தூக்கத்தின் தரத்தையும் நேரத்தையும் அதிகரிக்கும் வழிகள்

தூக்கத்தின் தரத்தையும் நேரத்தையும் அதிகரிக்கும் வழிகள்
Updated on
2 min read

தூக்கம் என்பது மூளை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கையான வழி. மீண்டும் புத்துணர்வோடு மூளை செயல்படுவதற்காக அப்போது உடலுக்கு ஓய்வு அளிக்கப்படும். பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன.

இளவயதில் தேவையான அளவுக்குத் தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம்கூடப் போதுமானதே. ஆனால், தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுகிறார் என்பதுதான் முக்கியம்.

தூக்கம் கெடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

  • பசி குறையும்
  • அஜீரணம் தலைகாட்டும்
  • உணவின் அளவு குறையும்
  • உடல் எடை குறையும்
  • பணியில் ஆர்வம் குறையும்
  • பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள்
  • அடுக்குக் கொட்டாவி வரும்
  • சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும்
  • மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் சாத்தியங்கள் உள்ளன.

தூக்கம் குறைவதற்கான காரணங்கள்

  • பரபரப்பான வாழ்க்கை முறை
  • இரவில் அலைப்பேசியில் பேசுவது, கணினியில் வேலை செய்வது
  • முதுமையில் ஏற்படும் தனிமை
  • உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது
  • இழப்பு, சோகம், கடன், நிதி வசதிக் குறைவு போன்றவற்றால் ஏற்படுகிற மனக் கவலை, மன அழுத்தம்
  • முதுமையில் ஏற்படுகிற மூட்டுவலி, ஆஸ்துமா, இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், நெஞ்செரிச்சல், இரைப்பைப் புண், புராஸ்டேட் வீக்கம், குறட்டை
  • பகலில் அதிக நேரம் தூங்குவது
  • இரவு நேரத்தில் அறை விளக்குகளை அணைத்துவிட்டு தொலைக்காட்சி. பார்ப்பது
  • சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகள்
  • இரவில் காபி, தேநீர் அல்லது மது அருந்துவது
  • சுயமாக எடுத்துக்கொள்ளும் தூக்க மாத்திரைகளின் பக்கவிளைவு
  • பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ரத்தசோகை, கெண்டைக்கால் தசைகள் இழுத்துக்கொள்வது
  • மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

தூக்கத்தை அதிகரிக்கும் வழிகள்

  • எழும் நேரத்தையும் படுக்கப்போகும் நேரத்தையும் ஒழுங்குக்குள் கொண்டு வருதல்
  • அரை மணிநேரம் மட்டுமே பகலில் தூங்க வேண்டும்
  • மாலையிலும் உடற்பயிற்சி செய்தல்
  • தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்
  • இரவில் கொழுப்பு, மசாலா, காரம் மிகுந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு காபி, தேநீர், குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம்.
  • தூங்கச் செல்வதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும்.
  • இரவு எட்டு மணிக்குப் பிறகு அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம்.

நண்பர்களுடன் பேசுங்கள்

குடும்பப் பிரச்சினை காரணமாக மன அழுத்தம் இருந்தால், நெருங்கிய நண்பர்களுடன் அடிக்கடி பேசும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது மனதுக்கு இதம் தருகிற ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடுங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, தியானம், யோகா செய்வது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, ஓவியம் வரைவது, தோட்டம் வளர்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் மனம் அமைதி அடைந்து, தேவையில்லாத சிந்தனைகள் ஒழிந்து, நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்; மனத்தையும் அமைதிப்படுத்தும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in