Published : 07 Oct 2016 08:34 am

Updated : 07 Oct 2016 08:34 am

 

Published : 07 Oct 2016 08:34 AM
Last Updated : 07 Oct 2016 08:34 AM

நான் தோனியாக நடிக்கவில்லை! - நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பேட்டி

இந்தியில் தயாராகி, இந்தியாவின் மாநில மொழிகளிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘எம். எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம். இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்புக்குப் பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தன்னை தோனியாக மாற்றிக்கொள்வதற்கு மேற்கொண்ட கடினமான செயல்முறைகள், ஹெலிகாப்டர் ஷாட் பின்னணி என ‘தோனி’ திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் சுஷாந்த் சிங்.

இரண்டு பேருமே இந்தியாவின் மையப் பகுதிகளில் ஒன்றான பிஹாரிலிருந்து வந்து அவரவர் துறைகளில் சாதித்திருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, உங்களுடைய வாழ்க்கைக்கும் தோனியின் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒற்றுமைகள் இருக்கின்றனவா?


நாடகத் துறையிலிருந்துதான் என் நடிப்புப் பயணம் தொடங்கியது. அப்போது ஒரு கதாபாத்திரத்தை ஏற்கும்போதே, அதற்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமைகள், வேற்றுமைகள் இரண்டையும் கண்டறிந்து வைத்துக்கொள்வேன். அதற்குப் பிறகு, எனக்கும் அந்தக் கதாபாத்திரத்துக்கும் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவேன். ஆனால், திவாகர் (பேனர்ஜி), சேகர் கபூர் இருவருடன் பணியாற்றிய பிறகு, என்னுடைய இந்தச் செயல்முறை மாறியிருக்கிறது.

வீண் பெருமிதத்துக்குரிய சுய உணர்வு தேவையில்லை என்பதை இப்போது அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது ஓர் ஆளுமையாக நடிப்பதற்கு முன், அந்த நபர் போலவே நீண்ட காலத்துக்கு யோசிக்கிறேன். இயல்பாகவே, அந்த நபரைப் போல நடந்துகொள்ளும்வரை இந்தப் பயிற்சியைச் செய்கிறேன். ஒரு புது மொழியைக் கற்பதுபோலத்தான். நிறைய கவனிப்பதிலிருந்து இது தொடங்குகிறது. என்னுடைய ஆழ்மனம் உள்வாங்கிகொள்ளும்வரை இந்தப் பயற்சியைச் செய்கிறேன்.

எல்லாப் படங்களும் இதைச் செய்வதற்கான அதிகப்படியான நேரத்தை உங்களுக்கு வழங்குகின்றனவா?

‘எம்.எஸ். தோனி...’ படத்துக்குத் தயாராக எனக்குப் பதின்மூன்று மாதங்களாகின. எனக்குக் கிடைத்த அவருடைய ஒவ்வொரு வீடியோவையும் பல முறை பார்த்தேன். அதுதான் தொடக்கம். மூன்று மாதங்களுக்குப் பிறகு, என்னைச் சந்தித்தவர்கள் என்னிடம் தோனியின் சாயல்கள் தென்படுவதாகத் தெரிவித்தனர். நான் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரிந்தது.

அதற்குப் பிறகு, இயக்குநரின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, கதாபாத்திரத்தை ஆராயத் தொடங்கினேன். அவர் ஒவ்வொரு காட்சியையும் எப்படி முடிக்க நினைக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்தக் காலகட்டம் முழுவதும் நான் தோனியைச் சந்தித்துக்கொண்டிருந்தேன்.

தோனியுடனான உரையாடல்கள் எப்படி இருந்தன?

எங்களுடைய முதல் சந்திப்பில், அவர் தனிப்பட்டவாழ்க்கையிலும், பணி வாழ்க்கையிலும் கடந்த வந்த பாதையைப் பற்றி கேட்டேன். அதை கவனிக்க மட்டும் செய்தேன். சில மாதங்களுக்குப் பிறகு, அவருடைய எண்ணங்கள், நம்பிக்கைகள், பயங்கள், ஆசைகள் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் எப்படி முடிவெடுப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள 250 கேள்விகளுக்கு பதிலளிக்கச் சொன்னேன். நம்பிக்கை வருவதற்காக இந்த மாதிரி ஆய்வுகள் செய்யவேண்டியிருக்கும். முதல் நாள் படப்பிடிப்பில், நான் தோனியைப் போல நடிக்கவில்லை, நானே தோனியாக இருந்தேன்.

உண்மையிலேயே, ஒரு கதாபாத்திரத்துக்குத் தயாராக இவ்வளவு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அப்படி அவசியமில்லை. இந்தப் படத்தில் நான் அவரைப் போல தெரிய வேண்டும் என்பது முக்கியமாக இருந்தது. எங்களுடைய படப்பிடிப்பு பின்னோக்கி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்ததால், நான் 74 கிலோ எடையை இருந்து 89 கிலோவாக எடை அதிகரிக்க வேண்டியிருந்து. அதற்குப் பிறகு, 70 கிலோவாகக் குறைய வேண்டியிருந்தது. அத்துடன், நான் கிரிக்கெட் ரசிகனாக இருந்தாலும், விளையாட்டில் அவ்வளவு திறமைசாலி இல்லை. அதனால், பேட்டிங், விக்கெட்-கீப்பிங் என இரண்டிலும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

இரண்டில் எதை விரும்பினீர்கள்?

விக்கெட்-கீப்பிங் என்றுதான் நினைக்கிறேன். விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ‘அய்யோ, கேட்சை விட்டுவிட்டான்’ என்று சொல்வது எளிது. ஒரு பந்து 0.7 நொடியில் உங்களுடைய கைகளுக்கு வரும். பந்தைப் பிடிக்காமல் விட்டால் அடிப்படும். அப்படி நான் அடிப்பட்டுக்கொண்டேயிருந்தேன். எனக்கு வலி மரத்துப்போகும் அளவுக்கு இந்தப் பயிற்சியைச் செய்தேன்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும் அடித்திருந்தீர்கள்...

என்னுடைய கிரிக்கெட் பயிற்சி, அடிப்படைகளுடன் தொடங்கியது. அதனால், நான் கிரிக்கெட் வீரர் போல காட்சி மட்டும் அளிக்கவில்லை. கிரிக்கெட் வீரர்போல யோசிக்கவும் செய்கிறேன். நான் கிரண் மோர் சாருடனும், ரஞ்சி அணி ஆய்வாளருடனும் இணைந்து பயிற்சிசெய்தேன். அவர் ஹெலிகாப்டர் ஷாட்டின்போது எப்படி எடை இடம் மாறுகிறது, அது எப்படி கேமராவில் தெரிய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கினார். நான் முதலில் பந்து இல்லாமல் பயிற்சி செய்வேன். அதற்கு பிறகு, மோர் சார் எந்திரத்தின் மூலம் பந்து வீசுவார். ஒரு நாளைக்கு 200 லிருந்து 300 முறை பயிற்சிசெய்வேன்.

எம்.எஸ். தோனியாக இருந்ததை எப்படி உணர்ந்தீர்கள்?

நாம் ஒவ்வொரு விஷயத்தையும் வெற்றி, தோல்வியை வைத்துதான் தீர்மானிக்கிறோம். வாழ்க்கையை அவர் அப்படிப் பார்க்கவில்லை. ஒரு விஷயத்தை ஆர்வத்தாலும் உற்சாகத்தாலும்தான் செய்கிறார். உளவியல் பாதுகாப்பு, பணி வாழ்க்கை, உறவுகள், பணம் போன்றவற்றின் தேவைகளின் அடிப்படையில்தான் நம்முடைய நடத்தை இருக்கும். அதனால், பயம் ஏற்படும். அது நம்மையும், நம் முடிவுகளையும் பாதிக்கும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருந்தால், அந்தந்தத் தருணத்தில் வாழ்வதற்கான சுதந்திரம் நமக்குக் கிடைக்கும். தோனி எப்படிச் செய்கிறாரோ அப்படி. அது மிகவும் சுதந்திரமான உணர்வு.

ஒருவேளை, தோனி விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவருக்கு பதிலாக ஒன்றிரண்டு விளையாட்டுகளில் விளையாடுவீர்களா?

நான் பட்ட காயங்களையெல்லாம் வைத்துபார்க்கும்போது, நான் நடிப்போடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது (சிரிக்கிறார்).

© தி இந்து (ஆங்கிலம்) | தமிழில்: என். கௌரிஎம். எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரிதோனி திரைப்படம்சுஷாந்த் சிங் ராஜ்புத்இந்தி நடிகர் பேட்டிசுஷாந்த் சிங் பேட்டிதோனி நடிகர்ஹெலிகாப்டர் ஷாட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x