

சென்னையில் கடந்த அக்டோபர் 14-ம் தேதி, ‘உருவாகிவரும் எதிர்காலத்துக்கான அறமும் தலைமைப் பண்பும்’ என்ற தலைப்பில் இந்த ஆண்டின் ‘பீக்கன் 2016’ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை லயோலா இன்ஸ்ட்டியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனும் (LIBA), இந்திய தேசிய மனிதவளத் துறைக் கட்டமைப்பும் (NHRDN) இணைந்து ஏற்பாடுசெய்திருந்தன. இந்த மாநாட்டில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட மனிதவளத் துறைத் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். மனிதவளத் துறையில் அறமும் தலைமைப் பண்பும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள் உணரும்படி இந்த மாநாடு அமைந்திருந்தது.
திறமை மேலாண்மை
மனிதவளத் துறையின் முக்கியமான அம்சமாகக் கருதப்படுவது சரியான திறமையை அடையாளம் கண்டுபிடிப்பதுதான். இந்தத் திறமை மேலாண்மையை நிர்வகிப்பதில் சந்திக்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் பற்றி ஜுடஜித் தாஸ் பகிர்ந்துகொண்டார். இவர் ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவருகிறார்.
“ஒரு நிறுவனத்தை வலிமையான அடித்தளத்துடன் கட்டமைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்படி ஒன்றிணைந்து செயல்படுவதற்குத் திறமையானவர்கள் தேவை. எது உங்களுக்குத் தேவையான திறமை, எங்கிருந்து அதைக் கொண்டுவரப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்ய வேண்டியது முக்கியம். ஏனென்றால், இன்று திறமையாகத் தெரிவது நாளை திறமையில்லாமல் போகலாம். அதனால் திறமைகளை எப்படிக் கட்டமைக்கிறீர்கள், எப்படி வாங்குகிறீர்கள் என்பதே மனிதவளத் துறையில் முக்கியம்” என்றார் ஜுடஜித் தாஸ்.
இந்தத் திறமைகளைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் அவர், “ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் வளர்ச்சியடையும்போது, அதற்குத் தேவையான திறமைகளை வெளியிலிருந்து தேடி எடுப்பது ஒரு வழி. இன்னொரு வழி ஏற்கெனவே உங்கள் கைவசம் இருக்கும் சரியான திறமைகளைப் பயிற்சி கொடுத்து வளர்த்துவிடுவது. என்னுடைய அனுபவத்தில், இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தினேன்” என்கிறார்.
பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு
ஒரு பெருநிறுவனம் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது, அது அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் மனோபாவத்தில் நேர்மறையான தாக்கத்தை உடனடியாக ஏற்படுத்தும். ‘சிஎஸ்ஆர்’ (Corporate Social Responsibility) என்று அழைக்கப்படும் இந்த அம்சத்தை நிர்வகிப்பதும் மனிதவளத் துறையின் ஒரு பகுதிதான். இதைப் பற்றி சென்னை ஃபோர்ட் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர் கங்காபிரியா சக்கரவர்த்தி மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு நிறுவனம் சமூகப் பொறுப்புடன் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு நிறுவனத்தின்மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். நிறுவனத்தின் வெற்றிக்கு முனைப்புடன் பங்களிக்கத் தூண்டும். உணர்வுரீதியான பந்தத்தை நிறுவனத்தின்மீது உருவாக்கும். அதனால் இயல்பாகவே வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். ஐந்தில் நான்கு ஊழியர்கள் சுற்றுச்சூழல் பொறுப்புடன் நடந்துகொள்ளும் நிறுவனங்களில் பணியாற்ற விரும்புகின்றனர். ஒரு நிறுவனம் சமூகம் சார்ந்த தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, 86 சதவீத ஊழியர்கள் அந்த நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இந்த நடவடிக்கைகளில் பங்கேற்பவர்களிடம் தலைமைப் பண்பும் மேலாண்மைத் திறன்களும் நாளடைவில் அதிகரிப்பதைப் பார்க்க முடியும்” என்கிறார் கங்காபிரியா.
அறத்தின் விளைவுகள்
ஒரு நிறுவனம் அறம் சார்ந்து செயல்படுவதால் ஊழியர்களின் மனோபாவத்திலும் நடத்தையிலும் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்த முடியும். இந்த அறம் சார்ந்து செயல்படுவதில் இருக்கும் பல்வேறு அம்சங்களைச் சென்னை இன்ஃபோசிஸ் மனிதவளத் துறை வர்த்தகத் தலைவர் சுஜித் குமார் பகிர்ந்துகொண்டார். “மனிதவளத் துறையின் ‘கோல்டன்’ விதி என்பது மனிதர்களைக் கையாளுவதுதான். ஒரு சூழ்நிலையில் நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறோம் என்பதை மனதில்வைத்துதான் மற்றவர்களை நடத்த வேண்டும்.
பொதுவாகவே ஊழியர்கள் நிறுவனத்தால் மதிப்புடன் நடத்தப்பட வேண்டுமென்றும், நம்பப்பட வேண்டுமென்றும், தங்களுடைய கருத்துகளுக்கும் செவிசாய்க்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் யாரும் நிறுவனத்தால் நேசிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை. இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டாலே ஒரு நிறுவனம் அறத்துடன் செயல்பட முடியும்” என்கிறார் அவர்.
இன்றைய ‘ஜென் ஒய்’ தலைமுறையை நிர்வகிப்பது கடினமானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லும் அவர், “அவர்கள் பன்முகத் திறமைகளுடன் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்துடன் எப்போதும் இணைப்பில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை நியாயம் இல்லை என்று நினைத்தால் அதை வெளிப்படையாகத் துணிச்சலுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த அணுகுமுறையில் எந்தத் தவறும் இல்லை. இதுவும் ஒருவழியில் அறம்சார்ந்த செயல்பாடுதான்” என்கிறார்.
இது தவிர நிறுவனம் ஆன்மிக அணுகுமுறையுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம், விழுமியங்களுடன் தலைவர்களை உருவாக்குவதில் இருக்கும் சவால்கள் போன்ற தலைப்புகளிலும் இந்த மாநாட்டில் சிறப்புரைகள் இடம்பெற்றன.
ஒரு நிறுவனம் அறம் சார்ந்து செயல்படுவதால் ஊழியர்களின் மனோபாவத்திலும் நடத்தையிலும் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்த முடியும்.