Last Updated : 24 May, 2016 01:33 PM

 

Published : 24 May 2016 01:33 PM
Last Updated : 24 May 2016 01:33 PM

இப்படியும் பார்க்கலாம்: ஒரு பந்தயமும், பல கேமராக்களும்

ஏற்கெனவே சொல்லப்பட்ட கதையின் வெவ்வேறு வடிவங்களைப் பார்க்கலாம்.

முயல் - ஆமைக்கு நடுவே நடந்த ஓட்டப் பந்தயத்தைப் பற்றிப் பொதுவாக இப்படிச் சொல்லலாம். அலட்சியமுடனும், அதீதத் தன்னம்பிக்கையுடனும் “நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்” என்ற முயல் அடைந்த அதிர்ச்சித் தோல்வி!

எனவே, இது விழிப்புணர்வுக் கதை என்றால் அது சரிதான்.

“ஆமையே, உன் பலம் உனக்கே தெரியாது. உன் முதுகு ஓடு உடையும் வரை முயற்சி செய். காலணி இன்றி ஓடு; மலையில் ஓடு; தரையில் ஓடு. கண்டிப்பாக ஒரு நாள் முயலை நீ ஜெயித்துவிடலாம்” என்று ஒருவர் அசுரப் பயிற்சி கொடுக்க ஆமை கிளைமாக்ஸில் வெற்றிக் கோட்டைத் தொட்டு, இது தன்னம்பிக்கை கதைதான் என்று சொல்கிறது.

“இதெல்லாம் ஒரு போட்டியாங்க? போட்டின்னா அது சமமான தகுதி படைத்த இருவருக்கு இடையேதான் நடக்க வேண்டும். இது கொடுமைங்க.

முயல் இன்னொரு முயலுடன்தான் ஓட வேண்டும். ஆமை, ஆமைகளுக்கான ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்வதுதான் முறை. எனவே இந்தக் கோமாளிக் கூத்து செல்லாது” என்ற வாதத்தை ஒருவர் சொல்லி “இது அபத்தத்தைச் சொல்லும் கதை” என்றால் அதுவும் சரிதான்.

சமூக நீதிக்காக… காதலுக்காக

இப்போது ஒரு சமூக ஆர்வலர், “ஆமையால் ஓட முடியாது; அது பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, ஆமைக்கு சற்று முன்னுரிமை கொடுப்பதன் மூலம் அனைவரும் சரிசமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இக்கதையின் நோக்கம்” என்றால் அதையும் மறுக்க முடியாது.

“நன்றாக ஓடக்கூடிய முயலுக்கும், ஸ்லோ மோஷனில் ஓடக்கூடிய ஆமைக்கும் போட்டி என்பதே ஒரு நகைச்சுவை. அதில் ஆமை ஜெயித்தும்விடுகிறது என்பது காமெடியின் உச்சம்” என்பவர்களின் வாதத்துக்கும் இக்கதையில் இடம் இருக்கிறது.

ஆமையின் வெற்றி ஆச்சரியத்தைக் குறிக்கிறது. எனவே இது நம்ப முடியாத கதை என ஆச்சரியப்படுபவர்களின் கருத்துக்கும் இக்கதை இடம் தருகிறது.

“அன்புதாங்க எல்லாம்! முயலை ஜெயிச்சாதான் கல்யாணம் என்று ஆமையின் காதலியின் அப்பா சொல்லிவிட, பெண் ஆமை முயலிடம் சென்று “எனக்காக விட்டுக்கொடு. காதல்னா என்னன்னு தெரியுமா? தியாகத்தோட சுகம் புரியுமா?” என்று விக்கிரமனின் படங்களிலிருந்து ‘லாலா’வை இசைத்து இதற்குத் தியாக முத்திரை வழங்கிவிடுகிறது.

“போட்டி எவ்வளவு நாள் நடைபெறுகிறது, அடைய வேண்டிய தொலைவு எவ்வளவு என்பதைப் பொறுத்துத் தான் போட்டியின் முடிவைச் சொல்ல முடியும். போட்டி சில நிமிடங்கள் நடந்தால் முயல் வெற்றியடைந்துவிடும்.

ஆனால் போட்டி இரண்டு போட்டியாளர்களின் வாழ்நாள் முழுக்க நடைபெறுகிறது என்றால் ஆமை ஜெயித்துவிடும். காரணம், முயலின் வாழ்நாள் 3 முதல் 7 வருடங்கள். ஆனால் ஆமை 150 வருடங்களுக்கு மேலும் வாழும்.

வாழ்நாள் முழுவதும் ஒரு ஆமையால் ஓட முடிந்தால், அது முயல் ஓடும் தொலைவைவிட அதிகமாக இருக்கும். எனவே, ஆமை வெற்றி பெற வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது” என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று ஒருவர் சொல்வாரேயானால், அது வருவதை இயல்பாக எடுத்துக்கொள்பவரின் (Take as it comes) கதையாகிவிடுகிறது.

இதில் எது உண்மை?

“தெரியாதா உங்களுக்கு? உண்மைல ஜெயிச்சது முயல்தாங்க. ஆமைக்கு செல்வாக்கு, பணபலம், படைபலம் எல்லாம் அதிகம். அது போட்டி நடத்தறவங்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு, ரெஃபரியை மிரட்டிருச்சு.

பேட்டி எடுக்கப்போன பத்திரிகைகாரங்ககிட்ட முயல் “இப்ப நான் எதையும் சொல்ற மனநிலைல இல்லை. நோ கமெண்ட்ஸ்”ன்னு சொல்லீட்டு அழுதுருச்சு. அந்த முயல் எங்க இருக்குதுன்னு இப்ப வரைக்கும் தெரியலை” என்றால் இது அதிகாரம், அரசியல், துஷ்பிரயோகம் தொடர்பான கதையாகிவிடுகிறது.

“இனிமேல் இந்த சாஃப்ட்வேர் எதுக்கு?” என்று பதக்கம் வாங்கிய கையோடு ஆமை தன்னுடலில் இருந்து ‘சிப்’பை உருவினால் அது விஞ்ஞானக் கதை.

“எல்லாமே நாடகம் சார்! இன்னுமா புரியலை? எல்லாத்தையும் பணம்தான் முடிவு செய்யுது. பெரிய அளவுல மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்கு. பல கோடி ரூபாய் பெட் கட்டியிருக்காங்க.

கேலரீல இருந்து ஒருத்தர் வெள்ளை கலர் கர்சீப்பை எடுத்து முகம் துடைக்கவும், முயல் குட்டித் தூக்கம் போடவும் சரியா இருந்தது, பாத்தீங்களா? அதுதான் சிக்னல்!” இப்போது இக்கதை ஊழலை அம்பலப்படுத்தும் கதையாக மாறி ஒருவரின் “எல்லாமே பணம்தான்” என்ற பார்வையைக் காட்டுகிறது.

இந்தக் கதைக்கு ஆன்மிகக் கண்ணாடியும் அணிவிக்கலாம். “முயல் என்பது குரங்காய்த் திரிகிற மனம். ஆமை என்பது ஐம்புலன்களின் குறியீடு.

அவற்றை அடக்கி ஆண்டால், அலைபாய்கிற மனதை அதாவது முயலை வெல்லலாம்” என்பதை வாழ்வில் உணர்த்தவே இக்கதை உருவாக்கப்பட்டது. இது முக்தி மார்க்கக் கதை.

திறமை இருப்பதாலேயே வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆற்றல் அற்ற ஆமைகளும் வெல்லும் என்பதுதான் வாழ்க்கை. எனவே இது உண்மையில் யதார்த்தமான கதை.

முயல் என்னும் இளமையை வயோதிகம் எப்படியும் வெற்றிகொண்டுவிடும் என்றால் அது நிலையாமைக் கதை.

இக்கதைக்கு இன்னும் பல அர்த்தங்கள் இருக்கலாம். சரி, இதில் எது உண்மையான கதை?

இக்கதைகளில் எதையும் நீங்கள் மறுக்க முடியாது. எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. இது வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலாக அமைந்த கதை என்று நான் சொன்னால் அதிலும் உண்மை இருக்கிறது.

இக்கதைகளைப் பொறுத்து ஒருவர் “வாழ்க்கை என்பதே மாயை” எனலாம். நகைச்சுவை; யதார்த்தமானது; அபத்தமானது; போராட்டம்; ஆன்மிகம்; அறிவியலின் அற்புதம்; தன்னம்பிக்கை; அன்புமயம்; முயற்சி; அரசியல்; ஊழல்” என்றெல்லாம் அவரவர் பார்வையில் விளக்கம் கொடுக்கலாம். அப்படியானால், அதில் எது உண்மை? எது வாழ்க்கை?

இந்தக் கேள்விக்கு எல்லாமே சரிதான் என்று சொன்னாலும் அது சரிதான். அல்லது இதில் ஏதேனும் ஒன்றுதான் சரி என்றாலும் சரிதான். ஏனென்றால், பார்வைக்குத் தக்கபடிதான் அவரவர் வாழ்வில் முயல்களும் ஆமைகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x