

1974க்கு முன்பு வரை, குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்தச் சூழலில், சட்டத் திருத்தத்தின் மூலம் புதிய விதிமுறைகள் 1974 குடியரசுத் தலைவர் தேர்தலில் அறிமுகமாயின.
சுயேச்சைகளின் ஆதிக்கம்
1969இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் வரை சுயேச்சைகள் போட்டியிட அனுமதி இருந்தது. அதனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் அதிகளவில் போட்டியிட்டு வந்தனர். ஒரு வாக்குகளைக்கூடப் பெற முடியவில்லை என்றாலும், சிலர் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாகவே வைத்திருந்தனர். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்து நேரத்தையும் வீணடித்து வந்தனர்.
இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வந்தன. அதன்படி குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய விதிமுறைகள் 1974 தேர்தலில் கொண்டு வரப்பட்டன. இதற்காகக் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம் 1952இல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
புதிய விதிமுறைகள்
புதிய விதிமுறைகளின்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 10 மக்கள் பிரதிநிதிகள் முன்மொழிய வேண்டும்; 10 மக்கள் பிரதிநிதிகள் வழிமொழிய வேண்டும். தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகையும் உயர்த்தப்பட்டது, முக்கியமாக, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே தொடர முடியும். இந்தத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சுயேச்சைகள் போட்டியிடாத முதல் தேர்தல்
ஆறாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். இவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, அசாமைச் சேர்ந்த ஃபக்ருதீன் அலி அகமதுவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. எதிர்க்கட்சிகள் இணைந்து திர்தீப் சவுத்ரியைக் களத்தின் இறக்கின. குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதால், கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமே களத்திலிருந்தனர். சுயேச்சைகள் போட்டியிடவில்லை. சுயேச்சைகள் போட்டியிடாத முதல் தேர்தலாகவும் அது அமைந்தது.
ஆறாவது குடியரசுத் தலைவர்
ஆறாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1974 ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஆகஸ்ட் 20 அன்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ஃபக்ருதீன் அலி அகமது 7,54,113 வாக்கு மதிப்புகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திரதீப் சவுத்ரி 1,89,196 வாக்கு மதிப்புகளை மட்டுமே பெற்றார். அதாவது ஃபக்ருதீன் அலி அகமது 79.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தார். சவுத்ரி 20.1. சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியைச் சந்தித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஃபக்ருதீன் அலி அகமது ஆகஸ்ட் 24 அன்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் நாத் ரே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
(1977 டைரியைத் திருப்புவோம்)