

பார்வை இல்லாத அவர் கருப்புக் கண்ணாடி அணிந்து கையில் குச்சியைப் பிடித்துக்கொண்டு உற்சாகமாகச் சாலையில் நடக்கிறார். ஏதோ தட்டுப்படக் கண்ணில் அணிந்திருக்கும் கண்ணாடியின் பட்டையை லேசாகத் தடவுகிறார். அது எதிரில் இருப்பதைப் படம் பிடிக்கிறது. உடனடியாக இமேஜ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி “எதிரில் ஒருவர் ஸ்கேடிங் போர்டில் விளையாடுகிறார்” எனப் பேசுகிறது. அலுவலகத்தில் சக ஊழியரின் உடலசைவை பதிவு செய்து அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் எனச் சொல்கிறது. அடுத்து உணவகத்தில் மெனு கார்டை வாங்கித் தன் ஸ்மார்போனில் படம் பிடிக்கப் போனிலிருந்து ஒரு பெண் குரல் உணவு பட்டியலை வாசிக்கிறது.
எல்லோரும் பார்க்கலாம்
பார்வை அற்றவர்கள் இவ்வுலகைக் காணும் உணர்வை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் இது. நிஜ உலகில் நிகழும் சம்பவங்களை ஒலி வடிவில் சொல்லும் திறன் இதில் புகுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போனிலும் ஸ்மார்ட் கண்ணாடியிலும் வேலை செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. மிஷின் லேர்னிங் எனப்படும் எந்திரம் மூலம் கற்பது மற்றும் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை உருவாக்கியதே இந்தக் கண்ணாடியை அணிந்திருக்கும் சாகிப் ஷேக்தான்.
சாகிப் ஷேக் 7 வயதில் பார்வை இழந்தவர். தற்போது, அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்க்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ, இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்ய நாதெல்லா கடந்த மாதம் சாகிப்பையும் அவருடைய கண்டுபிடிப்பான ‘சீயிங் ஏஐ’-ஐயும் (SeeingAI) பெருமையாக மேடையில் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய சாகிப், “மக்கள் வாழ்வை மேம்படுத்தும் பொருள்களை உருக்க ஆசைப்பட்டேன்.
அதிலும் நம்மைச் சுற்றி நடப்பவற்றை வாய் மொழியாகச் சொல்லும் ஒரு எந்திரத்தை உருவாக்கும் கனவு கல்லூரி நாட்களிலேயே காணத் தொடங்கிவிட்டேன். சில வருடங்களுக்கு முன்புவரை இப்படி ஒரு கருவி சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களில் மட்டுமே பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம். ஆனால் செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தின் அதிவேகமாக வளர்ச்சியால் கற்பனைக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் நிதர்சனமாகி வருகின்றன. இதனால் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைக் காண உங்களைப் போல நானும் ஆர்வத்தோடு இருக்கிறேன்” என்றார்.