Published : 27 Jun 2022 04:57 PM
Last Updated : 27 Jun 2022 04:57 PM

தலைவாழை | உடனடி அடை

ந்தக் காலக் குழந்தைகளுக்கு எல்லாமே உடனுக்குடன் நடந்துவிட வேண்டும். எதற்குமே இரண்டு நிமிடங்களுக்கு மேல் காத்திருக்காத குழந்தைகளுக்கு ஏற்ப பெற்றோரும் மாற வேண்டியதாக இருக்கிறது. குழந்தைகள் கேட்டதுமே சமைத்துக்கொடுக்கும் வகையில் கிடைக்கிற ரெடி மிக்ஸ் வகைகளைத்தான் பெற்றோரும் நாடுகின்றனர். குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய மட்டுமல்லாமல் திடீர் விருந்தினரைச் சமாளிக்கவும் ரெடி மிக்ஸ் வகைகள் உதவும் என்கிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த ர.கிருஷ்ணவேணி. வீட்டிலேயே செய்யக் கூடிய ரெடி மிக்ஸ் வகைகளின் செய்முறையை அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

பாயசம் மிக்ஸ்

என்னென்ன தேவை?
சேமியா - அரை கப்
மில்க் பவுடர் - இரண்டு கப்
சர்க்கரை - முக்கால் கப்
ஏலக்காயத் தூள் - கால் டீஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தலா 10
பாதாம் - 2

எப்படிச் செய்வது?
பாதாமை ஊறவைத்துத் தோலுரித்துத் துணியில் காயவையுங்கள். இதை மொத்தமாகச் செய்துவைத்துத் தேவையானபோது உபயோகிக்கலாம். காய்ந்த பாதாமைத் துருவிக்கொள்ளுங்கள்.
வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையை அதில் போட்டு வறுத்தெடுங்கள். அத்துடன் சேமியா சேர்த்துச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, ஏலக்காய்த் தூள், மில்க் பவுடர் மூன்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுங்கள். இத்துடன் குங்குமப்பூ சேருங்கள்.
வறுத்த சேமியா, அரைத்த சர்க்கரைக் கலவை, வறுத்த முந்திரி, திராட்சை, துருவிய பாதம் இவற்றைச் சேர்த்து நன்கு கலந்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வையுங்கள்.
பாயசம் செய்யும்போது இந்த மிக்ஸை எடுத்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதித்ததும் எடுங்கள். கூடுதல் சுவைக்கு இரண்டு டீஸ்பூன் மில்க் மெய்டு சேர்க்கலாம். இதேபோல் ரவையிலும் அவலிலும் செய்யலாம்.

அடை மிக்ஸ்

என்னென்ன தேவை?

இட்லி அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, பொட்டுக்கடலை - தலா கால் கப்
மிளகாய் வற்றல் - 6
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி வகைகளை ஒன்றாகவும் பருப்பு வகைகளையும் ஒன்றாகவும் சேர்த்து வெறும் கடாயில் சூடுவரப் புரட்டியெடுங்கள். சிவக்க வறுக்கக் கூடாது. மிளகாய் வற்றல், கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள்.
வறுத்த அரிசி, பருப்பு வகைகள், பொட்டுக்கடலை, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை, சுக்குத்தூள், பெருங்காயத்தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து சன்ன ரவையாகப் பொடித்துக்கொள்ளுங்கள். இதை ஆறவைத்து, எடுத்து வையுங்கள்.
அடை செய்யும்போது ஒரு கப் மாவுக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துப் பத்து நிமிடம் ஊறவைத்துப் பிறகு அடையாக வார்க்கலாம். கூடுதல் சுவைக்கு தேங்காய்த் துருவல், வெங்காயம், நறுக்கிய கீரை சேர்க்கலாம்.

ர.கிருஷ்ணவேணி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x