

சிறுநீரக நோய்களுக்கு டயாலிசிஸ், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள் ஆகிய முறைகளில் சிகிச்சையளிக்கப்படுகின்றன. டயாலிசிஸ் என்பது ரத்தத்திலிருந்து கழிவுகளையும் கூடுதல் நீரையும் பிரிக்கும் ஒரு முறையாகும்.
பல காரணங்களால் ஏற்படும் நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு, உலகம் முழுவதும் நோய்த் தாக்கத்துக்கும் இறப்புக்கும் காரணமாகிறது. டயாலிசிஸ் ஒரு சவாலான மருத்துவ முறையாகும். இம்முறை சிறுநீரகங்களின் வேலையைச் செய்கிறது. சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். ஆனாலும், இந்தச் சிகிச்சையைப் பற்றி பல கட்டுக்கதைகள் நிலவுகின்றன.
டயாலிசிஸ் ஒரு வலி உண்டாக்கும் சிகிச்சை முறை எனச் சொல்லப்படுவதுண்டு. டயாலிசிஸ் சிகிச்சையின்போது இரத்த ஓட்டத்தை அணுக ஊசியைப் பயன்படுத்துவதால் தொடக்கத்திலும் அதன் முடிவிலும் சிறிய அளவில் வலியை உணரலாம். மிகப் பெரிய வேதனையையும் கஷ்டத்தையும் இந்தச் சிகிச்சை மூலம் ஏற்படாது.
டயாலிசிஸ் என்பது அசாதாரணமான சிகிச்சை எனவும் சொல்லப்படுதுண்டு. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் சிறுநீரகப் பாதிப்பு இரு மடங்காகப் பெருகியுள்ளது. இப்போது இந்தியாவில் 100-ல் 17 பேர் ஏதேனும் ஒரு சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்படுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதுபோல் இந்தியாவில் டயாலிசிஸ் செய்துகொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் 10-15 சதவீதம் அதிகரித்து வருகிறது.
டயாலிசிஸ் சிகிச்சை செய்யும் பாதிப்புள்ளவர்கள் பயணம் செய்ய முடியாது எனப் பொதுவாக ஒரு கட்டுக்கதை உண்டு. ஆனால், தன்னிச்சையான பயணங்களை மேற்கொள்வது, வீட்டை விட்டு நீண்ட நேரம் வெளியே செலவிடுவது கடினமாக இருக்கும். ஆனால், நம் நாட்டில் பரவலாகக் கிடைக்கும் இந்தச் சிகிச்சை முறையால் இந்தியாவுக்குள் பயணம் என்பது எளிதானதே.
டயாலிசிஸ் சிகிச்சை எடுப்பதால் சாதாரண உணவை எடுத்துக்கொள்ள முடியாது எனச் சொல்லப்படுவதுண்டு. கவனமாகத் தயாரிக்கப்பட்ட ஓர் உணவு முறையை சிகிச்சை பெறுபவர்கள் பின்பற்றலாம். குறைந்த உப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்து உணவு, மிதமான புரத உட்கொள்ளல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
டயாலிசிஸ் மூலம் வாழ்க்கையை சமாளிப்பது சாத்தியமில்லை என்ற கட்டுக்கதையும் உலவுகின்றன. கிட்டத்தட்ட இப்போது பாதிப்புள்ள அனைவரும் டயாலிசிஸ் செய்துகொள்வதற்கான தங்கள் தொடக்க நிலைப் பயத்தை கடந்துள்ளனர். இது பாதிப்புள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் திறனை கண்டிப்பகா மேம்படுத்த முடியும்.
டயாலிசிஸ் சிகிச்சையால் விளையாட்டு அல்லது உடற்பயிற்சி செய்ய முடியாது எனச் சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலான டயாலிசிஸ் நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்யலாம். நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.