Published : 13 Jul 2022 04:35 PM
Last Updated : 13 Jul 2022 04:35 PM

வெற்றி மந்திரம் | தவறவிட்டா வருத்தப்படுவீங்க

சி. ஹரிகிருஷ்ணன்

திமூன்று வயதான சிறுவனுக்குப் படிப்பில் அதீத ஆர்வம். ஆனால், வீட்டில் வறுமை. அதனால், தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். தொடர்ந்து பல நாட்களாகப் பசி. வேலை தேடித் தேடி அலுத்துப் போய், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் செருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான்.
பணக்காரர் ஒருவர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம், “டேய்! இங்கே கட்டிவிட்டுச் செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக்கொள். வரும்போது காசு தருகிறேன்” என்றார்.
ஆஹா… இப்படி ஒரு வேலையா? பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரைதானா என்கிற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாகத் துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாகப் பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லறை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம். மகிழ்ந்தான்.
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகிவிட்டான்.


அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகிவிட்டான். அவனே பல நாடகங்களை எழுதி பெரும் புகழ் பெற்றான். எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும். வருகிற வாய்ப்பை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறவர்களே வெற்றியாளராக வலம் வருகின்றனர்.

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் பிடித்த ஹாரிபாட்டர் கதையை எழுதி, இன்று உலகிலேயே அதிகமாகச் சம்பாதிக்கும் எழுத்தாளர் என்கிற அந்தஸ்தை அடைந்த ஜே.கே. ரௌலிங், “ஒவ்வொருவருக்குள்ளும் இருளும் இருக்கிறது, வெளிச்சமும் இருக்கிறது. எதைத் தேர்வுசெய்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. அதைப்பொறுத்தே நாம் வெளிப்படுகிறோம்” என்கிறார்.
மேலும் அவர், “எல்லாருக்கும் வாய்ப்புகள் தேடி வராது. வாய்ப்புக்காக நாம் காத்துக்கொண்டிருந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான். நாம் வெற்றியைத் தொட, நாம் பார்க்கும் ஒன்றொன்றிலும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதைத் தேடிக் கண்டுபிடிப்பதிலும், அதைச் செயல்படுத்துவதிலும் இருக்கிறது நம் வெற்றி” என்கிறார்.


கவனம், ஈடுபாடு, கவனிப்பு, திட்டமிடல் ஆகியவை நம்மை நகர்த்திச்செல்லும் செயல்கள் ஆகும். சிலர், வாய்ப்புகள் வரும்போது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவவிட்டுவிடுவார்கள். இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்கும், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கிடைக்கிற வாய்ப்பைத் தட்டிக் கழித்துவிடுவார்கள். இப்படிச் செய்வதால் மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலேயே போகலாம். அதனால், எந்த வாய்ப்பையும் கைவிடாமல் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x