Published : 23 May 2016 12:13 PM
Last Updated : 23 May 2016 12:13 PM

கச்சா எண்ணெய் விலை சரிவு: கவலையில் கேரளம்

பிள்ளைக்கு பசித்தால் தாய் சாப்பிட முடியாது, ஆனால் பிள்ளையை அடித்தால் தாய்க்கு வலிக்கும் என்பது பழமொழி. அப்படித்தான் இருக்கிறது கேரளாவுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவு. பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த உறவில் இப்போது புதிய வடிவில் சிக்கல்கள் எழுந்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் அரபு நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் கேரளாவில் எதிரொலிக்கிறது. கச்சா எண்ணெய் விலைச் சரிவால் அரபு நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் காணுகிறது என்றால் அதனால் நேரடியாக பாதிக்கப்படும் நிலைமையையும் கேரளா எதிர்கொண்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்கள் ஆதாயத்தையும், பல தொழில்கள் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை சரிவு

சர்வதேச அரசியல் பொருளாதாரம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை 75 சதவீதம் வரை சரிந்துள்ளது. தவிர பல்வேறு காரணங்களால் சீனா இறக்குமதியை குறைத்துள்ளதும் இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 2014 ஜூலையில் 1 பேரல் 106 டாலராக இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் விலை, 2016 ஜனவரியில் 26 டாலருக்கு கீழாக இறங்கி விட்டது.

2020-ம் ஆண்டில் கூட ஒரு பேரல் 60 டாலர் என்கிற அளவில்தான் கச்சா எண்ணெய் விலை இருக்கும் என்று பொருளாதார கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இந்த விலை சரிவு அரபு நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சவுதி அரேபியா, குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகள் தங்களது செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

செலவு கட்டுப்பாடுகள்

2016 பட்ஜெட்டில் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சவுதி அரேபிய அரசாங்கம் எடுத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 15 சதவீதமாக இருக்கும் என்று தெரிகிறது. இதே அளவுகோலையே இதர அரபு நாடுகளும் கடைப்பிடிக்கும் என்று தெரிகிறது. இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கட்டுமான திட்டங்களுக்கான மானியமும் குறைக்கப்படுகின்றன. மேலும் தங்களது வரி வருமானத்தை உயர்த்தவும் திட்டமிட்டு வருகின்றன.

விலை சரிவின் பிரதிபலிப்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தொழிலாளர்கள் அரபு நாடுகளிலிருந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதும் நடந்து வருகிறது. இந்தியாவும் இந்த விஷயத்தில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அரபு நாடுகளில் வேலைக்கு சென்றுள்ள கேரள மாநிலத்தவர்கள் பெருமளவு வேலையிழந்து இந்தியா திரும்பி வருகின்றனர்.

குறிப்பாக கேரளாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேர் மேற்கு ஆசிய நாடுகளுக்குத்தான் செல்கின்றனர் என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் சில ஆண்டுகளாக இந்த விகிதத்தில் பெரு மளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கள் மிகக் கடுமையாக புலம்பெயர்ந்த தொழிலாளிகளை பாதித்துள்ளது என்று வல்லுநர்கள் குறிப் பிட்டுள்ளனர்.

முக்கியமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், கப்பல் நிறுவனங்கள் தங்களது செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தொழிலாளர்களுக்கு ஊதிய குறைப்பு, ஊக்கத் தொகைகள் நிறுத்தம், ஆலை மூடல் என பல நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளன. சில நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது.

புலம்பெயரும் கேரளத்தவர்கள்

கேரளாவிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அரபு நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கேரளாவின் பொருளாதாரம் செழிக்கிறது என்பது முக்கியமானது. குறிப்பாக கேரளாவின் 3 கோடி மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் பேர், அதாவது சுமார் 30 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்றுள்ளனர். சராசரியாக கேரளாவின் ஒவ்வொரு மூன்று குடும்பத்திலிருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் அரபு நாட்டுக்கு சென்றுள்ளனர். சவுதி அரேபியா, துபாய், குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன் என பல அரபு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவுக்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் அனுப்பும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கேரள மக்களுடையது என்கிறது கேரளாவின் புள்ளி விவரங்கள்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு புலம் பெயர்வது கேரளாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் அரபு நாடுகளுக்கு செல்வது சீராக அதிகரித்துள்ளது, மேலும் அரபு நாடுகளில் பரவலாகவும், உறுதியான தொடர்புகளையும் வைத்துள்ளனர்.

புதுப் பணக்காரர்கள்

இப்படி புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் கேரளாவில் வசதி படைத்த ஒரு சமூகத்தை உருவாக்கியுள்ளது என்கிறார்கள். மாநில அளவிலான நுகர்வு மற்றும் செலவுகள் விஷயத்தில் மிகப் பெரிய அளவு ஏற்றத்தாழ்வுகள் இதன் மூலம் உருவாகியுள்ளது. நகரமயமாக்கலை விரைவுபடுத்தியுள்ளது. 2001 ஆண்டிலிருந்து 2011 க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 360 புதிய நகரியம் உருவாகியுள்ளது.

குறிப்பாக வட கேரளத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் சுமார் 20 சதவீத பணம் வந்து சேர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு நகர வளர்ச்சி 420 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது முக்கியமானது. இந்த நிகழ்வு கேரளாவின் அனைத்து காலாச்சார சம்பவங்களிலும் எதிரொலி கிறது. முக்கியமாக கேரளா சினிமாவில் இது தொடர்பாக பல திரைப்படங்கள் உருவாகின்றன. கதைகள் எழுதப்படுகின்றன.

மிக சமீபத்தில் ஜாக்கபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம், பத்தேமரி போன்ற திரைப்படங்கள் அரபு நாடுகளில் மலையாளிகளின் வாழ்க்கையை சித்தரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆடுஜீவிதம் என்கிற நாவல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது என்கின்றனர். மலையாள பத்திரிகைகள் அரபு நாடுகளில் தங்களது பதிப்புகளை வைத்துள்ள அளவுக்கு அங்கு மலையாளிகளின் புழக்கம் உள்ளது. கேரள தொலைக்காட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளில் குறைந்தது அரைமணி நேரமாவது அரபு நாடுகள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்குகின்றன.

ரியல் எஸ்டேட் சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு மட்டுமல்ல, 2009ல் துபாயில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் சரிவும் கேரளாவிலிருந்து சென்றவர்களுக்கு பெரும் வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியுறவுத் துறை புள்ளிவிவரங்கள்படி இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. குறிப்பாக 2015ல் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்றோர் எண்ணிக்கை 7,81,000 பேர். இதுவே 2013 ஆம் ஆண்டில் 8,17,000 பேரும், 2014ல் 8,05,000 பேர் என அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு ஏஜென்சிகளும் தங்களது மூன்றில் ஒரு பங்கு வாய்ப்புகளை இழந்து வருகின்றன.

தாமதமாகும் விசா

கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு பிறகு அரபு நாடுகள் விசா அளிப்பதையும் தாமதப்படுத்தி வருகின்றன. இரண்டு மாதங்களில் கிடைத்துவிடும் அரபு நாடுகளுக்கான விசாவுக்கு இப்போது ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை காத்திருக்கின்றனர். நிறுவனங்களுக்கு தற்போது பணியாளர்கள் தேவையில்லை என்கிற நிலை நிலவுகிறது. அல்லது நீண்ட கால பணியாளர்கள் தேவையில்லை என்று நினைக்கின்றன.

ஏற்கெனவே கேரளாவில் இளைஞர்கள் அங்கு வேலை தேடுவது கிடையாது. டிகிரி வாங்கியவுடன் உடனடியாக அரபு நாடுகளுக்கு விசா வாங்கி, வேலைக்கு சென்று விடுவர். இந்த கதவுகள் அடைக்கப்படுவதால் கேரளா புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. தொழில் துறையில் பின் தங்கியுள்ள மாநிலம் இதை எப்படி சமாளிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்விக்குறி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x