Published : 24 May 2016 01:47 PM
Last Updated : 24 May 2016 01:47 PM

வேலை வேண்டுமா? - சுருக்கெழுத்து தெரிந்தால் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் துறைகளிலும் காலியாகவுள்ள குரூப்-சி, குரூப்-டி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) நடத்துகின்ற போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் காலியாகவுள்ள சுருக்கெழுத்தர் (கிரேடு-சி, கிரேடு-டி) பணியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை மாதம் 31-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தவிருக்கிறது. காலியிடங்கள் எத்தனை என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

சுருக்கெழுத்தர் (Stenographer) பணிக்கு விண்ணப்பிக்க சுருக்கெழுத்து (Stenography) தெரிந்திருக்க வேண்டும் என்பதுடன் குறைந்தபட்சம் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டியது அவசியம். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு (சுருக்கெழுத்து தேர்வு) மூலம் பணி நியமனம் நடைபெறும்.

எழுத்துத்தேர்வில் பொது அறிவு, ரீசனிங், ஆங்கில மொழி ஆகிய 3 பகுதிகளில் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. 4 கேள்விகளுக்குத் தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சுருக்கெழுத்து தேர்வுக்கு (Skill Test) அழைக்கப்படுவார்கள்.

சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இறுதி பணி நியமனம், துறைகள் ஒதுக்கீடு ஆகியவை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே நடைபெறும். உரிய கல்வித் தகுதி, வயது வரம்பு, தொழில்நுட்பத் தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் ( >www.ssconline.nic.in) ஜூன் மாதம் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொழில்நுட்பத் தகுதி, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். சுருக்கெழுத்தர் பணியில் சேருபவர்கள் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் எழுதி உயர் பணிகளுக்குச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x