ட இந்தப் பயணம் மூன்று மாதங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தின் பெயர் ‘கேஞ்சஸ் எஸ்.யு.பி.‘.

இந்தக் குழுவில் நானும் இருக்கிறேன் என்பதுதான் ஸ்பெஷல். கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாகீரதி, அலக்நந்தா ஆறுகள் கலந்து கங்கை என்ற பெயரில் பாய ஆரம்பிக்கும் தேவபிரயாக் பகுதியில் இருந்து, இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கங்கை தோன்றும் இடத்தில் தண்ணீர் மிகவும் தூய்மையாக இருப்பது சிறப்பு. எங்களுடைய குடிநீர் தேவையை ஆற்று நீரைக் குடித்தே பூர்த்தி செய்துகொள்கிறோம். இந்தப் பகுதியில் காட்டாறு போலத் தண்ணீர் பாய்ந்துவருவதால் பேட்லிங் செய்வது கடினமாக இருக்கிறது. எங்களுக்கு உதவியாகத் துடுப்புப் படகு செலுத்துபவர்கள் நான்கு பேர் உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக 15 கி.மீ.க்கு மேல் பேட்லிங் செய்துவருகிறோம்.

எங்களுடைய பயணத்தில் என்ன நடந்தது என்பதை வாரா வாரம் இந்தப் பகுதியில் உங்களுக்குச் சொல்வேன். நீங்கள் அளிக்கும் பின்னூட்டம் எங்களை உற்சாகப்படுத்தும்.

படத்தில் நீங்கள் பார்க்கும் இடம் கௌடில்யா கிராமத்துக்கு முன்னதாக உள்ள நீண்ட கடற்கரையைப் போன்ற ஆற்றங்கரைப் பகுதி.

(அடுத்த வாரம்: அலைக்கழித்த கடலும் எதிரே வந்த முதலையும்)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x