இப்படியும் பார்க்கலாம்: நாங்கல்லாம் அப்பவே!

இப்படியும் பார்க்கலாம்: நாங்கல்லாம் அப்பவே!
Updated on
2 min read

பூமியில் மனித இனம் உருவானதிலிருந்து இதுவரை சிந்திய ரத்தத்துக்குக் காரணம் என்ன என்பதைப் பலரும் காலங்காலமாய் அலசிப் பல வால்யூம்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ஒரு தமிழ் சினிமா ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டது. பதில்-கடைசியில்.

அந்தத் தனியார் நிறுவன அதிகாரியைப் பார்க்க பலரும் வருவார்கள். “என்ன படிச்சிருக்கீங்க?” கேள்விக்கு “பீ.ஈ” என்றால் போதும். அவரும் பொறியியல் படித்தவர் என்பதால், முகம் மலர்வார். இந்தப் பெருமித உணர்வு அடுத்தவர்களைக் குறைத்து மதிப்பிடுவதை நோக்கி மெல்ல நகரும்.

“என்ன இருந்தாலும் அவன் பீ.ஈ.ங்க..”

“டெக்னிக்கலா படிச்சதால நமக்கெல்லாம் ஏதோ தெரியுது!”

இப்போது இருவரும் பொறியியல் படித்தவர்கள். ஆனால் வெவ்வேறு துறைகள். இருவருக்கும் உள்ளுக்குள் தனது படிப்பே உயர்ந்தது என்ற முடிவு ஓடும். அடுத்த உயர்வு படித்த கல்லூரியின் பக்கம் செல்லும்.”அந்தக் காலேஜ்ல யார்னாலும் படிக்கலாம். ஆனா, நான் படிச்சது, இங்க! அங்கே ரொம்ப ஸ்ட்ரிக்ட்ங்க”

மற்ற படிப்பு படித்தவர்கள் மட்டும் என்னவாம்? ஒரு விழாவில் பேராசிரியர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். “என்னங்க, அவரையும் என்னையும் சரிசமமா நடத்தறீங்க...?”

“அவரும் முனைவர்தானே?”

“ஆனா, நான் கூடுதலா ஒரு எம்.ஏ பட்டம் வாங்கியவன்! தவிர,எனக்கு அவர் ஜுனியர்!”

தெரிந்தது தெரியாததும்

கம்ப்யூட்டர், திரைப்படக் கல்வி படிக்கிறவர்கள் எல்லோரும் படிக்க நுழையும்போது சொந்தக்கிரகம் பூமி என்றுதான் குறிப்பிடுகிறார்கள். பாதிப்பேர் கோர்ஸ் முடியும்போது வேறு கிரகத்தினர் ஆகிவிடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு ‘உசத்தியான’ படிப்பையும் சொல்லிக்கொண்டே போகலாம். விஷயம் என்ன நாங்கள் படிப்பால் உயர்ந்தவர்கள்.

அந்தந்த படிப்பு படித்தவர்களுக்கு அது சார்ந்த அறிவு அதிகமாகத்தான் இருக்கும். அதை வைத்து மற்றவர்களைக் கீழிறக்கும் உரிமையை யார் கொடுத்தது? அடுத்தவரைக் குறைத்து மதிப்பிடக் கல்வியை உபயோகப்படுத்தினால் அது எப்படி முழுமையான கல்வியாக இருக்க முடியும்?

இப்போதெல்லாம் “என்ன படித்தாய்?” என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் போல “சத்தியம்தான் நான் படித்த புத்தகம்ங்க...” என்று பாதுகாப்பாய் நழுவிக்கொண்டிருக்கிறேன்!

படிக்காதவர்கள் விஷயத்திற்கு வருவோம்.

ஒரு நிறுவனத்தில் புல் வெட்டுபவர்கள், மூட்டை தூக்குபவர்கள் இருந்தார்கள். புதிதாக ஒரு தொழிலாளி வந்து சேர்ந்தார். சீனியர்கள் சொன்னது. “எங்களுக்கும், நேத்திக்கு வந்த ஒருத்தனுக்கும் ஒரே கூலிங்கறத ஏத்துக்க முடியல சார்…நாங்களும், அவனும் ஒண்ணா? எங்க சீனியாரிட்டி என்ன, தகுதி என்ன?”

ஆக, உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் எல்லாப் பிரிவிலும், எல்லா வயதிலும் இருக்கிறார்கள்.

என்ன கேடரோ!

யூகேஜி படிக்கும் மாணவன் தன்னை ‘அண்ணா’ என்று சொல்லாததற்காக ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அணி லஞ்ச் நேரத்தில் அவனை மிரட்டிச் சொன்னது, “செஞ்சிருவேன்..!”. ஒன்றாம் வகுப்பு மாணவி ஒரு எல்கேஜி மாணவனைக் குறித்துச் சொன்னது. “அவன் சின்னப் பையன். அவனுக்கு என்ன தெரியும்?”

இவற்றின் நீட்சிதான் சாதி, நிறம், மதம், பணம் போன்ற உணர்வுகள். இவற்றை வெளிப்படுத்தாதவனும்கூட, சர்வசாதாரணமாக “என் கேடருக்கு இவ்வளவு பேசறதே பெரிசு”; “என் கேடர் என்ன, உன் கேடர் என்ன?” என்று சொல்லி, பிறரைத் தாழ்த்துகிறான்.

கேடர் போன்ற படிநிலைகள் நிர்வாக வசதிக்காகவும், பிறருக்கு உதவவுமே ஏற்படுத்தப்பட்டது. ஆனால் ‘கேடர்’ மூலம் அடுத்தவரை மட்டம் தட்ட நினைக்கும்போது ‘கேடு நினைக்கும் மானிடர்’ = ‘கேடர்’ என்ற நிலையை அடைவதுகூடத் தெரியாமல் ஏன் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்?

எங்கும் விதிவிலக்குகள் இருக்கலாம் என்பதே பெரும்பாலும் விதி இப்படித்தான் இருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது?

யார் சிறந்தவர் இல்லை?

மனிதர்கள் ஒவ்வொருவரும் தாங்கள்தான் சிறந்தவர்கள் என்று நம்புகிறார்கள்.

ஒரு போராட்டத்தில், ஒரு போட்டியில் வெற்றி பெற்ற பூரிப்பில் இருப்பவர் தோல்வி அடைந்த மற்றவரைவிட தான் சிறந்தவர் என்று நம்புவாரா, மாட்டாரா?

ஒவ்வொரு மனிதரும் தன்னுடன் கிளம்பிய கோடிக்கணக்கான உயிரணுக்களைத் தோற்கடித்து, ஏதோ ஒரு விதத்தில் தனது சிறப்புத் தன்மையை நிரூபித்த ஒரே ஒரு உயிரணு! அந்த சிறப்பு உணர்வுதான் அவர்களை பூமியில் இத்தனை காலம் ஆக்கிரமிப்பு செய்ய வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இல்லையென்றால், டைனசர்கள் உள்ளிட்ட அழிந்துபோன மிருகங்களின் பட்டியலில் மனிதர் எப்போதோ சேர்ந்திருப்பார்.

எனவே, ஒருவர் தன்னை உயர்த்திக்காட்ட தன் படிப்பைப் பயன்படுத்துவார்; வேலையை உபயோகிப்பார்; அல்பத்தனத்தைக் கொண்டுவருவார். இவற்றினால், எந்த மனிதராலும், உலகில் யாரையும்விட தான் சிறந்தவர், மேம்பட்டவர், ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதை நிரூபித்துவிட முடியும்.

இதில் தப்பு எங்கே நடக்கிறது? அடுத்தவரும் “தான் சிறந்தவர்”என்ற அதே மேம்பட்ட உணர்வில் இருப்பார்கள் என்பதை உணராமல் போனதுதான் தப்பு. நீங்கள் சிறந்தவர்தான்! ஆனால், அது எப்படி ஏனையோரின் சிறப்பைக் கீழே இறக்கி விடும்?

என்ன செய்யலாம்? அடுத்தவரை மாற்ற முடியாது. ஆனால் நம்மை மாற்றிக் கொள்ள முடியும். பூமி என்னும் கொஞ்சம் பெரிய சைஸ் வாகனத்தில் ஒன்றாய்ப் பயணிக்கும் சகபயணியிடம் “டேய், நான் போறது சூப்பர் லக்ஸுரி வண்டிடா. ஆனா, நீ போறது கட்டை வண்டிடா” என்று நாம் ஏன் கூச்சலிட வேண்டும்?

சினிமா வார்த்தைக்கு வருவோம். எந்திரனில் “ரோபோ” ரஜினி ரோபோ மாதிரி வரிசையாய் நிற்கும் ஹீரோவை அடையாளம் காண ஒரு ரோபோவைக் கத்தியால் குத்துவார். கீழே விழும் எந்திரத்தைப் பார்த்து வெகு அலட்சியமான குரலில் “ர்ர்ரோபோ”என்பார்.

ஏம்ப்பா, நீயே ஒரு ரோபோ! இதுதான் மனிதர்களின் பிரச்னை!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in