

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. உண்மையில் உணர்வுகளைப் பரிமாற மொழி முக்கியமில்லை எனச் சொல்லப்படுவதுண்டு. அதற்கு உண்மையான உதாரணமாகியிருக்கிறது, இமோஜி.
இதுதான் இன்றைய உலக இளைஞர்களின் உலகப் பன்முக மொழி. உலக அளவில் தினமும் சுமார் 600 கோடி இமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதில் இருந்து இந்தப் படப் பாணியிலான மொழிப் பயன்பாட்டின் தீவிரத்தை அறிந்துகொள்ள முடியும்.
கையடக்கத் திறன்பேசியே நம் உலகமாக மாறிவிட்ட நிலையில் அதன் தேசிய மொழியாக இமோஜிகள் மாறியிருக்கின்றன. இந்த மொழியை முதன் முதலாக ஜப்பானைச் சேர்ந்த ஷிகேடகா குரிதா 1999இல் வடிவமைத்தார்.
டொகோமோ நிறுவனத்தின் தொடக்கக் காலக் கைபேசியில் குறுஞ்செய்திப் பரிமாற்றம் அதிக அளவில் இருந்தபோது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு செய்திகளைத் தட்டச்சுவதற்குப் பதிலாக படங்களாக அனுப்பும் திட்டத்தில் பணியாற்றியவர் இவர்.
அதன் பொருட்டு வானிலை, வேலை, போக்குவரத்து என வெளி விஷயங்களைத் தெரிவிப்பதற்கான குறியீட்டுச் சித்திரங்களை இவர் வடிவமைத்துள்ளார். ஆனால், பிறகு இமோஜி காதல், பிரிவு, அரவணைப்பு, ஆதரவு, நம்பிக்கை என மனத்தின் மொழியையும் பேசத் தொடங்கிவிட்டது.
இவர் உருவாக்கிய 176 பிக்டோகிராம் சித்திரங்கள், நவீன ஓவியத்துக்கு இணையாகக் கொண்டாடப்பட்டன. அதன் அசல் வடிவம் நியூயார்க் நவீன ஓவிய அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதே அதற்குச் சாட்சி. ஒவ்வோர் ஆண்டும் புதிய இமோஜிகள் காலத்துக்குத் தகுந்தாற்போல் சேர்க்கப்படுவதுண்டு. ஜூலை 17 இமோஜி தினத்தை முன்னிட்டு இமோஜிபீடியா இந்தாண்டும் புதிய இமோஜிகளை வெளியிட்டுள்ளது.
தலையாட்டல், கையசைப்பு, இஞ்சித் துண்டு, வாத்து, வைஃபை, மைனா, புதிய மூன்று நிற இதயங்கள் உள்பட 31 இமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இமோஜிக்கள் திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் செப்டம்பரில் யூனிகோட் கூட்டமைப்பு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று இமோஜிபீடியா முதன்மை ஆசிரியர் கீத் ப்ரோணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 112 இமோஜிகள் வெளியிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மிகக் குறைவான எண்ணிக்கையில் இமோஜிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இமோஜி 15.0 என அழைக்கப்படும் இந்தப் புதிய இமோஜி பதிப்புகள் யூனிகோடால் இறுதிசெய்யப்பட்டதும் அக்டோபரிலிருந்து டிசம்பர் மாதத்துக்குள் கூகுள், ஆண்ட்ராய்டு தளங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக இமோஜிபீடியா ஆசிரியர் கூறியுள்ளார்.
ஆப்பிள், ட்விட்டர், சாம்சங், ஃபேஸ்புக் போன்ற சமூகத்தளங்களில் இளைஞர்கள் கூடுதல் சுதந்திரத்துடன் உரையாட இந்த இமோஜிகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
(ஜூலை 17 - உலக இமோஜிகள் தினம்)