காட்சிப் பாடம்: தொலைக்காட்சி விளம்பரங்களின் கதை

காட்சிப் பாடம்: தொலைக்காட்சி விளம்பரங்களின் கதை
Updated on
3 min read

இந்தியாவுக்கு இரண்டு முகங்கள். மாறிய இந்தியாவின் நவீன முகம் ஒன்று. மாறாத இந்தியாவின் பழைய முகம் இன்னொன்று. இந்தியா எப்படி வளர்ந்திருக்கிறது? எப்படித் தன் பழைமையைப் பேணுகிறது என்னும் கதையைத் தொலைக்காட்சி விளம்பரங்கள் வழியாகவும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காக காம்ப்ளானைக் கலந்து கொடுத்து, கணவரின் அழுக்கான உடைகளை சர்ஃபில் முக்கி சூரியனைப் போல ஒளிரச்செய்து, இரவில் மூவ் வலி நிவாரணியைத் தடவும் சம்பிரதாயமான குடும்பப் பெண்கள் இன்னும் இந்திய விளம்பரங்களில் இருக்கிறார்கள்.

காரில் விபத்துக்குள்ளாகப் போகும் அழகியை, பனியனை வைத்திழுத்துக் காப்பாற்றும் ஆணழகர்களும் இன்னும் விளம்பரத்தில் வருகின்றனர்.

90-களில் இந்தியாவில் பொருளாதார தாராளமயம் நுழைந்ததையொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பான மரபான கருத்துகளும் அவர்களது பங்களிப்புகளும் நடைமுறையில் மாறியுள்ளன.

அதை விளம்பரங்களும் பிரதிபலித்தன. சமையலறையில் புகுந்து மனைவிக்கு உற்சாகமான தேனீரையும், காபியையும் அளிப்பவர், நல்ல குக்கர் வாங்கித் தருவதன் வாயிலாக மனைவியை நேசிப்பவர்... இப்படியாக இந்திய விளம்பரங்களின் ஐம்பது ஆண்டுகளைப் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் தொலைக்காட்சி விளம்பரம்

# 1978-ல் குவாலியர் சூட்டிங் கருப்பு-வெள்ளை விளம்பரம். தூர்தர்ஷனில் வெளியானது.

# 1982 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவில் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகம். முதல் வண்ண விளம்பரம் பாம்பே டையிங்.

விளம்பரங்களை முறைப்படுத்தும் அமைப்பு

1985-ல் ‘அட்வர்ட்டைஸ்மெண்ட் ஸ்டாண்டர்ட் கவுன்சில் ஆப் இந்தியா’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. நேர்மையாகவும் நாகரிகமாகவும் பொறுப்புடனும் விளம்பரங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட சுயமான ஒழுங்குமுறை அமைப்பு இது. விளம்பர நிறுவனங்கள், விளம்பரங்களைத் தரும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சந்தை ஆய்வு நிறுவனங்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

விளம்பரங்களின் பொற்காலம்

1990களில் கேபிள் தொலைக்காட்சி அறிமுகமானது. 1991-ல் சிஎன்என் தொலைக்காட்சியில் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரை செய்தியாக ஒளிபரப்பியது.

ஜீ தொலைக்காட்சி சேனல் 1992-ல் தொடங்கப்பட்டது. ஸ்டார் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின. செயற்கைத் தொலைக்காட்சி சேனல்களின் போட்டியைச் சமாளிக்க டிடி மெட்ரோ சேனலை தூர்தர்ஷன் தொடங்கியது.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசை களில் வாழ்வாதாரம் விளம்பரங் கள் என்பதால் விதவிதமான விளம்பரங்கள் மற்றும் விளம்பரம் சார்ந்த நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டன.

மக்கள் நினைவை விட்டு நீங்காத விளம்பரங்கள்

நிர்மா (நிர்மா என்பதைவிட வாஷிங் பவுடர் நிர்மா என பாவாடை அணிந்த குழந்தைகளும் பெண்களும் சுற்றிச் சுற்றி ஆடுவது), கோல்கேட் ( திடமான பயில்வான் கரும்பை கடிக்கும்போது பல் வலிப்பது), லிரில் சோப் ( பச்சை நிற நீச்சல் உடையில் பாயும் அருவியில் குளிக்கும் ல …ல…லா), லைஃப்பாய் (லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே), லக்ஸ், காட்பரி சாக்லேட் (ஆசை நிராசை ஆனதே), வுட்வர்ட்ஸ் க்ரேப் வாட்டர் ( என்னாச்சு... குழந்தை அழுது) மேகி நூடுல்ஸ் ( டூ மினிட்ஸ் என்பதை நிலைநிறுத்திய விளம்பரம்), தம்ஸ் அப் ( டேஸ்ட் தி தண்டர்).

பெரிதும் பேசப்பட்ட சூ சூ

வோடஃபோன் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அனிமேஷன் கதாபாத்திரங்கள் தான் சூ சூ. ஐபிஎல் சீசன் 2 கிரிக்கெட் போட்டியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் புகழ்பெற்றவை.

பலூன் உடலும், முட்டைத் தலையும் கொண்டவை இவை. வோடபோனின் பல்வேறு சேவைகளை நகைச்சுவையான சிறிய கதைகளுடன் அறிமுகப்படுத்தியவை. இந்த விளம்பரத்தை உருவாக்கிய நிறுவனம் ஓகில்வி அண்ட் மாதர்.

இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் ராஜீவ் ராவ். அவர்தான் சின்னச் சின்னக் கதைக் கருக்களையும் உருவாக்கியவர்.

2000-ல் மாறிய மதிப்பீடுகளும் உள்ளடக்கமும்

ஆண்கள் மற்றும் பெண்கள் சமூகத்தில் வகிக்கும் பாத்திரங்கள் விளம்பரங்களிலும் மாறுபட்டன. பெண்ணுக்குச் சமமாக வீட்டிலும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்பவர், உணர்ச்சிமயமானவர் என்னும் புனைவு ஆண்களுக்கும் தரப்பட்டது.

நவீனமடைந்த இந்தியாவில் மரபான தடைகளை உடைக்கும் புதிய பெண்கள் விளம்பரங்களில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டனர்.

புகழ்பெற்ற விளம்பர இயக்குனர்கள்

ஆர்.பால்கிபியுஷ் பாண்டே

ஸ்வாதி பட்டாச்சார்யா

ப்ரஸூன் ஜோஷி பிரஹலாத் கக்கர்

விளம்பரத்துக்காகச் செலவழிக்கும் தொகை

2015-ல் 48 ஆயிரத்து 700 கோடி ரூபாய். உலகின் 12-வது பெரிய விளம்பரச் சந்தை இந்தியாவுடையது. 2020-ல் இந்தியா உலகின் ஏழாவது பெரிய விளம்பரச் சந்தையாக இருக்கும்.

புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்கள்

ஓகில்வி அண்ட் மாதர், ஜிடபிள்யுடி ஹிந்துஸ்தான் தாமஸ் அசோசியேட்ஸ், முத்ரா கம்யூனிகேஷன்ஸ், ஆர்கே சாமி பிபிடிஓ அட்வர்டைசிங் லிமிடெட், லிண்டாஸ் இந்தியா லிமிடெட்.

விளம்பர நாயகர்கள், நாயகிகள்

மன்சூர் அலிகான் பட்டோடி, கவாஸ்கர், கபில்தேவ், மிலிந்த் சோமன், சச்சின் டெண்டுல்கர், தோனி, ஸ்ரீதேவி, வித்யா பாலன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன்…

# இந்தியாவின் பிரதான விளம்பர மையம் மும்பை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in