Published : 06 May 2016 01:19 PM
Last Updated : 06 May 2016 01:19 PM

கமலக்கண்ணனின் சைக்கிள் சுற்றும் உலகம்!

“இளைஞர்களுக்கு நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான் சார். உங்களோட முப்பது வயசுக்குள்ளே இந்தியா அல்லது உலக அளவிலே ஒரு டூர் போயிட்டு வந்துடுங்க. அது பைக்ல போறதாவும் இருக்கலாம் அல்லது என்னை மாதிரி சைக்கிள்ல போறதாவும் இருக்கலாம். அந்த அனுபவம் உங்களைச் சிறந்த மனுஷனாக்கும்!" என்று 'டாப் கியரி'ல் மெஸேஜ் தட்டுகிறார் கமலக்கண்ணன்.

கமலக்கண்ணனை அறிமுகப்படுத்துவதென்றால் இப்படிச் சொல்லலாம்: 'டிராவலிங் பிரியர், சைக்கிளிங் வெறியர்!'. தனது சைக்கிள் மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்கச் சுற்றி வந்த இவர் தற்போது சைக்கிள் மூலம் உலகத்தைச் சுற்றிவரத் தயாராகி வருகிறார். என்ன காரணம்? அவரே சொல்கிறார்...

“பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நெய்வேலிதான். ஸ்கூல் டைம்ல அகாடெமிக்ஸ்ல இன்ட்ரஸ்ட்டே இல்லை. ஆனா, க்விஸ், ஸ்போர்ட்ஸ்னு எல்லாத்துலயும் கலந்துக்குவேன். உலகம் முழுக்கப் பயணம் செஞ்ச டிராவலர்ஸ் எழுதுன புக்ஸ் எல்லாம் படிச்சேன். அதனாலேயோ என்னவோ எனக்குக் டிராவலிங் பண்ற மாதிரியே கனவுகள் வரும்.

ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம் இன்ஜினியரிங் சேர்த்துவிட்டாங்க. ஆனா மனசு அதுல போகுல. ஃப்ரண்ட்ஸ்களுக்குக் கதை சொல்றது. சைக்கிள்ல ரவுண்டடிக்கிறது, நிறைய படங்கள் பார்க்குறதுன்னு நாட்கள் போயிட்டிருந்தது. ஒரு கட்டத்துல, நாம எதிர்பார்க்குற விஷயம் இது இல்லைன்னு தோணுச்சு. உடனே, அந்தப் படிப்பை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு, சென்னைக்கு வந்து லயோலாவுல விஸ்காம் சேர்ந்தேன்.

அப்போ நான் போரூர்ல தங்கியிருந்தேன். அங்க இருந்து நுங்கம்பாக்கத்துக்கு பஸ்ல வருவேன். டிராஃபிக், கூட்டம்னு ரொம்ப டயர்டா இருக்கும். 'சரி, இனி பஸ் வேண்டாம், நம்மகிட்டதான் சைக்கிள் இருக்கே'ன்னு சொல்லிட்டு, தினமும் காலேஜுக்கு சைக்கிள்ல வர்ற ஆரம்பிச்சேன். ஃபைனல் இயர்ல நாங்க ஒரு குறும்படம் பண்ணனும். அதுக்காக, நான் வீட்ல இருந்து கிளம்பி காலேஜ் வந்து சேர்ற வரைக்கும் ரோட்ல நடக்கிற எல்லா விஷயங்களையும் சைக்ளிங் பண்ணிக்கிட்டே படம் எடுக்கணும்னு ஒரு கான்செப்ட் பிடிச்சேன். ஆனா, அப்போ அந்த விஷயத்தை ‘மெட்டீரியலைஸ்' பண்ண முடியாமப் போச்சு.

அது 2013-ம் வருஷம். காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் மயிலாப்பூர்ல வேலை கிடைச்சுது. அந்த டைம்ல நான் சோழிங்கநல்லூர்ல தங்கியிருந்தேன். ஆஃபீஸுக்கும் வீட்டுக்கும் போக வர, ஒரு நாளைக்கு 40 கி.மீ. சைக்கிள்லயே டிராவல் பண்ணுவேன். அப்போ ஒரு நாள் ‘ப்ரீமியம் ரஷ்'னு ஒரு ஹாலிவுட் படம் பார்த்தேன். அந்தப் படத்தினால இன்ஸ்பயர் ஆகி, நானும் ‘பைசைக்கிள் மெசெஞ்சர்' ஆனேன்.

‘பெடல் மெசெஞ்சர்'னு பேர் வெச்சுக்கிட்டு, யாராவது வீட்ல இருந்து ஆஃபீஸ் போகும்போது, பென்ட்ரைவ், மொபைல், சி.டி, சார்ஜர், சாவினு சின்னச் சின்னப் பொருட்களை மறந்துட்டுப் போயிருந்தா, அதை அவங்ககிட்ட கொண்டுபோய் சேர்க்கிற வேலை அது. நான் ஒருத்தனே முதலாளியும் தொழிலாளியும். திருவான்மியூர்ல இருந்து சிறுசேரி வரைக்கும் இந்த ‘சர்வீஸ்' பண்ணிட்டிருந்தேன்.

இன்னிக்கு அந்த மாதிரி நிறைய பேர் பண்ணிட்டிருக்காங்க. ஆனா சென்னையில இந்தச் சேவையை அறிமுகப்படுத்துன முதல் ஆள் நான்தான்! ஒரு ரெண்டு வருஷம் அந்த வேலையைப் பார்த்துட்டு அப்புறம் விட்டுட்டேன். ஏன்னா, எனக்கு இந்த உலகம் முழுக்க சைக்கிள்லயே சுத்திப் பார்க்கணும்னு ஆசை. கையில கொஞ்சம் பணம் இருந்துச்சு. உலகைச் சுற்றுவதற்கு முன்னாடி நாம தமிழகத்தைச் சுற்றுவோம்னு முடிவு பண்ணி 2015-ம் வருஷம் மே 3-ம் தேதி சென்னையில தொடங்குன அந்தப் பயணத்தை 25-ம் தேதி சென்னையிலேயே வந்து முடிச்சேன்.

போன ஊர்கள்ல எல்லாம் ரொம்பச் சிறப்பா நம்மளைப் பார்த்துக்கிட்டாங்க. சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறது, வழிச் செலவுக்குக் காசு கொடுக்கிறது, கூட நின்னு போட்டோ எடுத்துக்கிறதுன்னு மக்கள்கிட்ட இருந்து அவ்ளோ அன்பு.

அந்தப் பயணம் கொடுத்த தைரியத்துல இந்தியா முழுக்கச் சுத்துவோம்னு முடிவு பண்ணேன். அதனால அடுத்த 6 மாசம் ஒரு கம்பெனில சேர்ந்து வொர்க் பண்ணேன். ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி, இந்தின்னு பல மொழிகளையும் கத்துக்கிட்டேன். இந்த வருஷம் பிப்ரவரி 1-ம் தேதி ஆரம்பிச்ச என்னோட 'இந்தியா டூர்' மார்ச் 2-ம் தேதி முடிஞ்சது. போற இடங்கள்ல தங்குறதுக்கு இடம் கொடுக்கிறது, எங்களோட அனுபவங் களைப் பகிர்ந்துக்கு லெக்சர் ஏற்பாடு செய்யுறதுன்னு மக்கள்கிட்ட‌ இந்தப் பயணத்துக்கும் ரொம்ப நல்ல வரவேற்பு.

அடுத்தது ‘வேர்ல்ட் டூர்'. அதுக்குத்தான் நான் இப்போ தயாராகிட்டிருக்கேன். மொத்தம் 4 கண்டங்கள், 120 நாட்கள், 25 நாடுகள்... சைக்கிள்லயே சுத்தறதுன்னு திட்டம். இவ்வளவு குறைந்த நாட்கள்ல, இத்தனை நாடுகளை சைக்கிள்ல சுத்துனவங்க யாரும் இல்லை. அதனால கின்னஸ் ரெக்கார்டுக்கும் நான் முயற்சி பண்ணிட்டிருக்கேன். அப்படி நான் சாதிச்சுட்டேன்னா, இந்தச் சாதனையை செய்யுற முதல் ஆசியன், முதல் இந்தியன் நானாகத்தான் இருப்பேன்.

உலகத்தைச் சுத்தறதுதான் சுத்துறோம். ஏன் சும்மா சுத்தணும்? எதாவது ‘கேம்பைன்' பண்ணலாமேன்னு யோசிச்சேன். ஐக்கிய நாடுகள் சபை இந்த வருஷத்தை ‘சர்வதேச பருப்புகள் ஆண்டாக' அறிவிச்சிருக்கு. பருப்பு வகைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குச் சிறுதானியங்களும் முக்கியம். ஊட்டச்சத்து, விளைவிக்க அதிகம் தண்ணீர் தேவைப்படாததுன்னு நிறைய பயன்கள் இருக்கு. அப்படி நம்மகிட்ட இருக்கிற சிறுதானியங்கள், அதோட பலன்கள் பத்தி உலக மக்களிடம் விழிப்புணர்வு செய்யப் போறேன்.

இப்போ இந்தப் பயணத்துக்காகத்தான் நான் தீவிரமாத் தயாராகிட்டிருக்கேன். எனக்கு இருக்கிற ஒரே தடை... பணம் மட்டும்தான். அதை மட்டும் சமாளிச்சுட்டேன்னா போதும். சாதனைகள் ரொம்பப் பக்கத்துல!"

நீங்க சாதிப்பீங்க கமலக்கண்ணன்!

தொடர்புக்கு: 8939270181

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x