

வேத காலத்திலிருந்து, இன்றைய காலம் வரை வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் உத்தரப் பிரதேசம். இந்து மதமும் பவுத்தமும் தழைத்தோங்கிய பூமி இது. மவுரியப் பேரரசன் அசோகர் அரசாண்ட பூமி இது. இந்திய அரசின் சின்னமான நான்கு சிங்கங்கள் தாங்கிய அசோகா ஸ்தூபி அமைந்திருக்கும் இடம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத்.
கட்டிடக் கலை, ஓவியம், இசை, நடனம் என்று சகல கலைகளும் ஆதரிக்கப்பட்டு செழித்தோங்கிய முகலாயர் ஆட்சிக் காலத்தின் பெருமைமிகு அடையாளமான தாஜ்மகால் இருக்கும் இடம் இது. அக்பரின் அரசவைக் கவிஞரான தான்சேனும் பைஜூ பவ்ராவும் இன்னும் தங்கள் பாடல்களால் நினைவுகூரப்படுகிறார்கள். ஜான்சி ராணி லட்சுமி பாய், ஆவாத் பேகம் ஹஸ்ரத் மஹால் பக்த் கான் உள்ளிட்ட வீரம்செறிந்த தியாகங்களின் பூமி.
நவீன இந்திய வரலாற்றிலும் உத்திரப் பிரதேசம் பிரதான இடத்தை வகிக்கிறது. 1857-ல் முதல் சுதந்திரப் போர் என்று கருதப்படும் சிப்பாய்க் கலகத்தின் மையமாக மீரட் திகழ்ந்தது. சுதந்திரப் போராட்டம் அரசியல் போராட்டமாக உருவெடுத்து, இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட வேளையில் முன் நின்ற மாநிலம் இது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி முதல் ராகுல் காந்தி வரை நீளும் அரசியல் சங்கிலி இங்கேதான் தொடங்குகிறது. இந்தியாவுக்கு அதிக பிரதமர்களை அளித்த மாநிலம் இது.
பாரதிய ஜனதாக் கட்சியின் முதல் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் இம்மாநிலத்தைச் சேர்ந்தவரே. இந்தியாவின் மதச்சார்பின்மைக்குக் களங்கத்தை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்த அயோத்தி இங்கேதான் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் அரசியலிலும் முன்னோடியாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் தான், தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாயாவதி முதலமைச்சராக ஆனார். இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கும் இந்தி மொழி இலக்கியம் பிறந்த இடம் இது.
உதயமானது உத்தரப் பிரதேசம்
1947-ல் ஐக்கிய மாகாணமாக இருந்த பகுதி, சுதந்திர இந்தியாவின் நிர்வாக மையங்களில் ஒன்றாக ஆனது. 1950-ல் ஐக்கிய மாகாணம், உத்தரப் பிரதேசம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக மாறியது.
அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளையும் 404 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்ட பரந்து விரிந்த மாநிலம் இது. 1999-ல் இம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து உத்தராகாண்ட் என்னும் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.
பரந்து விரிந்த பிரதேசம்
கிழக்கே பிஹாரும் தெற்கில் மத்தியப் பிரதேசமும் மேற்கில் ராஜஸ்தான், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களும் வடக்கே உத்தராகண்டும் நேபாளமும் எல்லையாக அமைந்துள்ளன. இம்மாநிலம் 2,36,286 சதுர கி.மீ. பரப்புடையது. இது பிரான்ஸ் நாட்டின் பரப்பளவில் பாதி அளவு.
வளம் மிக்க பூமி
வேளாண்மையே மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது. நெல், கோதுமை, பார்லி, சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்டவை முதன்மைப் பயிர்கள். மாம்பழம், கொய்யா மகசூலும் அதிக அளவில் உள்ளது. கங்கை, யமுனை, கோமதி, ராம கங்கை, காரா, பேத்வா, கென் ஆகிய முக்கிய நதிகளின் பலனால் வளமிக்க பூமியாகத் திகழ்கிறது இம்மாநிலம்.
மக்களும் கலைகளும்
மக்கள் தொகை 19 கோடியே 95 லட்சத்து 81 ஆயிரத்து 477 பேர். ஆயிரம் ஆண்களுக்கு 908 பெண்கள் என்பது பாலின விகிதாச்சாரம். படிப்பறிவு 69.72 சதவீதம். இந்து மதத்தினர் 79.73 சதவீதமும் இஸ்லாம் மதத்தினர் 19.26 சதவீதமும் சீக்கிய மதத்தினர் 0.32 சதவீதம் பேரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் 0.11 சதவீதம் பேரும் உள்ளனர்.
மர வேலைப்பாடுகள், அலங்காரத் தரை விரிப்புகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்களுக்குப் பெயர் பெற்ற மாநிலம் இது.
சர்குலா, கார்மா, பாண்டவம், பாய்-தண்டா, தாரு, தோபியா, ராய், ஷாய்ரா ஆகியவை மண்ணின் கலைகளாக இன்றும் உயிர்ப்புடன் நிகழ்த்தப்படுகின்றன. செவ்வியல் நடனமான கதக் பிறந்த பூமி இது.
பண்டிகைகள் மற்றும் விழாக்கள்
ரக்ஷாபந்தன், வைஷாகி பூர்ணிமா, விஜயதசமி, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா, மகர சங்கராந்தி, சிவராத்திரி, ஹோலி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், மொகரம், புத்த பூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி, குருநானக் ஜெயந்தி என ஆண்டுதோறும் சுமார் 2,250 பண்டிகைகள் இங்கே நடத்தப்படுகின்றன.
சுற்றுலாத் தலங்கள்
பிப்ரஹவா, கவுசாம்பி, சரஸ்வதி, சாரணாத், குஷிநகர், சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, ஜான்சி, மீரட் .