

‘வம்சம்’ படத்தில் தொடங்கி, கோலிவுட்டில் 11 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார் அருள்நிதி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது, ‘தேஜாவு’. ஒயிட் கார்பெட் பிலிம்ஸின் கே.விஜய் பாண்டி தயாரிப்பில், அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படம் பற்றி அருள்நிதியிடம் பேசினோம்.
நீங்க ‘த்ரில்லர்’ கதைகளின் காதலனா?
‘கே13’ படம் பண்ணும்போதே, த்ரில்லருக்கு கொஞ்சம் பிரேக் கொடுக்கலாங்கற முடிவுல இருந்தேன். ஆனா, அடுத்தடுத்த கதைகளும் த்ரில்லராகவே அமைஞ்சது. பொதுவா எனக்கு கதை சொல்ல வர்ற புது இயக்குநர்கள், த்ரில்லர் திரைக்கதையோடத்தான் வர்றாங்க.
‘தேஜாவு’, ‘டைரி’ கதைகளை கேட்ட பிறகு அவற்றை நிராகரிக்கவே முடியலை. வேற ஜானர் கதைகள்ல நடிச்சிருந்தாலும் நான் நடிச்ச த்ரில்லர் படங்கள்தான் அதிகமா வெளிய தெரியுது.
அடுத்து லைகாவுக்கு ஒரு படம் பண்றேன். அது ஃபேமிலி டிராமாவா இருக்கும். பிரபுங்கற புதுமுகம் இயக்குறார். அதை முடிச்சுட்டு ‘ராட்சசி’ கவுதம்ராஜ் இயக்கத்துல கிராமத்துக் கதையில நடிக்கிறேன். அந்தப் படங்கள் வந்தா, இந்தக் கேள்வி எழாதுன்னு நினைக்கிறேன்.
‘தேஜாவு’ படத்துல போலீஸ் அதிகாரி வேடமா?
ஆமா. ‘விக்ரம் குமார்’ங்கற ஐபிஎஸ் அதிகாரியா நடிச்சிருக்கேன். ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கறதுக்காக வரும் அவர், என்ன பண்றார்னு கதை போகும். படத்துல நிறைய ட்விஸ்ட் இருக்கு. திடீர்னு ஒரு இடத்துக்குப் போயிருப்போம், அங்க போன பிறகு ஏற்கனவே அங்க வந்திருக்கிற மாதிரி ஒரு நினைவு வரும்.
அல்லது ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். அது ஏற்கெனவே நடந்ததுபோல சில நேரம் நமக்குத் தோணும். அதுதான் ‘தேஜாவு’ எஃபெக்ட்’. இந்தப் படமும் அப்படித்தான். எழுத்தாளர் ஒருத்தர் எழுதறது எல்லாம் அப்படியே நடக்குது. அவர் கதைக்கும் என் கணிப்புக்கும் ஒரு இடத்துல ‘கனெக்ட்’ ஆகும்.
அங்கேயிருந்து அடுத்து என்ன நடக்குதுன்னு படம் போகும். ரசிகர்களை சீட் நுனியில உட்கார வைக்கிற மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. இதுல மதுபாலா மேடம் முக்கியமான கேரக்டர்ல வர்றாங்க. அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், சேத்தன், காளி வெங்கட் நடிச்சிருக்காங்க.
பெரிய பட்ஜெட், மாஸ் படம் பண்ணும் ஆர்வம் இல்லையா?
இதுதான் என் எல்லைன்னு எதையும் நான் வரையறுத்துக்கல. என் பட்ஜெட்டை பெரிசாக்கணுங்கற ஆர்வம் இருக்கு. என் மார்க்கெட் வேல்யூ அதிகமானாதான் அந்த இடத்துக்குப் போக முடியும். இப்போ இருக்கிற நிலையில, என்னை வச்சு படம் பண்ற தயாரிப்பாளர்கள் லாபம் பார்க்கணும்னு நினைக்கிறேன்.
சொந்தமா தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கறதால தயாரிப்பாளருக்கான கஷ்டம் எனக்குத் தெரியும். அப்பா, என்னை வச்சு ரெண்டு, மூணு படம் தயாரிச்சிருக்காங்க. ‘கோபுர வாசலிலே’, ‘இதயதாமரை’, ‘நியாயத் தராசு’ படங்கள் அப்பா தயாரிச்சவைதான். தயாரிப்பாளர்களோட தவிப்பை அவங்க சொல்லி இருக்காங்க. அது தெரியும். அதனால முதல்ல என் மார்க்கெட்டை உயர்த்திகிட்டு அந்த மாதிரி படங்கள் பண்ணணும்.
நீங்களும் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து நடிக்கப் போறதா தகவல் வந்துச்சே?
ஆமா. போன வருஷம் அண்ணன் உதயநிதி என்கிட்ட சொல்லிருந்தாங்க. அந்தப் படம் தொடங்கறதா இருந்துச்சு. ஆனா, அது சரியா அமையல. அடுத்து அதுபோல ஒரு கதை அமைஞ்சா பண்ணிக்கலாம்னு விட்டுட்டோம். கண்டிப்பா சேர்ந்து நடிக்கும் ஐடியா இருக்கு.
நடிக்க வந்து 11 வருடமாச்சு. சினிமா என்னக் கற்றுக்கொடுத்திருக்கு?
நிறைய.. இது, அதுன்னு என்னால குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனா, கற்றுக்கொடுத்த விஷயங்கள் அதிகம்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும். என்னை பக்குவப்படுத்தியிருக்கு. இதுல கிடைக்கிற புகழ் உள்ளிட்ட விஷயங்கள் வேற எங்கேயும் கிடைக்காது. ஒவ்வொரு நாளும் புதுசா கத்துக்கிட்டே இருக்கிற தொழில் எதுன்னா, அது சினிமாதான்னு அடிச்சுச் சொல்வேன். எல்லாம் தெரியும்னு சினிமாவுல நிமிர்ந்து உட்கார முடியாது. சினிமாவை பொறுத்தவரை, கற்றது கைமண் அளவுதான்.