

ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் அடுத்ததாக அறிமுகமாகியிருக்கிறது ஸ்மார்ட் வாட்டர் பாட்டில். உடல் ஆரோக்கியமாக இருப்பதில் நீர்ச்சத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், எப்போதும் ஏ.சி. அறையில் புழங்குவோருக்குத் தாகம் எடுப்பதே தெரியாது என்பதால் தண்ணீர் பருகுவதையே மறந்துவிடுவார்கள்.
இந்தக் குறைப்பாட்டைப் போக்கத்தான் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில் வந்திருக்கிறது. தண்ணீர் குடிக்கும் நேரத்தைக் கண்காணித்து தண்ணீர் குடிக்க ஞாபகப்படுத்துவதுதான் இதன் வேலையே. ஸ்மார்ட் வாட்ச் போல இதுவும் செயலி வழியாகத்தான் இயங்கும். பல்வேறு விலைகளில் இந்த வாட்டர் பாட்டில் ஆன்லைனில் கிடைக்கிறது.
வந்தாச்சு டிஜிட்டல் ஆடை!
தொழில்நுட்பப் பாய்ச்சல் வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பயனர் அடையாளத்தை இணைக்கும் ஒரு வழியாக அவதார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஒன்றாக இணைத்து, பயனர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் அதிவேக ‘மெட்டாவெர்ஸ்’ உருவாக்கத்தை நோக்கியும் ஃபேஸ்புக் நிறுவனம் நகர்ந்துகொண்டிருக்கிறது.
அடுத்த கட்டமாக டிஜிட்டல் ஆடையை அறிமுகப்படுத்தி அசரடித்திருக்கிறது இந்நிறுவனம். ஏற்கெனவே தங்கள் பயனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அவதார்களுக்கு ஆடைகளை வாங்கி, அழகு பார்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இதற்காக வெர்சுவல் ஆடை ஸ்டோர் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளது. அதில் பலவிதமான வெர்சுவல் ஆடைகள் வெளியிடப்பட உள்ளன.