பெண்கள் இனி வாட்ஸ்அப் மூலம் மாதவிடாய் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கலாம்
மாதவிடாய் குறித்த முழுமையான தகவல்களைப் பெண்களுக்கு வழங்கும் நோக்கில் ஒரு பயனுள்ள வசதி வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் புதிய அறிமுகம் பீரியட் டிராக்கர் எனப்படும் மாதவிடாய் கண்காணிப்பு வசதியை வாட்ஸ்அப் மூலம் பெண்களுக்கு அளிக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்கு இந்தக் கண்காணிப்பு வசதி உதவும்.
மாதவிடாய் கண்காணிப்பு வசதியை அளிப்பதற்கு 'சிரோனா ஹைஜீன்' எனும் தனியார் நிறுவனத்துடன் வாட்ஸ்அப் கைகோத்து இருக்கிறது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதாந்திர மாதவிடாய்ச் சுழற்சி முறையாக நிகழ்கிறதா என்பதை வாட்ஸ் அப் மூலம் எளிதில் உறுதிசெய்து கொள்ளலாம்.
சிரோனாவின் செயல்முறை
சிரோனா வாட்ஸ்அப் வணிக கணக்கிற்கு நீங்கள் வெறுமனே 'ஹாய்' என்று குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். அது உடனடியாக மாதவிடாய் நாட்களைப் பெண் பயனர்களுக்குத் தெரிவித்து விடும்.
தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறுவதற்கு முன்னர், பெண் பயனர்கள் தங்களது மாதவிடாய் நாட்கள், மாதவிடாய் இடைவெளி, கடந்த மாதம் அது தொடங்கிய தேதி, முடிந்த தேதி உள்ளிட்ட விவரங்களை 9718866644 எனும் சிரோனா வாட்ஸ்அப் வணிகக் கணக்கின் அலைப்பேசி எண்ணுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.
அதன் பின்னர் அந்த உள்ளீடுகளின் அடிப்படையில் பெண் பயனர்களுக்கு மாதவிடாய் தேதிகள் நினைவூட்டப்படும். அடுத்ததாக வரவிருக்கும் மாதவிடாய்ச் சுழற்சி தேதிகள் குறித்த அறிவிப்புகளும் வாட்ஸ்அப் மூலம் பெண் பயனர்களுக்குப் பகிரப்படும்.
அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்
பயணங்கள், அலுவலக நிகழ்வுகள், குடும்ப விழாக்கள் போன்றவற்றின்போது எதிர்பாராத விதமாக நிகழும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். இத்தகைய அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்கு மாதவிடாய்க் கண்காணிப்பு வசதி பெண்களுக்கு பெரும் அளவில் உதவும். முக்கியமாக, மாதவிடாயை நாட்களைக் கையாள்வதற்குத் தேவைப்படும் ஆயுத்த நிலையில் எப்போதும் இருப்பதற்கும் இந்த மாதவிடாய்க் கண்காணிப்பு வசதி உதவும்.
எப்படிப் பயன்படுத்துவது?
- பெண் பயனர்கள் கீழே உள்ள எளிய வழிமுறைகளின் மூலம் இந்த வசதியை எளிதில் பெற முடியும்.
- முதலாவதாக, 9718866644 எனும் அலைப்பேசி எண்ணை உங்கள் அலைப்பேசியில் சேமித்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பின்னர் அந்த அலைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் `ஹாய்' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
- அந்த வாட்ஸ்அப் சாட்டில் உங்களின் மாதவிடாய், ஆரோக்கியம் குறித்து சில கேள்விகள் கேட்கப்படும்.
- அந்தக் கேள்விகளுக்கு முறையான வகையில் நீங்கள் பதில் அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் பதில்கள் எந்த அளவுக்குச் சரியானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மாதவிடாய்க் கண்காணிப்பு வசதியின் துல்லியமும் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
- அதன் பின்னர், பீரியட் ட்ராக்கர் எனும் தேர்வை க்ளிக் செய்யவேண்டும்.
- அதன் பின்னர் கடைசியாக மாதவிடாய் எப்போது ஏற்பட்டது, மாதவிடாயின்போது ரத்தப்போக்கு எப்படி இருக்கும் போன்ற தனிப்பட்ட விவரங்கள் உங்களிடம் கேட்கப்படும்.
- அந்த விவரங்களை நீங்கள் அளித்த உடன், உங்களின் அடுத்த மாதவிடாய் எப்போது ஏற்படும், கருமுட்டை எப்போது உருவாகும், நீங்கள் கருவுறும் வாய்ப்பு அதிகமிருக்கும் நாட்கள் உள்ளிட்ட தகவல்கள் உங்களுக்கு விரிவாக அளிக்கப்படும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பெண்களின் மாதவிடாய்க் காலத்தைக் கண்காணிப்பதற்கும், அதை முறையாகப் பேணுவதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில் பல செயலிகள் இணையச் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து நமக்குத் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குள் நமக்கு போதும், போதும் என்றாகிவிடும். அதையும் மீறி, நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்தால், அதை நாம் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் அந்தச் செயலியை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இந்தச் செயல்முறை நம்மை மிகுந்த களைப்புக்கு உள்ளாக்கிவிடும்.
ஆனால், வாட்ஸ்அப் மூலம் சிரோனா அளிக்கும் மாதவிடாய்க் கண்காணிப்பு வசதி நமக்குச் சலிப்பை அளிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிது. நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் குறுஞ்செய்திகளை, சிரோனாவின் அறிவிப்புகள் நமக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படுகிறது. சிரமமின்றி எளிதாக பெண் பயனர்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் எளிய வழிமுறை இது.
