Last Updated : 10 Jun, 2014 10:00 AM

 

Published : 10 Jun 2014 10:00 AM
Last Updated : 10 Jun 2014 10:00 AM

அழிந்துகெட்ட புதுவை ஏரிகள்

காலச் சக்கரம் எவ்வளவு விரைந்து சுழல்கிறது! மிகக் குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய மாறுதல்கள்! எல்லா மாறுதல்களும் இயற்கை சூழல் அழிவை ஏற்படுத்துபவையாகவே இருப்பதுதான் வருத்தம் தருகிறது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் புதுச்சேரி நகரமும் அதைச் சுற்றி முப்பது கல் சுற்றளவுக்கு உள்ளே இருக்கும் சிற்றூர்களும் எனக்கு நன்கு பழக்கம். மிதிவண்டியிலேயே எல்லா இடங்களையும் சுற்றியிருக்கிறேன். சாலையோரம் எத்தனை ஏரிகள்! எவ்வளவு செழுமையான நன்செய் நிலங்கள்! எவ்வளவு புன்செய் நிலங்கள்! அவற்றில் கால் பகுதிகூட இன்றில்லை.

புதுவைப் பகுதியில் மட்டும் 86 ஏரிகள் இருந்ததாகக் கூறுவர். நானே இருபதுக்கு மேற்பட்ட ஏரிகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சில பெரிய ஏரிகளைத் தவிர, மற்றவற்றில் பல தூர்க்கப்பட்டுவிட்டன. சில கரையோரம் வெறுங்குட்டைகள் போலக் காட்சியளிக்கின்றன. முதலாளிகள் ஏரிப்படுகைகளைப் படிப்படியாக அரித்துத் தின்றுவிட்டனர்!

தீர்ந்த தண்ணீர்

விளைவு என்ன? நிலத்தடி நீர் கடும் வறட்சிக்கு உள்ளாகியிருப்பதுதான். முன்பெல்லாம் வயல் கிணறுகள் முப்பது, முப்பத்தைந்து அடி ஆழமே இருந்தன. அவற்றில் எப்பொழுதும் 20 அடி நீர் நிரம்பியிருக்கும். ஒருநாள் முழுவதும் இறைத்தாலும்கூட, மறுநாள் முழுவதும் நிரம்பிவிடும். புதுவை நகரின் வீடுகளில் கூடப் பின்புறம் குடிநீருக்காக அடிகுழாய் அமைத்தால் பதினைந்தடி ஆழத்தில் நீர் ‘குபுகுபு’ என்று வந்துவிடும். இப்பொழுது வயல் பகுதிகளில்கூட ஆழ்துளைக் கிணறுகள் 750 அடிவரை போகின்றன.

நான் 1959-ல் காரைக்காலில் இனிய குடிநீர் அருந்தினேன். மீண்டும் 1988-ல் அங்குப் பணிபுரியச் சென்றபோது குடிநீர் உப்பாயிருந்தது. கடற்கரையோரம் நிலத்தடி நன்னீரை மிகுதியாக உறிஞ்சி எடுத்துவிட்டதால், கடல்நீர் கசிந்து எஞ்சிய நன்னீருடன் கலந்துவிட்டது!

ஊசுட்டேரியின் அழிவு

புதுவைக்கு அழகும் வளமும் தந்தது மிகப் பெரிய ஊசுட்டேரி. பாசன ஏரியாகவும் பறவைகளின் புகலிடமாகவும் அது திகழ்ந்தது. வளர்ச்சி, முன்னேற்றம் என்று ஏரி அருகேயிருந்த நன்செய், புன்செய் நிலங்களை நில விற்பனையாளர்கள் வாங்கி மனை பிரிக்கத் தொடங்கியபோது புதுவையின் இயற்கையன்பர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுமாகச் சென்று புதுவை முதல்வரையே கண்டோம்.

செழுமையான பாசன நிலங்களையும் அவற்றின் வழி ஏரியையும் காப்பாற்றும்படி மன்றாடினோம். வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரால் எங்கள் வேண்டுகோள் மறுக்கப்பட்டது. பின்புதான் தெரிந்தது இந்தக் கொள்ளையில் புதுவை அரசுக்கும் பங்குண்டு என்று! இன்று அங்கேதான் புதுவை அரசின் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நடத்தும் நாகரிகப் பொழுதுபோக்குப் பூங்கா, மக்கள் பணத்தை நன்கு உறிஞ்சி கொழுக்கிறது. ஏரிக்கரைச் சாலை நெடுக நெகிழிப் பை (Plastic bag) குப்பைகள்.

சில ஆண்டுகளுக்கு முன் புதுவை வந்திருந்த பிரான்சு நாட்டுப் பெண்மணி ஒருவர் நகர் முழுதும் ஒரே நெகிழிக் குப்பைக் காடாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். "இந்தச் சீர்கேட்டில் நூற்றில் ஒரு பங்கு எங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்தால், மீண்டுமொரு (பிரெஞ்சுப்) புரட்சியே எங்கள் நாட்டில் ஏற்பட்டிருக்கும்" என்றார்.

ஏரியில் ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகள் வாழ்ந்திருந்தன.

இன்று கொக்குகள், வாத்துகளைத் தவிர அரிய நாரை வகைகள் வருவது நின்று போய்விட்டது!

எது வளர்ச்சி?

வளர்ச்சியும் முன்னேற்றமும் தேவையே, ஆனால் அளவோடும் கவனத்தோடும் மேற்கொள்ள வேண்டும். சகட்டுமேனிக்கு எல்லா இயற்கை சூழலையும் அழித்து விட்டதால் நிலம், நீர், காற்று எல்லாம் மாசுபடுகின்றன. படிப்படியாய்க் கெட்டழிகின்றன. மக்களுக்குப் புதிய புதிய நோய்கள் வருகின்றன.

1961-ல் புதுவை நகரில் (சிற்றூர்களுக்கும் சேர்த்து) ஐந்தே ஐந்து ஆங்கில மருந்துக் கடைகளே இருந்தன! இன்று அவை ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளனவே இது வளர்ச்சியா, முன்னேற்றமா? அல்லது நோய்கள் பெருகிப் போனதற்கு அடையாளமா?

ஏரிகளைப் பற்றி கூறிக்கொண்டிருந்தேன். இன்று புதுவையின் புதிய பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது.

ஆனால் அது வறளும் நிலை அடைந்த பொழுது பேருந்து நிலையத்துக்காக அதைத் தூர்க்க வேண்டியதாயிற்று. இதைக் குறை சொல்ல முடியாதுதான்.

பாகூர் ஏரி

ஆனால், ஊசுட்டேரிக்கு அடுத்த பெரிய ஏரி பாகூர் ஏரி. அதைச் சுற்றியுள்ள வயல்களுக்கு நீருடன் அது நல்ல செழுமையையும் தந்துவந்தது. ஏரிக்குள் நூற்றுக்கணக்கான நீர்கடம்பை மரங்கள். ஆயிரக்கணக்கான பறவைகள் அவற்றில் வாழ்ந்தன. நாள்தோறும் அவை இடும் எச்சம் நீரில் விழுந்து கரைந்து, வயல்களுக்கு நல்ல உரமாகப் பயன்பட்டது. மேலும் அப்பறவைகள் உயிருள்ள பூச்சிக்கொல்லிகளாக விளங்கிப் பயிர்களைப் பாதுகாத்தன. நச்சு பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லாதிருந்தன.

மேலும், ஏரி நடுவேயுள்ள மரங்களின் நிழலும் பசுமையும் குளிர்க்காற்றும் கதிரவனின் வெப்பத்தை மட்டுப்படுத்தி நீர் ஆவியாகாமல் தடுத்தன. ஆனால், யாரோ மெத்தப் படித்த ஒரு பொறியாளர் மரங்கள் நின்றால், ஏரியின் கொள்ளளவு குறைந்துவிடும் என்று அத்தனை மரங்களையும் வெட்டி தள்ளினார். இதன்

விளைவு என்ன என்பதை அப்பக்கம் வாழும் உழவர் பெருமக்களிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்.

அலையாற்றிகள் அழிவு

அலையாற்றிகள் எனப்படும் சதுப்புநில மரங்கள் (Mangroves) இயற்கை மனிதனுக்கு அளித்த பெருங்கொடை. பல இடங்களில் கடற்கரையோரம் அவை நெருக்கமாக வளர்ந்து கடல்நீர் கரையைத் தாண்டி வராமல் தடுக்கின்றன. ஆங்காங்கே அலையாற்றிக் காடுகள் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் 2004-ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) எனும் கடல்கோளின்போது ஏற்பட்ட பேரழிவு, பாதிக்குமேல் தடுக்கப்பட்டிருக்கும் என்று சூழலியல் அறிஞர் வருந்திக் கூறியுள்ளனர்.

புதுவை அரியாங்குப்பம் கழிமுகப்பகுதியில் ஒரு காலத்தில் அலையாற்றிக் காடுகள் ஓங்கி வளர்ந்திருந்தன. அவை கழிமுகத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தன. அவை அழிக்கப்பட அழிக்கப்படக் கடல் நீரின் உள்வரவு அதிகமாயிற்று. நல்ல வேளையாகப் புதுச்சேரி இயற்கைக் கழகத்தினரும் பிற சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியதால், இன்று அலையாற்றிகள் காப்பாற்றப்பட்டுப் புத்துயிர் பெற்று வளர்ந்து செழிக்கின்றன.

இயற்கை பற்றியும் சுற்றுச்சூழல் சமநிலை பற்றியுமான விழிப்புணர்வை நம் கல்வி முறை மக்களுக்கு ஊட்டத் தவறியதாலேயே தீமை பயக்கும் இயற்கைச் சீரழிவுகள் நேர்ந்துவருகின்றன. இனியாவது விழிப்புடன் இருந்து இயற்கையைக் காத்து நம்மையும் காத்துக்கொள்வதே அறிவுடைமை.

ம.இலெ.தங்கப்பா- கட்டுரையாளர், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x