Published : 22 Jul 2022 08:10 AM
Last Updated : 22 Jul 2022 08:10 AM

கோலிவுட் ஜங்ஷன்: கவனிக்கப்படும் காளிதாஸ்!

கமல் - லோகேஷ் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘விக்ரம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காளிதாஸ் ஜெயராம்.

சிறந்த சிறார் நடிகருக்கான தேசிய விருது பெற்று மலையாள சினிமாவில் வளர்ந்து வந்த அவர், தமிழில் கதாநாயகனாக அறிமுகமான ‘மீன்குழம்பும் மண் பானையும்’ எடுபடாமல் போனது. இந்நிலையில் ‘பாவக் கதைகள்’ அந்தாலஜி படத்தில் ‘சத்தார்’ என்கிற திருநம்பியாக நடித்து கவனம் ஈர்த்தார்.

தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரம் ஏற்றுள்ளாராம். இதற்கிடையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தின் ஒரிஜினல் படைப்புகள் வரிசையில் உருவாகியிருக்கும் ‘பேப்பர் ராக்கெட்’ இணையத் தொடரில் காளிதாஸ் ஜெயராம்தான் நாயகன்.

நேற்று வெளியான இத்தொடரின் ட்ரைலர் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், வரும் 29ஆம் தேதி இத்தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகும் என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்!

கலை இயக்கத்துடன் நடிப்பும்!

‘இரவின் நிழல்’ படத்தின் இசை, ஒலியமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு இணையாகப் பாராட்டப்பட்டு வருகிறது கலை இயக்கம். ஒரே இடத்தில் போடப்பட்ட 72 செட்களை 4 ஆயிரம் தொழிலாளர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார் படத்தின் கலை இயக்குநரான ஆர்.கே.விஜய் முருகன்! “படத்தில் வரும் காளஹஸ்தி கோயில் செட், பாழடைந்த ஆசிரம செட், அதன் முன்னால் முகப்பில் பசுமை குன்றாமல் மண்டிக்கிடக்கும் கோரைப் புற்களையும் குறிப்பிட்டு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்” எனும் விஜய் முருகன் ஒரு பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார். ‘கோலி சோடா’ தொடங்கி ‘சாணிக் காயிதம்’ வரை இதுவரை பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக… !

தயாரிப்பில் இருந்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார் குணச்சித்திர நடிகர் இளங்கோ குமரவேல். பெரும்பாலான படங்களில் இடம்பெற்றுவிடும் இவரை, கதை நாயகனாக உயர்த்தியிருக்கிறார் சிவா.ஆர். தஞ்சாவூரிலிருந்து சென்று சிங்கப்பூரில் செட்டிலான இவர் எழுதி, இயக்கித் தயாரித்திருக்கும் படத்தை, தஞ்சையில் தன்னுடைய சொந்த கிராமத்தில் படமாக்கி முடித்திருக்கிறார். ‘காரோட்டியின் காதலி’ என தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இதில் இளங்கோ குமரவேலுவுக்கு ஜோடியாக ஜானகி நடிக்கிறார். படத்துக்கு இசை ரகுநந்தன்.

போரும் காதலும்!

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் துல்கர் சல்மான், பிரபல தெலுங்கு இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்திருக்கும் நேரடித் தெலுங்குப் படம் ‘சீதா ராமம்'.

துல்கருக்கு தென்னிந்திய சினிமாவைத் தாண்டி பாலிவுட்டிலும் ரசிகர்கள் இருப்பதால்,‘சீதா ராமம்’ பான் இந்தியா படமாகிவிட்டது! அதற்கு ஏற்றாற்போல், கதையும் அமைந்துவிட்டது.

இந்திய ராணுவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரியும் நாயகனுக்கும் அவருடைய காதலிக்கும் இடையில் நடைபெறும் கடிதப் போக்குவரத்தும் அதன் வழியே விரியும் அவர்களது காதலும்தான் களம். படத்தில் போரும் உண்டு என்று கூறியிருக்கிறார் இயக்குநர்.

இதுவரை டீசர், மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி மிருணாள் தாக்கூர் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் ரஷ்மிகா மந்தனாவுக்கு மவுசு கூடிக்கொண்டு வருவதால், அவருக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். அவர் காஷ்மீரி முஸ்லிம் பெண்ணாக வருகிறார்.

மேலும் ஒரு டிவி ஹீரோ!

‘கலக்கப் போவது யாரு?’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய பிரபலமான டிவி நிகழ்ச்சிகளின் பல சீசன்களில் தொகுப்பாளர்களில் ஒருவராக வந்து கவர்ந்தவர் ரக்‌ஷன். முன்பே சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தாலும் துல்கர் சல்மானின் நண்பனாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்ததில் கவனம் பெற்றார். தற்போது அவருக்கு ஹீரோ வாய்ப்பு அமைந்துவிட்டது. இரா.கோ.யோகேந்திரன் இயக்கும் காதல் கதையில் ரக்‌ஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் விஷாகா திமான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x