

அண்மையில் நண்பர் ஒருவரின் தாய் சிறுநீரகச் செயலிழப்பால் உயிரிழந்தது பேரதிர்ச்சியை அளித்தது. “அம்மா சின்ன தலைவலி என்றுகூடப் படுத்ததில்லை” என்று சொல்வார். நாங்களும் அவரைப் பார்த்திருக்கிறோம். எப்போதும் இன்முகத்துடன் சுறுசுறுப்பாக வளையவருவார். எழுபது வயதிலும் அரை மணியில் பத்து பேருக்குச் சமைத்துப்போடக் கூடியவர். கண்ணாடி அணியாதவர், மருத்துவமனை பக்கம் தலைவைத்துப் படுக்காதவர், ஐந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அவர் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவருக்குச் சிறுநீரகத்தில் எப்படிக் கோளாறு ஏற்பட்டுச் செயலிழப்பு நடந்திருக்கும் என்ற எங்கள் கேள்விக்கு அவரது மருத்துவமனை ஆய்வறிக்கைகள் கொடூரமான விடைகளைத் தந்தன. லேசான தலைவலி, பல்வலி, உடல்வலி என்று எது வந்தாலும் கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை அள்ளி அள்ளி விழுங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்பவர், தனக்கு மட்டும் இப்படிக் குறுக்கு வழிகளையே நாடியிருக்கிறார். வலி நிவாரணி மாத்திரைகளில் உள்ள நச்சு வேதிப் பொருட்கள் சிறுநீரகங்களைத் தாக்கிச் செயலிழக்க வைத்ததில் உயிரிழந்து விட்டார்.
ஆஜானுபாகுவான உடல். நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் என்று மரபு ரீதியான எந்த நோய்க்கூறுகளும் இல்லை. நூறு வயது வரை வாழ்ந்திருக்கக் கூடியவர் கொடிய வலியுடன் உடல் உறுப்புகள் செயலிழக்க, அகால மரணமெய்தியது பெரும் சோகம்.
சுதந்திரமா ஆரோக்கியமா?
பெரிய குடும்பம், குழந்தைகள் பொறுப்பு என்று எல்லாம் இருந்தாலும் தனது ஆசிரியப் பணியை மனதார நேசித்தவர் அப்பெண்மணி. ஒரு நாளைக்குப் பலமணி நேரம் நின்று பாடமெடுத்த பின்பு வீட்டிலும் யாரும் ஒரு சொல் சொல்லிவிடக் கூடாது என்று இழுத்துப் போட்டுக்கொண்டு வேலைகளைச் செய்ததன் விளைவாகக் கடுமையான கால்வலியில் அவதி யுற்றார். எலும்புச் சிகிச்சை நிபுணரைப் பார்க்குமாறு பரிந்துரைத்த மருத்துவரின் ஆலோசனையைக் காற்றில் பறக்க விட்டார்.
உடல்நிலையைப் பெரிதுபடுத்தினால் வேலையை விடச் சொல்லிவிடுவார்கள் என்று அஞ்சி, கணவருக்கும் பிள்ளை களுக்கும் ஏதும் தெரிவிக்கவும் இல்லை. வலி குறைவதற்காக மருத்துவர் கொடுத்த ஸ்டீராய்டு ஊசிகளைத் தானே வாங்கிப் போட்டுக்கொள்ளத் தொடங்கினார். ஒரு சில ஆண்டுகளிலேயே கடுமையான கீல்வாதத்தால் (arthritis) தாக்கப்பட்டு ஐம்பது வயதுக்குள் வீட்டுக்குள் முடங்கினார். உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிட்டியிருந்தால் அவரது உடல்நிலையும் மோசமடைந்திருக்காது. பணியிலும் தொடர்ந்திருப்பார்.
திசைமாற்றும் விளம்பரங்கள்
சமையல் எண்ணெய், ஊட்டச்சத்து பானங்கள், தின்பண்டங்கள், டீ என்று எதை எடுத்தாலும் ‘தங்கள் குடும்பத்தினரின் உடல்நலன் மீது அக்கறை கொண்ட பெண்களை’ குறிவைத்தே விளம்பரப் படங்கள் எடுக்கப்படும். ஆனால், வலி நிவாரண மருந்துகளுக்கு மட்டும் பெண்களின் முதுகும் இடையும் தேவைப்படுகின்றன. ‘வேலைகளுக்கு இடையூறாகத் தோன்றும் வலி இந்த மருந்துகளால் ஓரிரு நிமிடங்களில் சரியாகிவிடும். மீண்டும் நீங்கள் சிரித்த முகத்துடன் பம்பரமாகச் சுழலலாம்’ என்பதே இவ்விளம்பரங்கள் விதைக்கும் கருத்து.
வலி நிவாரணம் என்பதைத் தாண்டி, படித்த பெண்களிடம்கூடப் பெண்களைக் குறிப்பிட்டுத் தாக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், எலும்புப்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 1,22,844 பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், 67,477 பேர் இந்த நோயால் இறக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக எழும் குரல்களில் பாதிகூட இந்த நோய்த் தடுப்புகள் குறித்து எழுவதில்லை. பெரும்பாலான பெண்களிடம் தங்கள் உடல் எடை, அழகு குறித்த கவலை இருக்கும் அளவுக்கு ஆரோக்கியம் குறித்த தெளிவு இருப்பதில்லை.
மனமே நலமா?
உடல் நலன் மட்டுமல்ல, மனநலத் திலும் பெண்களுக்கு அக்கறை இருப்பதில்லை. ‘குடும்பம்னா சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும், பொறுத்துப் போ’ என்று பெண்களுக்கு அறிவுறுத்தாதவர்களே கிடையாது. இதுபோன்ற ஆயிரமாயிரம் மன அழுத்தங் களை எத்தனை எத்தனை யுகங்களாகச் சுமக்கிறார்கள் பெண்கள்! அவர்களை ஆற்றுப்படுத்தவோ அவர்களது பிரச்சினைகளுக்குச் செவிசாய்க்கவோ யாரும் இருப்பதில்லை. காதலிலோ திருமண வாழ்விலோ பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் கூறும் போக்கினால் உண்டாகும் மன அழுத்தம் அவர்களைத் தற்கொலை வரை கொண்டு செல்கிறது.
உணவுப் பங்கீட்டில் வேறுபாடு
இன்னும் பல வீடுகளில் எவ்வளவு மணி நேரம் உழைத்துச் சமைத்தாலும் பெண்களுக்குக் கடைசி பந்திதான். காலை உணவைப் பந்தி இட்டு எழும் முன் மதிய உணவு சமைக்கும் நேரமாகிவிடுவதால் காலை உணவைத் துறக்கும் தாய்மார்களுக்கு அல்சர் வருவது இன்றளவும் வழக்கமான ஒன்று.
மகன்களுக்கும் மகள்களுக்கும் உணவுப் பங்கீட்டில் வேறுபாடு காண்பிப்பதுகூட நமது பெருமைமிக்க பாரம்பரியங்களுள் ஒன்றுதான். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் குழந்தை வளர்ப்பில் காட்டும் பாலின வேறுபாடுகளைக் களைந்தாலே பெண்களுக்கு எதிரான பல கொடுமைகளைக் களைந்து விடலாம்.
அழுத பிள்ளைக்குத்தான் பால் என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ பெண்களுக்குச் சாலப் பொருந்தும். இந்தச் சமூகத்தில் கதறியழுதுதான் பெண்கள் அடிப்படை உரிமைகளைக்கூடப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: deepa.j.joseph@gmail.com