சேதி தெரியுமா? - உடான் விமான சேவைத் திட்டம் தொடக்கம்

சேதி தெரியுமா? - உடான் விமான சேவைத் திட்டம் தொடக்கம்
Updated on
2 min read

பிராந்திய அளவில் விமான சேவைகளை இணைக்கும் திட்டமான ‘உடான்’ கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்தில் பிராந்திய விமான நிலையங்களுக்கிடையே பயணிப்பதற்கான திட்டம் இது. இத்திட்டத்தின் அடிப்படையில் முதல் விமானப் பயணம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்திய விமான நிலையங்களுக்கிடையே பறக்கும் தனியார் விமான நிறுவனங்கள், பாதி இருக்கைகளை இத்திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும். அதற்கான மானியத்தை மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு வழங்கும்.

“ரப்பர் செருப்பு அணிந்தவருக்கும் இத்திட்டம் மூலம் விமானப் பயணம் சாத்தியமாகும்” என்று உள்நாட்டு விமானத் துறை இணையமைச்சர் ஜயந்த் சின்ஹா தெரிவித்தார். ஜனவரி மாதம் முதல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தயார் நிலையில் 16 பிராந்திய விமான நிலையங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் அதிகம் பயணிகளால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் விமான நிலையங்களுக்குப் புத்துயிர்ப்பு வழங்க இத்திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

கொச்சியில் அர்யமான், அதுல்யா

இந்தியக் கடலோரக் காவல் படையின் புதிய கப்பல்களான அர்யமான், அதுல்யா ஆகிய கப்பல்கள் கொச்சியில் கடந்த அக்டோபர் 21 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 20 அதிவேகக் கண்காணிப்புக் கப்பல்களில் 18, 19-ம் கப்பல்கள் இவை. இந்த 2 கப்பல்களும் 50 மீட்டர் நீளம் கொண்டவை. நவீன ஆயுதங்கள், மேம்பட்ட தொடர்புச் சாதனங்கள் ஆகியவற்றைக் கொண்ட இக்கப்பல்களைக் கொண்டு கண்காணிப்பு, தேடுதல் மீட்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். அர்யமான், கொச்சியை அடிப்படையாகக் கொண்டு மேற்குக் கடலோரக் காவல் படைப் பிராந்தியத் தளபதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும். அதுல்யா, விசாகப்பட்டினத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்குக் கடலோரக் காவல் படைப் பிராந்தியத் தளபதியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.

கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயத்தில் நீர்நாய்

ஆந்திர மாநிலத்திலுள்ள கிருஷ்ணா வனவிலங்குச் சரணாலயத்துக்கு அருகிலுள்ள அலையாத்திக் காட்டில் முதல்முறையாக நீர்நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. நீர்நாய்கள் ஒரு பகுதியில் தென்பட்டால் அலையாத்திக் காடுகள் விரிவடைவதன் அடையாளம் அது. நீர்நாய்கள் மாமிச உண்ணி பாலூட்டிகளாகும். கிருஷ்ணா வனவிலங்குச் சரணாலயத்தில் கண்டறியப்பட்ட நீர்நாய்களின் மேல் தோல் மற்ற நீர்நாய்களைவிட மென்மையானது. இந்த வகை நீர்நாய்கள் சிறிய ரோமங்களைக் கொண்டவை; தென் ஆசியப் பிராந்தியத்திலும் தென்கிழக்காசியப் பிராந்தியத்திலும் பரவியிருக்கின்றன. நீர்நாய்கள் அறுகள், ஏரிகள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் முகத்துவாரங்களில் இவை வாழும்.

900-வது ஒரு நாள் போட்டியில் வென்ற இந்தியா

உலக கிரிக்கெட் ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில், 900-வது போட்டியை இந்திய அணி கடந்த அக்டோபர் 16 அன்று எட்டியது. இமாசலப் பிரதேச மாநிலத்தின் தர்மசலாவில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்தியா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 900 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமை இதன் மூலம் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தடுத்த நிலைகளில் அதிக ஒருநாள் போட்டிகளை விளையாடிய அணிகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் (888) பாகிஸ்தானும் (865) உள்ளன.

வலிப்புக்குத் தடுப்பூசி

பன்றிகளிலுள்ள டீனியா சோலியம் நாடாப் புழுக்களால் வரும் வலிப்புநோயைத் தடுக்கும் சிஸ்வாக்ஸ் (CYSVAX) தடுப்பூசியை இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிட்டெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவில் புறக்கணிக்கப்படும் 17 நோய்களில் ஒன்றாக வலிப்பை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. சரியாகச் சமைக்கப்படாத பன்றிக்கறி, காய்கறிகள் மற்றும் சரியாகக் கழுவப்படாத கீரைகள் ஆகியவற்றிலிருந்து மனிதர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படுகிறது.

அவை மனிதர்களின் மைய நரம்பு மண்டலத்தில் கட்டியாக வடிவெடுக்கின்றன. இதன் மூலம் நியூரோ சிஸ்டிசெர்கோசிஸ் ஏற்படுகிறது. இதுதான் வலிப்பு நோய்க்கு முக்கியமான காரணமாகிறது. டீனியா சோலியம் புழுக்கள், திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடங்களிலும் சுகாதரமற்ற சூழல்களில் பன்றிகள் வளர்க்கும் இடங்களிலும் வளர்பவை. வடக்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதனால் ஏற்படும் வலிப்பு நோய் அதிகமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in