

கேரள மாநிலம் கண்ணூரில் கள்ளிறக்கும் ஏழைத் தொழிலாளிக்கு மகனாக 1944-ல் பிறந்த பினரயி விஜயன், கேரளத்தின் முதலமைச்சராகிறார். சிறுவயதில் வறுமையையும், சிபிஐ(எம்) கட்சியில் மாணவத் தொண்டராகச் சேர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார். 1970-ல் 26 வயதில் முதல் முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் போலீசாரின் கடும் சித்திரவதைகளைச் சந்தித்தவர்.
விடுவிக்கப்பட்டவுடன் ரத்தம் தோய்ந்த சட்டையுடன் சட்டமன்றத்துக்கு வந்து உரையாற்றி அப்போதைய அச்சுத மேனன் அரசுக்கு நெருக்கடியைத் தந்தவர். 1996-ல் நாயனாரின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்று நல்ல நிர்வாகியென்றும் பெயரெடுத்தவர். 17 ஆண்டுகளாக சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலாளராகப் பதவிவகித்த காலத்தில் கட்சியில் நிலவிய பூசல்களையும் வேறுபாடுகளையும் இரும்புக்கரம் கொண்டு நிர்வகித்தவர்.
சிபிஐ(எம்) கட்சி சார்பில் தொலைக்காட்சி அலைவரிசைகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், வங்கிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளை ஏற்படுத்தி, கட்சிக்கு பொருளாதாரரீதியான பெரிய உட்கட்டமைப்புகள் இவரது நிர்வாகத்தில்தான் உருவாக்கப்பட்டன.
இலங்கையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு
இலங்கையில் சென்ற வாரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. அங்கு பெய்த கனமழையால் அந்நாட்டின் தலைநகரம் கொழும்புவின் புறநகர் பகுதிகளும், கெகல்லே மாவட்டமும், கலேனி நதியோரப் பகுதிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இந்திய அரசு உடனடியாக இரண்டு கடற்படைக் கப்பல்களையும் ஒரு விமானத்தையும் மருந்துகள், தற்காலிக டென்டுகள், உணவுப் பொருட்களுடன் அனுப்பியுள்ளது. இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் பெய்திராத அளவில் அங்கு கனமழை பெய்துள்ளது.
வியட்நாம் விடுவித்த பாதிரியார்
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வியட்நாம் வருகையை முன்னிட்டு, அரசு எதிர்ப்பாளரான கத்தோலிக்க பாதிரியார் உயன் வான் லை அந்நாட்டு அரசால் கடந்த 21-ம் தேதி விடுவிக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் நாடான வியட்நாமில் அரசியல் மற்றும் மத ரீதியான சுதந்திரத்திற்குப் போராடியதற்காக சிறையிலும், வீட்டுச் சிறையிலும் நெடுநாளாக வைக்கப்பட்டிருந்த இவருக்கு தற்போது 70 வயது.
தென் சீனக் கடல் பிராந்தியத்தில் வியட்நாமுக்கும் சீனாவுக்கு ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளைச் சமாளிக்க வியட்நாம், அமெரிக்க அரசோடு கொண்டுள்ள ராஜதந்திர உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக இந்த விடுதலை பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக வியட்னாமில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை அந்நாட்டு அரசு விடுவிக்க வேண்டுமென பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள் அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைத்திருந்தன.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக
தமிழக சட்டப் பேரவைக்கான 15-வது பொதுத்தேர்தல் முடிவுகள் கடந்த மே 19-ம் தேதி வெளியாயின. அதிமுக, திமுக, தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி, பாமக, நாம் தமிழர், பாஜக என ஆறுமுனைப் போட்டி நடந்த இத்தேர்தலில் அதிமுக, 134 இடங்கள் பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் வரலாறு காணாத அளவில் திமுக, அதிகபட்சமாக 89 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழையவுள்ளது.
திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுக்கும் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளுக்கும் இடையிலான சதவீதம் 1.1 மட்டுமே. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாற்றாக எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி இத்தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பாமக 5.3. சதவீதம் வாக்குகளைப் பெற்றது. திமுக, அதிமுகவை அடுத்து பெரிய வாக்குவங்கியாக கருதப்பட்ட தேமுதிக இத்தேர்தலில் 2.4 சதவீதம் மட்டுமே பெற்று மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலையில் உள்ளது.
எந்த வேட்பாளர் மீதும் நம்பிக்கையில்லை என்பதைத் தெரிவிக்கும் நோட்டோ வாக்குகளின் சதவீதம் 1.3. நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரத்து 244. நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் 1.1.
மன அழுத்தத்துக்கு எதிராக தீபிகா படுகோன்
மனநலம் குறித்து பொது மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகளைத் தர, நடிகை தீபிகா படுகோன் நடத்தும் ‘தி லைவ் லவ் லாஃப் பவுண்டேஷன் அமைப்பு’ திட்டமிட்டுள்ளது. மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு போராடிவரும் நோயாளிகளுக்கு பொது மருத்துவர்கள் உதவும் வண்ணம் இது உதவும்.
இந்த பயிற்சித் திட்டத்தின் பெயர் ‘மோர் தேன் ஜஸ்ட் சேட்’ (More Than Just Sad). இந்தப் பயிற்சித் திட்டத்தில் மருத்துவர்களுக்கு வீடியோக்கள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், கையேடுகள் மூலம் பயிற்சிகள் தரப்படும். தீபிகா படுகோன், தனது மன அழுத்த அனுபவங்களை வெளிப்படையாகச் சென்ற ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.