

மீகாங் நதியில் கம்போடியா மீனவர் ஒருவர் சமீபத்தில் திருக்கை மீன் (ஸ்டிங்ரே) ஒன்றைப் பிடித்தார். உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட நன்னீர் மீன்களில் அதுவே மிகப்பெரியது. அந்த மீனின் எடை 300 கிலோ, நீளம் நான்கு மீட்டர்.
நன்னீர் மீன்களுக்கான முந்தைய சாதனையாக ஒரு கெளுத்தி மீன் இருந்தது. அந்த மீனும் மீகாங் நதியில்தான் பிடிபட்டது. 2005இல் தாய்லாந்தில் பிடிக்கப்பட்ட அந்த மீன் 293 கிலோ எடையுடன் இருந்தது. இந்தச் சூழலில்தான், தற்போது கம்போடியா மீனவர், கம்போடியாவின் வடகிழக்கில் உள்ள ஸ்டங் ட்ரெங் அருகே உலகின் மிகப்பெரிய ஸ்டிங்ரே மீனைப் பிடித்திருக்கிறார்.
சில மீன்கள் தங்கள் வாழ்நாளின் சில காலம் நன்னீரிலும், சில காலம் உப்புநீரிலும் கழிக்கின்றன. இதன் விளைவாக, பெலுகா ஸ்டர்ஜன், புளூஃபின் டுனா போன்ற பெரிய மீன்கள் நன்னீர் மீன் பட்டியலில் இடம்பெறுவது இல்லை.
மீகாங் நதியின் ஆரோக்கியம்
மீகாங் நதி சீனா, மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் வழியாகப் பாய்ந்து செல்கிறது. இந்த நதி பல்வேறு வகையான பெரிய நன்னீர் மீன்களுக்குத் தாயகமாக உள்ளது. இந்த நதியின் இயல்பு, அதன் வழித்தடம், அதில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றைக் காக்கும் நோக்கில் ’மீகாங் நதியின் அதிசயங்கள்’ என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மிகப்பெரிய திருக்கை மீன் பிடிபட்டது தெரிந்ததும், அந்த அமைப்பைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கே அவர்கள் பிடிபட்ட மீனை அளந்ததுடன், ஒளிப்படம் எடுத்தனர். அந்த ஒளிப்படம்தான் தற்போது வைரலாக உலகெங்கும் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் குழுவின் தலைவரான ஸெப் ஹோகன், நன்னீர் ஆற்றில் இவ்வளவு பெரிய மீனைப் பார்ப்பது கடினம் என்று திகைப்புடன் கூறுகிறார். மீகாங் நதியில் இவ்வளவு பெரிய அளவில் மீன்கள் இருப்பது, அந்த நதி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறி என்று அவருடைய குழுவினர் கருதுகின்றனர்.
மீகாங் நதியில், கடந்த இரண்டு மாதங்களில் கண்டறியப்பட்ட நான்காவது பெரிய மீன் இது. எனவே, அந்த இடம் மீன்கள் முட்டையிடச் செல்லும் இடமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அழிவின் பாதையில் மீன்கள்
உலகளவில் பெரிய நன்னீர் மீன்களில் சுமார் 70 சதவீதம் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போக்கு மீகாங் நதியில் வாழும் பெரிய மீன்களுக்கும் பொருந்தும். அந்த மீன்களின் அளவு காரணமாக அவை எளிதில் பிடிபட்டு விடுகின்றன. மேலும், வணிக ரீதியில் லாபத்தை அள்ளிக்கொடுப்பதால், அத்தகைய பெரிய மீன்களே அதிகம் பிடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
பொதுவாக இத்தகைய பெரிய மீன்கள் முழு அளவுக்கு வளர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் இந்த மீன்கள், அவை இனப்பெருக்கம் செய்வதற்கு முன்னரே பிடிக்கப்பட்டு விடுகின்றன. இதன் காரணமாக, அளவில் பெரிய மீன்கள் வேகமாக அழிந்துவருகின்றன. மேலும், இந்த மீன்கள் வாழ்வதற்கு நீண்ட நதிகள் அல்லது ஆழமான ஏரிகள் தேவைப்படும். நீண்ட நதிகளின் குறுக்கே கட்டப்படும் பெரிய அணைகள் நதியின் போக்கை மட்டுமல்லாமல்; இயற்கையான நீர்வழி பாதையையும் மாற்றியமைத்துவிடுகின்றன. இது அந்த மீன்களின் அழிவை மேலும் துரிதமாக்குகிறது. உலகம் முழுவதும் விரைவாக அழிந்துவரும் பெரிய மீன்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
திருக்கை மீனைப் புரிந்துகொள்ளும் முயற்சி
கம்போடியாவில் பிடிபட்ட உலகின் பெரிய நன்னீர் மீனை அவர்கள் கொல்லவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். ’மீகாங்கின் அதிசயங்கள்’ ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த அறிவியலாளர்கள், அந்த மீனை மீண்டும் நதியிலேயே விட்டுவிட்டனர். அதை நதியில் விடுவதற்கு முன்னர், அதன் வால் அருகே ஒரு கண்காணிப்பு கருவியைப் பொருத்தினர். அந்தக் கருவி அந்த மீனின் நடமாட்டம் குறித்த தகவல்களை அவர்களுக்குத் தொடர்ந்து அனுப்பும்.
திருக்கை மீன்கள் நாம் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத மீனாகவே தற்போதுவரை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் பெயர் கூட பல முறை மாறியிருக்கிறது. எனவே, இந்த மீனில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியிலிருந்து கிடைக்கும் தகவல்கள், அந்த மீனின் வாழ்வைத் தொடர்ந்து கண்காணிக்கவும். அதன் இருப்பை உறுதி செய்யவும் உதவும். அந்த மீனின் நடமாட்டத்தைப் பின்தொடர்வதன் மூலம், அதன் வாழ்க்கையைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள முடியும் என அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அந்த மீன் நேரத்தை எப்படிச் செலவிடுகிறது? எங்கே செலவிடுகிறது? நதியின் வழியே நகரும்போது அது என்னச் செய்கிறது என்பன போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள அந்தத் தகவல்கள் உதவும்.
பிடித்தவருக்கு 50,000 ரூபாய்
கம்போடியாவில் உள்ள மீனவர்கள் அந்தப் பெரிய மீனை போராமி அல்லது முழு நிலவு என்று அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஏனெனில், அந்த மீனை மீண்டும் நதியில் விடும்போது சந்திரனைப் போல் பெரியதாக இருந்தது. அந்த மீனைப் பிடித்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. அது அந்த மீனைச் சந்தையில் விற்றால் அவருக்குக் கிடைக்கும் தொகை. இது பாராட்டப்பட வேண்டிய முயற்சியும் கூட.