Published : 24 May 2016 01:45 PM
Last Updated : 24 May 2016 01:45 PM

என் பிள்ளைக்கு ஏற்ற துறை எது?

பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு. தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஹாட்லைன் நம்பர் கொடுத்துத் தற்கொலைக்குப் போகாமல் தடுக்க ராணுவம் போலத் தயார் நிலையில் கவுன்சலர்களைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கவுன்சலர் என்றதும் என் நண்பர் ஒருவர் விசனப்பட்டது நினைவுக்கு வருகிறது. “இந்தப் பேரு ரொம்ப குழப்பம் சார். வார்டு கவுன்சலர்னு நினைச்சு சிபாரிசு கேட்டெல்லாம் ஆள் வருது!”

90-களில் தீவிரமாக கவுன்சலிங் செய்துகொண்டிருந்த காலத்திலேயே அந்த வார்த்தையை விவாகரத்து செய்துவிட்டேன். பெல்ஸ் ரோட்டில் நிறைய டூ வீலர் நிபுணர்கள் ‘ஆட்டோ கவுன்சலர்ஸ்’ என்று அட்டூழியம் செய்ய ஆரம்பித்திருந்த நேரம் அது. பிறகு வெளிநாடுகளில் படிக்கச் செல்வோரை தாஜா செய்வோர்கள் எல்லாம் ‘எஜுகேஷனல் கவுன்சலர்கள்’ ஆனார்கள்.

இன்று தமிழ்நாட்டின் சகலக் கல்லூரிகளில் சீட் வாங்கித் தரும் முகவர்களும் தங்களை ‘கெரியர் கவுன்சலர்கள்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஒரு வங்காள கவுன்சலர் என்னிடம் போனில் பேசிய பதினோராம் நிமிடம்தான் புரிந்தது, அவர் அம்மன் பெயர் கொண்ட பொறியியல் கல்லூரியில் சேர என்னை சரிகட்டிக்கொண்டிருக்கிறார் என்று. அது ஒரு தனிக்கதை!

மிரட்டாத கவுன்சலிங்

கெரியர் கவுன்சலிங்குக்கு வருவோம். என்ன ஜந்து இது?

கல்வி மற்றும் தொழில் உளவியலில் மாணவர் இயல்பு அறியச் செய்யப்படும் உளவியல் சோதனை, அதன் பின் துறை தேர்வு பற்றி ஆலோசனை. இதுதான் கெரியர் கவுன்சலிங். அமெரிக்காவில் இதை 14 வயதிலேயே ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் மிரட்டாமல் இதை விளையாட்டாய்ச் செய்கிறார்கள். இங்கு நாளை அட்மிஷன் என்றால் இன்று குடும்பத்துடன் ஓடிவர ஆரம்பித்திருக்கிறார்கள்.

என்னிடம் வரும் பலர் ஒரு கட்டப் பஞ்சாயத்துக்கு வரும் மனோநிலையில் வருகிறார்கள். நான் விபூதியைத் தலையில் உதறி, “டிரிப்பிள் ஈ எடு. நல்லா வருவே!” என்றால்கூட ஏற்றுக்கொள்வார்கள். சில பெற்றோர்கள் சொல்வதைக் கேட்கும்போதே கண்ணைக் கட்டும். “மார்க்கு வராதுங்க. ரஷ்யாவுல மெடிசின் பண்ணலாங்கறான். இல்ல இங்கேயே விஸ்காம் சேரறேங்கறான். இல்லென்னா மாடலிங் செஞ்சா சினிமா போயிடலாங்கறான். எதுக்கும் இருக்கட்டும்னு இஞ்சினியரிங் சீட்டும் புக் பண்ணி வச்சிருக்கேன். இவனுக்கு எது செட் ஆகும்?” என்பார்கள்.

எது சிறந்தது?

இன்று பெற்றோர்கள் மாறிவருகிறார்கள். தங்கள் நிறைவேறாக் கனவுகளைத் தங்கள் பிள்ளைகள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதையெல்லாம் நிறுத்திவருகிறார்கள். பிள்ளைகள் விரும்பியதைத் தரவும் யோசிக்கிறார்கள். ஆனால், அது மிகச் சிறந்ததாகவும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இந்த ‘மிகச் சிறந்த’ என்பதில்தான் பெரும் குழப்பம் ஆரம்பமாகிறது.

நல்ல படிப்பா? நல்ல கல்லூரியில் படிப்பா? நல்ல வேலைக்கு ஏற்ற படிப்பா? பிடித்த படிப்பா? சுலபமான படிப்பா? திறமைக்கேற்ற படிப்பா? சொல்லிக்கொள்ளத் தக்க படிப்பா?

இவை அனைத்தும் சதா மாறிக்கொண்டிருப்பவை. பலர் இதில் தொடர்ந்து செய்திகளையும் அபிப்பிராயங்களையும் நிரப்பிக்கொண்டே இருப்பார்கள்.

இன்று தகவலுக்குப் பஞ்சமில்லை. ஆன்லைனில் அனைத்தும் கிடைக்கும். ஆனால், எந்தத் தகவலை முடிவு செய்ய எடுத்துக்கொள்வது என்பதில்தான் சிக்கல். இங்குதான் துறை நிபுணத்துவம் துணைக்கு வருகிறது.

கல்வித் துறையைத் தேர்வு செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு. அதற்கு அறிவியல்பூர்வமான ஆய்வும் ஆலோசனையும் உதவும். இதை வழங்குபவர் எந்த ஒரு கல்வித் துறைக்கோ அல்லது ஒரு கல்வி நிறுவனத்துக்கோ தொடர்பில் இல்லாதிருத்தல் நலம். நிறுவனங்கள், மாணவர் சந்தையில் தங்கள் கல்லூரிப் படிப்புகளை விற்கப் பல விற்பனைத் தந்திரங்கள் செய்கின்றன. குறிப்பிட்ட பாடத்தில் அல்லது குறிப்பிட்ட திறனில் நுழைவுத் தேர்வு. வெற்றி அடைபவருக்குத் தள்ளுபடியில் சீட் கிடைக்கும். அல்லது இந்தக் கருத்தரங்குக்கு வந்தால் இந்தச் சலுகை போன்ற அறிவிப்புகளை கெரியர் கவுன்சலிங்குடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

உளவியலின் முதல் கொள்கையே தனித்தன்மைதான். ஒருவர் போல மற்றொருவர் இல்லை. அதனால் அச்சில் வார்த்தாற்போல “இதைப் படித்தால் இப்படி ஆகலாம்” என்று சொல்லப்படும் ஆலோசனைகள் உளவியல் கூற்றுக்கே எதிரானவை.

அதனால் தான் ஐ.ஐ.டி.யில் படித்தும் சோபிக்காதவர்கள் உண்டு. மிகச் சாதாரணக் கல்லூரி மாணவர் மிகப் பெரிய அளவில் ஜெயிப்பதும் உண்டு. மதிப்பெண், அறிவு, படிப்பு, வேலைத்திறன், பணம் சம்பாதிக்கும் திறமை, வாழ்க்கையில் வெற்றி இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்படாதவை. அவற்றை நேர்கோட்டில் ஒன்றுக்கு ஒன்று காரணமாகக் காட்டும் சிந்தனை நம் பிழை. இதுதான் உளவியலில் ஆதார விதி. ஒருவரைப் போல மற்றொருவர் இல்லை.

கெரியர் கவுன்சலிங் என்னவெல்லாம் செய்யும்?

ஒரு மாணவனின் அறிவு, திறமை, ஆர்வம், ஆளுமை மற்றும் தனிப் பண்புகளை ஆய்வு செய்வதுதான் கெரியர் கவுன்சிலிங். இவற்றை ‘புத்திகூர்மை சோதனை’ (intelligence testing), ‘இயல்திறன் மதிப்பாய்வு’ (aptitude assessment), ‘துறைசார் விருப்பங்கள் மீதான மதிப்பாய்வு’ (interest schedule), ‘ஆளுமை மதிப்பாய்வு’ (personality assessment), ‘சிறப்புத் திறன்களுக்கான சோதனை’ (test of special abilities) என்று சொல்வார்கள். பின், கற்றலுக்கு இடையூறாக உள்ள ‘கற்றல் குறைபாடுகள்’ (learning disabilities) போன்ற மருத்துவக் காரணிகள் இருந்தால் அவையும் கருத்தில் கொள்ளப்படும். தேவைப்படும்போது குடும்பப் பின்னணி போன்றவையும் அலசப்படும். பின், விரிவான அறிக்கை ஒன்று கொடுக்கப்படும்.

இந்த profile-க்கு என்ன படிப்புகள் ஏதுவாக இருக்கும் என்று ஒரு பட்டியலைத் தருவோம். இதில் கோர்ஸின் பெயரோ, கல்லூரியின் பெயரோ இருக்காது. ஆனால், எந்த வேலைகள் ஏற்றவையாக இருக்கும்; அதற்கு என்ன படிக்கலாம் என்று இருக்கும்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் தங்கள் துறைத் தேர்வை அணுகலாம். இது தவிர நேர்காணலின்போது வெளிப்படும் நடத்தையும் உள்ளுணர்வு சார்ந்த பல விவரங்கள் தரும். இப்படி ஒவ்வொரு மாணவருடனும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டுத் தனிப்பட்ட ரீதியில் பெற்றோர் மற்றும் மாணவருடன் கலந்தாய்வு செய்து அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்துவதுதான் வேலை ஆலோசகரின் பணி.

இது கூட்டத்தில் நின்று செய்யப்படும் பொத்தாம் பொதுவான அறிவுரை கிடையாது.

14 ஆண்டுகள் பள்ளிக் கல்விக்குப் பின் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கல்லூரிக் கல்வியை எதிர்நோக்குவதே நம் அமைப்பின் தோல்வி என்று சொல்ல வேண்டும்.

இந்த உளவியல் ஆய்வுகள் பற்றிய விரிவான அலசல்களுடன், பெற்றோர்கள் அதிகம் கேட்கும் ‘FAQ’களுடன் (Frequently Asked Questions- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) சிலரின் அனுபவங்களையும் இனி பார்க்கலாம்.

(நிறைவுப் பகுதி அடுத்த வாரம்)
கட்டுரையாளர் உளவியலாளர் மற்றும் ஆலோசகர்,
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x